Home Photo News எம்.ஜி.பண்டிதன் : ஒரு பத்திரிகையாளர், அரசியல் கட்சியின் தலைவரான கதை

எம்.ஜி.பண்டிதன் : ஒரு பத்திரிகையாளர், அரசியல் கட்சியின் தலைவரான கதை

489
0
SHARE
Ad

(ஐபிஎஃப் கட்சியின் தோற்றுநரும் அதன் முதல் தலைவருமான டான்ஸ்ரீ எம்.ஜி.பண்டிதன் 30 ஏப்ரல் 2008-ஆம் நாள் மறைந்தார். அவரின் நினைவு நாள் சிறப்புக் கட்டுரை எழுதியவர் இரா.முத்தரசன்)

  • மஇகாவில் இருந்து விலக்கப்பட்ட பின்னர் மக்கள் சந்திப்புக் கூட்டங்களுக்கு பண்டிதன் சூட்டிய பெயர் ‘நீதி கேட்டு நெடும்பயணம்’
  • தமிழ் ஓசை நாளிதழால் வளர்ந்த பண்டிதன். பண்டிதனால் வளர்ந்த தமிழ் ஓசை!
  • இன்றுவரை தேசிய முன்னணியில் அதிகாரபூர்வமாக இணைய முடியாத திரிசங்கு நிலையில் ஐபிஎஃப்!
  • ஜபிஎஃப் கட்சி அடுத்து செல்லும் திசையென்ன?

துன் மகாதீர் பிரதமராகவும், தேசிய முன்னணி தலைவராகவும் இருந்த 1990-ஆம் ஆண்டுகளின் காலகட்டம். தேசிய முன்னணியின் உச்சமன்றக் கூட்டம் நடைபெறுகிறது. மகாதீர் ஒரு பரிந்துரையை முன்வைக்கிறார். ஐபிஎஃப் கட்சியை தேசிய முன்னணி கூட்டணியில் அதிகாரபூர்வமாக இணைத்துக் கொள்வோம் என்ற பரிந்துரைதான் அது.

ஐபிஎஃப் கட்சியின் தலைவராக அப்போது இருந்தவர் டான்ஸ்ரீ எம்.ஜி.பண்டிதன்.

#TamilSchoolmychoice

அந்த சமயத்தில் தேசிய முன்னணியில் 13 கட்சிகள் அங்கம் பெற்றிருந்தன. தேசிய முன்னணியில் ஒரு கட்சி அதிகாரபூர்வமாக இணைத்துக் கொள்ளப்பட வேண்டுமானால் மற்ற எல்லாக் கட்சிகளும் ஒருமித்த ஆதரவைத் தரவேண்டும். ஒரு கட்சி ஆட்சேபித்தாலும் அந்தக் கட்சி தேசிய முன்னணியில் இணைய முடியாது என்ற நடைமுறை கடுமையாக அமுலாக்கம் செய்யப்பட்டது.

ஐபிஎஃப் கட்சியை தேசிய முன்னணிக்குள் அனுமதிக்கும் மகாதீரின் பரிந்துரையைத் தொடர்ந்து மஇகா தேசியத் தலைவர் துன் ச.சாமிவேலு எழுந்தார். “மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களே! ஐபிஎஃப் கட்சியை தேசிய முன்னணியில் இணைத்துக் கொள்ளும் முடிவை நீங்கள் எடுத்தால், மஇகா தேசிய முன்னணியில் இருந்து விலகி, வெளியே நிற்போம். ஐபிஎஃப் தேசிய முன்னணியின் ஓர் அங்கமாக இருக்கும்வரை நாங்கள் உள்ளே வர மாட்டோம். ஆனால் தேசிய முன்னணிக்கு ஆதரவாக இருப்போம்” என்று கூறினார் சாமிவேலு.

