Home One Line P1 மலேசிய அரசியலில் சாதாரண நிலையிலிருந்து கட்சித் தலைவராக உயர்ந்த எம்.ஜி. பண்டிதன்

மலேசிய அரசியலில் சாதாரண நிலையிலிருந்து கட்சித் தலைவராக உயர்ந்த எம்.ஜி. பண்டிதன்

941
0
SHARE
Ad

(ஏப்ரல் 30-ஆம் தேதி ஐபிப் கட்சியின் தோற்றுநரும் தலைவருமான அமரர் டான்ஸ்ரீ எம்.ஜி.பண்டிதன் அவர்களின் நினைவுநாள். அதனை முன்னிட்டு நக்கீரன் எழுதிய இந்த சிறப்புக் கட்டுரை பதிவேற்றம் காண்கிறது)

1990-ஆம் ஆண்டில் நாடு எதிர்கொண்ட 8-ஆவது பொதுத் தேர்தலில் அப்போதைய ஆளும் தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு எதிராகக் கூட்டணி அமைக்கப்பட்டபோது அதில் முக்கியப் பங்காற்றிய இந்தியத் தலைவர் டான்ஸ்ரீ எம்.ஜி. பண்டிதன்.

அந்த காலக்கட்டத்தில் பாஸ், செமாங்காட்-46 உள்ளிட்ட மலாய்க் கட்சியினரோடு ஜசெகவும் இணைந்த கூட்டணியில் சேர்ந்த பண்டிதன், அடுத்த 1995 பொதுத் தேர்தலில் தன் போக்கை மறு பரிசீலனை செய்ய ஆரம்பித்தார்.

#TamilSchoolmychoice

தேசிய முன்னணியில் இந்திய வாக்காளர்களைக் கவரும் பெருந்தலைவராக துன் சாமிவேலு கருதப்பட்ட நிலையில், அவருக்கு இணையாக இல்லாவிட்டாலும் எதிரணியின் பக்கம் ஓரளவுக்கு இந்திய வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்கும் பேச்சாற்றல் மிக்க தலைவராக செமாங்காட்-46 தலைவர் துங்கு ரசாலி, பாஸ் தலைவர் நிக் அஸிஸ் போன்ற தலைவர்கள் மத்தியில் பண்டிதன் பார்க்கப்பட்டார்.

இருந்தபோதும், 1990 பொதுத் தேர்தலில் தோல்வியை எதிர்கொண்டதால், துவண்டுவிட்ட தொண்டர்களை இனியும் தக்க வைக்க வேண்டுமென்றால் அரசியலில் அணி மாறி, ஆளும் தேசிய முன்னணி பக்கம்தான் செல்ல வேண்டும் என்ற கட்டாயத்திற்கு வந்தார் பண்டிதன்.

அதற்கேற்ப, தேசிய முன்னணி – அம்னோ தலைவராக அப்போதைய தலைவராக இருந்த துன் மகாதீரும் பண்டிதனின் செல்வாக்கை உணர்ந்து அவர் தோற்றுவித்த ஐபிஎப் கட்சியை தேசிய முன்னணியின் சகோதரத்துவ கட்சியாக ஏற்றுக் கொள்ள முன்வந்தார். அனைத்து நிலைகளிலும் ஆதரவும் தந்தார்.

தேசிய முன்னணி பக்கம் சாய்ந்த பண்டிதனை அம்னோவும் மசீச-வும் ஏற்றுக் கொள்ள இசைந்தாலும் மஇகா அடியோடு மறுத்ததால், பண்டிதன் ஏமாற்றமடைந்தார். எனினும் காலம் ஒருநாள் கனியும் என்று பொறுமை காத்தார்.

எனினும் அவரது வாழ்நாளில் தேசிய முன்னணியோடு ஐபிஎப் இணையும் அந்த நல்ல நாள் வாய்க்கவே இல்லை. இன்றுவரையும் நடைபெறாமல் இருக்கும் அந்த இணைப்பு இனியும் நிகழுமா என்பதும் சந்தேகமே!

