கோலாலம்பூர்: மை ஈவென்ட்ஸ் இன்டர்நேஷனலின் நிறுவனர் ஷாஹுல் ஹமீட் டாவூட் மனிதவள மேம்பாட்டு நிதி வாரியத்தின் (எச்ஆர்டிஎப்) தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக மலேசியாகினி செய்தி வெளியிட்டுள்ளது.
ஷாஹுல் ஹமீட்டின் நியமனம் அடுத்த வாரம் நடைமுறைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. கடந்த மாதம் மனிதவளத்துறை அமைச்சர் எம். சரவணனால், தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து நீக்கப்பட்ட இளஞ்செழியன் வேணுகோபாலுக்கு பதிலாக ஷாஹுல் நியமிக்கப்படுவார்.
ஆயினும், இது தொடர்பாக ஷாஹுல் ஹமீட் இப்போது கருத்து தெரிவிக்க மறுத்ததாகவும், தனது நியமனம் குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் முதலில் மனிதவள மேம்பாட்டு நிதி வாரியத்தால் வெளியிடப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக மலேசியாகினி தெரிவித்தது.
அதே நேரத்தில் பல வணிகக் குழுக்கள் மற்றும் தனிநபர்கள், ஷாஹுல் ஹமீட்டிற்கு வாழ்த்துகள் கூறி வரும் நிலையில், பலர் கடந்த 2016- ஆம் ஆண்டில் டாக்டர் ஜாகிர் நாயக் பங்குக் கொண்ட தொடர் சொற்பொழிவுகள் உட்பட பல உயர் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ததில் ஷாஹுல் ஹாமிட்டிற்கு உடன்பாடு இருந்ததை சுட்டிக் காட்டிக் எதிர்மறையான கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.