Home Photo News மனிதவள மேம்பாட்டு நிறுவனம் – புதிய மேம்பாடுகளுடன் கூடிய அமைப்பாக பிரதமரால் அறிமுகம்

மனிதவள மேம்பாட்டு நிறுவனம் – புதிய மேம்பாடுகளுடன் கூடிய அமைப்பாக பிரதமரால் அறிமுகம்

793
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மனிதவள மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தேசிய ஒற்றைச் சாளரம் தளத்தை பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் இன்று பிற்பகலில் கோலாலம்பூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தினார்.

மலேசியாவின் திறன் பயிற்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளை நிர்வகிக்கும், அதன் விரிவாக்கப்பட்ட பங்கிற்கு ஏற்ப இந்தப் பெயர் மாற்றம் அமைகிறது.பிரதமர் யாக்கோப் இன்று கோலாலம்பூர் மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தின் (HRD Corp) புதிய பெயர் மற்றும் முத்திரை (பிராண்ட்) அடையாளத்தை அறிமுகப்படுத்தினார். அதே நிகழ்ச்சியில், மலேசிய அரசாங்கத்தால் வழங்கப்படும் அனைத்துத் திறன் பயிற்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக, நாட்டின் முதல் தேசிய ஒற்றைச் சாளர தளமான, மலேசியத் திறன் மேம்பாட்டு (Upskill Malaysia,) தளத்தையும் அறிமுகம் செய்தார்.

முன்னர் மனிதவள மேம்பாட்டு நிதி (HRDF) என்று அழைக்கப்பட்ட இந்த நிறுவனம் 1993 இல் மனிதவள அமைச்சின் (MOHR) கீழ் நிறுவப்பட்டது. பதிவு செய்யப்பட்ட முதலாளிகளிடமிருந்து வரி வசூலிப்பதும், ஊழியர்களுக்கான பயிற்சி மற்றும் மேம்பாட்டிற்கான பயிற்சி மானியங்களை வழங்குவதும் இதன் முதன்மை நோக்கமாக இருந்தது.

#TamilSchoolmychoice

முதலாவது ஆண்டில், உற்பத்தித் துறையில் உள்ள வணிகங்களிடமிருந்து மட்டுமே ரி.ம.55 மில்லியன் வரிவசூலிக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டில், அதன் வரி வசூல் ரி.ம.673 மில்லியனைத் தாண்டி, இந்த ஆண்டு இறுதிக்குள் ரி.ம.680 மில்லியனை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணம் நாடு முழுவதும் உள்ள 65,400 க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட முதலாளிகளின், பயிற்சி மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

கடந்த 18 மாதங்களாக, கொரோனா தொற்றுநோயால் ஏற்பட்ட சமூக-பொருளாதார தாக்கத்தை குறைப்பதற்காக, அனைத்துத் தரப்பையும் சார்ந்த, மலேசிய மக்களின் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு மற்றும் வருமான உற்பத்தித் தேவைகளை ஆதரிப்பதற்காக இந்த நிறுவனம் தனது பங்கை விரிவுபடுத்தியுள்ளது. மனிதவள மேம்பாட்டு நிறுவனம் கடந்த ஜூன் 2020-இல், பென்ஜானா மனிதவள மேம்பாட்டு திட்டத்தை (PENJANA HRDF) அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் வழி ரி.ம.500 மில்லியனுக்கும் அதிகமான நிதியுடன், இன்று வரை கிட்டத்தட்ட 100,000 பங்கேற்பாளர்களுக்கு பயனளித்துள்ளது.

மேலும் e-LATiH எனும் இலவச இணையவழிக் கற்றல் தளத்தின் வழி, அதன் அனைத்துப் பயிற்சிகளையும் உள்ளடக்கிய 400,000 திறன்பயிற்சிகளைப் பொதுமக்கள் பெற்றுள்ளனர். இது தவிர மனிதவள மேம்பாட்டு நிறுவன வேலை வாய்ப்பு மையத்தையும் (HRD Corp Placement Centre (HPC)) அறிமுகம் செய்தது. இதன் வழி மலேசியாவின் முன்னணி முதலாளிகளின் ஒத்துழைப்புடன் 40,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.

அறிமுக விழாவில் பேசிய பிரதமர், “கடந்த 30 ஆண்டுகளாக மலேசியாவில் அறிவும், திறனும் கொண்ட தொழிலாளர்களை உருவாக்குவதில் மனிதவள மேம்பாட்டு நிறுவனம் முன்னணியில் உள்ளது. எனவே, மலேசியாவின் மனித மூலதனம் மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் அனைத்தும் மனிதவள அமைச்சின் கீழ் வைக்கப்பட்டு, அதன் கீழ் இயங்கும் மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இது அரசாங்கத்தின், கொரோனா தொற்றுக்குப் பிந்தைய பொருளாதார மீட்சித் திட்டங்களை, மிகவும் ஒருங்கிணைந்த, கட்டமைக்கப்பட்ட மற்றும் திறமையான திறன் மேம்பாட்டு வழியில் அரசாங்கம் கொண்டு செல்ல உதவும்” என்றார்.

அந்த வரிசையில், அரசாங்கத்தின் பல்வேறு அமைச்சு மற்றும் ஏஜென்சிகளால் வழங்கப்படும் மற்றும் நிதியளிக்கப்படும் அனைத்துத் திறன் மேம்பாடு, மறு திறன், பல் திறன் மற்றும் மாற்றுத் திறன் திட்டங்களுக்கான தேசிய ஒற்றைச் சாளர தளமான (Upskill Malaysia) திறன் பயிற்சிகளை நிர்வகிக்கும் தலைமை நிறுவனமாக HRD கார்ப் விளங்கும்.