மஇகா அரசியலில் பண்டிதனின் தொடக்கம்

சாமிவேலுவும் பண்டிதனும் மஇகா-வில் இணைந்து படைத்த இனிய அத்தியாயம் தொடர்ந்திருந்தால், உண்மையில், அது மலேசிய இந்திய சமுதாயத்திற்கு அரசியல் ரீதியில் வலிமை சேர்த்திருக்கும். அந்த வகையில் சிந்திக்காமல், இருவருமே தம்மை முன்னிலைப்படுத்த விரும்பியதால் சமுதாயம் ஒரு பிளவையும் பின்னடைவையும் சந்தித்தது.

சாதாரண மாநகரசபைத் தொழிலாளர்கள் நிறைந்திருந்த சன்பெங் பகுதியில் இருந்த அரசாங்கக் குடியிருப்பில் பிறந்து வளர்ந்த பண்டிதன், தன்னைத் தானே செப்பம் செய்து கொண்டவர். முதலில் அவர் தமிழ் நேசன் பத்திரிகையின் நிருபராக, பத்திரிகையாளராக சமுதாயத்தில் வலம் வந்தார்.

குடும்ப பாரம்பரியமோ அரசியல் செல்வாக்கோ இன்றி மஇகா லொக்யூ சன்பெங் கிளையின் தலைவராக மஇகா-வில் நுழைந்த பண்டிதன், கடுமையான உழைப்புக்கும் திறமையான பேச்சாற்றலுக்கும் சொந்தக்காரராக விளங்கியதால், மலேசிய இந்தியர்களின் தாய் அரசியல் இயக்கமான மஇகாவில், 1977-இல்  மஇகா மத்திய செயலவை உறுப்பினராகவும் 1981-இல் தேசிய உதவித் தலைவராகவும் உயர முடிந்தது; அடிமட்டத் தொண்டர்களின் ஆதரவு அலை நீடித்ததால் தொடர்ந்து மூன்று முறை அப்பதவியில் தொடர்ந்திட பண்டிதனால் முடிந்தது.

தொடர்ந்து நாட்டின் 7-ஆவது பொதுத்தேர்தல் மூலம் 1986-இல் தாப்பா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு பெற்று, அந்த வர்த்தக, தொழில் துறை அமைச்சின் நாடாளுமன்ற செயலராகவும் பொறுப்பு வகித்த பண்டிதனின் வளர்ச்சி, மஇகா தேசிய வட்டத்தில் பலரின் கண்களை உறுத்தியது.

ஒரு கடைநிலை ஊழியரின் மகனாக நலிந்த குடும்பத்தில் பிறந்த பண்டிதன் அரசியலில் அடைந்த உச்சம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

ஒரு கட்டத்தில் சாமிவேலுவுக்கும் அவருக்கும் இடையில் ஏற்பட்ட பிணக்கும்,  அவர்மீது கட்சியின் தேசிய தலைமை எடுத்த நடவடிக்கையும் அதற்கு மறுவினையாக பண்டிதன் மேற்கொண்ட பிணப்பெட்டி போராட்டமும், பண்டிதனை மஇகாவில் இருந்து வெளியேற்றக் காரணங்களாக அமைந்தன.

ஐபிஎப் கட்சியைத் தோற்றுவித்தார்

அதன் பின்னர் பண்டிதன் தனக்கென தனிப்பாதையை மலேசிய அரசியலில் வடிவமைத்தார். இந்தியர் முன்னேற்ற முன்னணி (ஐபிஎஃப்) என்ற பெயரில் தனிக் கட்சி கண்ட பண்டிதனின் அரசியல் கூட்டமென்றால், ஆயிரக் கணக்கில் இந்தியர்கள் திரளும் அளவிற்கு ஆளுமையும் பேச்சாற்றலும் மிக்கவராகப் பரிணமித்தார்.

