Home Video “குடும்பம்” (Family) – அமிதாப், ரஜினி, முன்னணி நட்சத்திரங்கள் தோன்றும் குறும்படம் பார்க்கலாமா?

“குடும்பம்” (Family) – அமிதாப், ரஜினி, முன்னணி நட்சத்திரங்கள் தோன்றும் குறும்படம் பார்க்கலாமா?

814
0
SHARE
Ad

“இல்லத்திலேயே இருங்கள்” – என்ற செய்தியை அரசாங்கம் தொடங்கி, தனிநபர்கள், நிறுவனங்கள், திரைப்பட நட்சத்திரங்கள் என பலரும் வலியுறுத்தி வரும் வேளையில், இந்தியாவின் புகழ் பெற்ற சோனி தொலைக்காட்சி நிறுவனம், இந்த செய்தியைப் பரப்பும் வண்ணம் இந்தியாவின் முன்னணி திரைப்பட நட்சத்திரங்கள் நடிக்கும் குறும்படம் ஒன்றை தயாரித்து நேற்று திங்கட்கிழமை தனது அலைவரிசைகளில் ஒளிபரப்பியது.

கல்யாண் ஜூவல்லர்ஸ் நகை நிறுவனத்தின் ஆதரவுடன் இந்தப் படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, மோகன்லால், மம்முட்டி, ரன்பீர் கபூர், பிரியங்கா சோப்ரா, அலியா பட் என இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் அனைவரும் ஒரே வீட்டில் இருப்பதுபோல் அவர்களுக்கிடையே சம்பவங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. வீட்டில் உள்ள பெரியவர் அமிதாப் பச்சனின் கறுப்புக் கண்ணாடி காணவில்லை என்பதில் தொடங்கி அதைத் தேடுவது போல் அந்த வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரையும் அந்தக் கண்ணாடி எங்கே எனக் கேட்பதுபோல் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

அந்தந்த மொழி நடிகர்கள் தங்களின் தாய்மொழியிலேயே பேசுகிறார்கள்.

இறுதியில் கண்ணாடி கிடைத்து உரையாற்றும் அமிதாப் பச்சன் இந்தக் குறும்படம் எல்லோரும் ஒரே வீட்டில் இருப்பது போல் எடுக்கப்பட்டிருந்தாலும் அனைவரும் அவரவர் வீட்டிலேயே இருந்து கொண்டே இந்தக் காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றன என விளக்கம் தருகிறார்.

வீட்டிலேயே இருங்கள் என்ற செய்தியோடு, இந்தியாவில் அமுல்படுத்தப்பட்டுள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ள அன்றாடத் தொழிலாளர்களுக்கும், திரைப்படத் தொழிலாளர்களுக்கும் அனைவரும் உதவுவோம் என்றும் அமிதாப் இந்தக் குறும்படத்தின் இறுதியில் கேட்டுக் கொள்கிறார்.

சுமார் நான்கரை நிமிடங்கள் மட்டும் ஓடும் அந்தக் குறும்படத்தைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்:

https://www.youtube.com/watch?v=FPc8mWED8NI