இதுவரை, 35 திறன் பயிற்சிகளை உள்ளடக்கிய 200க்கும் மேற்பட்ட திட்டங்கள், 30 அமைச்சு மற்றும் ஏஜென்சிகளால் இந்த தளத்தில் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் நிறைய பயிற்சிகளும், முகவர்களும் இந்த பட்டியலில் சேர்க்கப்படும். 2022 இறுதிக்குள் 220,000 மலேசியர்களுக்கு இந்த இணையத் தளம் மூலம் பயிற்சி அளிக்கவும் அரசு இலக்கு கொண்டுள்ளது.

மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் அவர்கள் இந்த நிகழ்ச்சியில் உரையாற்றினார். “இந்த சந்தர்ப்பத்தில் மதிப்பிற்குரிய பிரதமர் அவர்கள் எங்களுடன் இணைந்திருப்பதும், மனித மூலதன மேம்பாட்டு முயற்சிகளில் முதன்மையாக விளங்கும் மனிதவள அமைச்சு மற்றும் மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தை அங்கீகரிப்பதும் எங்களுக்குப் பெருமை அளிக்கிறது. கடந்த 28 ஆண்டுகளில் மனிதவள மேம்பாட்டு நிறுவனம் வெற்றியுடன் தொடர்ந்து நிலைத்திருப்பது; மலேசியாவின் பொருளாதார மற்றும் மனித மூலதன வளர்ச்சித் தேவைகளை முன்னெடுத்துச் சென்று, வெற்றிகரமாக தனது முதன்மை இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் அதன் திறனுக்குச் சான்றாகும். இந்த புதிய பொறுப்பு மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தின் வரலாற்றில் சரியான நேரத்தில் அமைந்துள்ளது. ஏனெனில் இதற்கு முன்பு 3 மற்றும் 63 ஆக இருந்த அதன் வரி திட்டம், தற்போது 18 துறைகளைச் சேர்ந்த முதலாளிகளையும், 238 துணைப்பிரிவுகளையும் உள்ளடக்கி விரிவு படுத்தப்பட்டுள்ளது. ஆக அடுத்த ஐந்து ஆண்டுகளில் 6.1 மில்லியன் தொழிலாளர்களின், பயிற்சி மற்றும் தொழில் மேம்பாட்டு தேவைகளைப் பூர்த்தி செய்ய மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தால் முடியும்” என்றும் சரவணன் தனதுரையில் கூறினார்.

மனிதவள மேம்பாட்டு நிறுவனம் கடந்த ஆண்டில் பல திட்டங்கள் மற்றும் கூட்டு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அண்மையில், முன்னாள் கைதிகளுக்குப் பயிற்சி மற்றும் வேலை வழங்கும் “கைதிகள் மறுவாழ்வு” (SCOPE) திட்டத்தை, மலேசிய சிறைச்சாலைத் துறையுடன் (JPM) இணைந்து அறிமுகம் செய்தது. விரைவில், மூத்த குடிமக்கள், தனித்து வாழும் தாய்மார்கள் மற்றும் பி40 பெண்கள் தவிர மாற்றுத் திறனாளிகளுக்கும் இதே போன்ற திட்டம் அறிமுகம் செய்யப்படும்.

HRD கார்ப் குறித்த விவரங்கள்:

மனிதவள மேம்பாட்டு நிறுவனம் (HRD Corp) 1993 இல் மனிதவள மேம்பாட்டு கவுன்சிலாக நிறுவப்பட்டது. அதன்பின் மனிதவள மேம்பாடு பெர்ஹாட் சட்டம் 2001 மூலம் மனிதவள மேம்பாடு பெர்ஹாட் என மாற்றம் கண்டது.

மனிதவள அமைச்சின் கீழ் உள்ள அமைப்பு என்ற வகையில், முக்கிய தொழில்துறைகளிடமிருந்து வரி வசூலிப்பதற்கும், பதிவுசெய்யப்பட்ட முதலாளிகளுக்கு மனிதவள மேம்பாட்டு நிதி (HRDF) மூலம் பயிற்சி மானியங்களை வழங்குவதற்கும் பொறுப்பு வகிக்கிறது.

ஏப்ரல் 2021இல், மனிதவள மேம்பாட்டு நிதி (HRDF), மனிதவள மேம்பாட்டு நிறுவனம் (HRD Corp) என மாற்றம் கண்டது. பெயர் மாற்றம் என்பது அதன் புதிய பொறுப்புகள், இலக்குகள் மற்றும் சேவையின் பிரதிபலிப்பாகும். அனைத்து முதலாளிகள் மற்றும் தனிநபர்களுக்கு, திறன் மேம்பாடு மற்றும் மறுசீரமைப்பு முயற்சிகளை விரிவுபடுத்துதல்; மேலும் தேவைப்படும் அனைத்து சமூகங்களுக்கும் வருமானம் ஈட்டும் வாய்ப்புகளை வழங்குதல் இதில் அடங்கும்.

இந்த மாற்றம் மலேசியாவின் திறன் மேம்பாட்டு இலக்குகளை நீண்ட காலத்திற்குக் கொண்டு செல்லும், மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தின் இலட்சியத்திற்கு ஏற்ப அமைந்துள்ளது.

கூடுதல் தகவலுக்கு, கீழ்க்காணும் வலைத்தளத்தைப் பார்வையிடவும் www.hrdcorp.gov.my.