பண்டிதனின் அரசியல் பயணத்தில் ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். துங்கு அப்துல் ரகுமான் பல்கலைக்கழகத்தை உருவாக்கும் முனைப்பில் மும்முரமாக மசீச-வின் அந்நாளையத் தலைவர் துன் லிங் லியோங் சிக் ஈடுபட்டிருந்த வேளையில், ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த பண்டிதன், லிங் லியோங்கை அழைத்து இது பல்கலைக்கழக நிதி அன்பளிப்புக் கூட்டம் என்று அறிவித்தார். அந்தக் கூட்டத்தில் திரண்ட நிதி, மேடையிலேயே எண்ணப்பட்டு லிங் லியோங்கிடம் கையளிக்கப்பட்டது.

ஆண்கள், பெண்கள், முதியோர், சிறார் என அரங்கு முழுவதும் திரண்டிருந்த இந்தியர்களைப் பார்த்து மனம் நெகிழ்ந்த லிங் லியோங், பண்டிதனுக்கு நன்றி தெரிவித்தார்.

அதற்கு ஏற்புரை வழங்கும் விதமாகப் பேசிய பண்டிதன் “இந்த நன்றியை, பல்கலைக்கழகம் செயல்பட ஆரம்பித்ததும் இந்திய மாணவர்கள் கல்வி பயில ஓரளவு வாய்ப்பளித்தால் நல்லது. அதற்காக இப்பொழுதே, இந்திய சமுதாயத்தின் சார்பில் நன்றியை முன்னதாகவேத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். இதை, லிங் லியோங்கும் தொடர்ந்து நினைவில் கொண்டிருந்தார் என்பது இன்னும் சிறப்பு.

ஐபிஎப் கட்சியின் தலைவராக பல்லாண்டுகள் அந்தக் கட்சியை வழிநடத்தி அடுத்து வந்த பொதுத் தேர்தல்களில் தேசிய முன்னணியின் வெற்றிக்காக உழைத்தார் பண்டிதன்.

தேசிய அரசியலில் பெரும்புயலை உருவாக்கிய 12-ஆவது பொதுத் தேர்தல் நடைபெற்றபின் அடுத்த இரு மாதங்களில் (2008, ஏப்ரல் 30) மறைவெய்தினார் பண்டிதன்.

தனது இறுதிக் காலத்தில் ஐபிஎப் கட்சியின் ஆண்டுக் கூட்டத்திற்கு சாமிவேலுவை அவர் வரவழைத்து சிறப்பு செய்ததும், அதைத் தொடர்ந்து சாமிவேலு மருத்துவமனைக்கு வருகை தந்து பண்டிதனைச் சந்தித்ததும், ஒரு புறம் மனிதாபிமான செயல்களாகவும், அரசியல் நாகரிப் பண்பாகவும் பார்க்கப்பட்டாலும், இன்னொரு புறத்தில் பண்டிதனின் ஆதரவாளர்களிடையே சர்ச்சைகளையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது என்பதையும் மறுப்பதற்கில்லை.

பண்டிதனின் மறைவுக்குப் பின் மூன்று பிரிவுகளாக பிளவு கண்டது ஐபிஎஃப். அவரது மறைவுக்குப் பின்னர் சிறிது காலம் அவரது துணைவியார் ஜெயஸ்ரீ தலைமையில் இயங்கிய அந்தக் கட்சி கடந்த சில ஆண்டுகளாக டத்தோ சம்பந்தன் தலைமையில் இயங்கி வந்தது. கடந்த ஆண்டில் சம்பந்தனும் மறைந்துவிட அடுத்தக் கட்டப் பயணத்தில் எந்தத் திசையில் செல்வது என்ற கேள்விக் குறியோடு நிலைகுத்தி நிற்கிறது அந்தக் கட்சி.

பண்டிதன் குறித்து எத்தனையோ சர்ச்சைகள் இருக்கலாம். பலர் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருக்கலாம். எனினும், மலேசிய இந்திய அரசியல் வரலாறு என்று எழுதப்படும்போது அதில் தவிர்க்க முடியாத சில பக்கங்களை டான்ஸ்ரீ எம்.ஜி.பண்டிதனின் பங்களிப்பு நிச்சயம் கொண்டிருக்கும்.

-நக்கீரன்