மகாதீர் ஐபிஎஃப் கட்சியை தேசிய முன்னணியில் இணைக்கும் முடிவை ஒத்திவைத்தார். அதன் பின்னர் இன்று வரை ஐபிஎஃப் கட்சிக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படவே இல்லை. அதற்கானப் பரிந்துரை தேசிய முன்னணி உச்சமன்றக் கூட்டங்களில் அதற்குப் பிறகு விவாதிக்கப்பட்டதாகவும் தெரியவில்லை.

எனினும் இன்னும் தேசிய முன்னணிக்கு விசுவாசமாக இயங்கி வருகிறது ஐபிஎஃப். தேசிய முன்னணிக்கு ஆதரவு தரும் கட்சிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. ஆட்சியில் தேசிய முன்னணி இருந்தவரை இந்த அணுகுமுறை சரி! இப்போது தேசிய முன்னணியே ஆட்சியில் இல்லாத நிலையில்…?

அன்வார் இப்ராகிமின் ஒற்றுமை அரசாங்கம் தேசிய முன்னணியையும் அதன் உறுப்பியக் கட்சிகளையும் தனது செயல்நடவடிக்கைக் குழுவில் இணைத்துக் கொண்டுள்ளதே தவிர, அதன் ஆதரவுக் கட்சிகளைக் கண்டு கொள்வதே இல்லை.

ஒற்றுமை அரசாங்கம் இப்படியே அடுத்த 5 வருடங்களுக்கு நீடித்தால்…? ஐபிஎஃப் நிலைமை என்ன?

15-வது பொதுத் தேர்தலில் வெற்றி பெற எள்ளளவும் வாய்ப்பில்லை என முடிவு செய்யப்பட்ட ஜெலுத்தோங் நாடாளுமன்றத் தொகுதியைத்தான் தேசிய முன்னணி ஐபிஎஃப் கட்சிக்கு ஒதுக்கியது.

வரும் 6 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் தேசிய முன்னணியின் பாரம்பரிய உறுப்பியக் கட்சிகளே தொகுதிகள் பெற தடுமாறிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஐபிஎஃப் போன்ற ஆதரவுக் கட்சிகளுக்கு தேசிய முன்னணி கண்டிப்பாக தொகுதிகளை வழங்க வாய்ப்பில்லை.

இப்படியாக தேசிய முன்னணியில் அதிகாரபூர்வமாக இணைய முடியாமலும் – தனிக்கட்சியாக வளர்வதற்கான – இந்தியர்களின் செல்வாக்கைப் பெறுவதற்கான – தலைமைத்துவ ஆற்றல் இல்லாத தலைவர்களை பண்டிதனுக்குப் பின்னர் கொண்டிருந்ததாலும், இன்றைய அரசியல் சூழலில் செல்லும் திசையறியாமல், வழிகாட்டலின்றி, தடுமாறி நிற்கிறது ஐபிஎஃப்.

ஆனால், அந்தக் கட்சிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க வரலாற்றுப் பின்புலம் உண்டு. தமிழ் நேசன் நாளிதழில் சாதாரண பத்திரிகையாளராக இருந்த எம்.ஞானபண்டிதன், எம்.ஜி.பண்டிதனாக மஇகாவில் அரசியல் வளர்ச்சி பெற்று, தனி மனிதனாகப் போராடி,  நாடெங்கும் அலைந்து திரிந்து ஆதரவாளர்களைத் திரட்டி உருவாக்கிய கட்சி ஐபிஎஃப்.

எம்.ஜி.பண்டிதனின் நினைவு நாளில் அந்தக் கட்சி தொடங்கப்பட்ட பின்னணியைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்!

மஇகாவில் இருந்து விலக்கப்பட்டாலும், உடனடியாக தனிக் கட்சித் தொடங்காத பண்டிதன்

1 டிசம்பர் 1988-இல் – மஇகா மத்திய செயற்குழுவால் – பண்டிதன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பிணப்பெட்டியை மஇகா தலைமையகக் கட்டடத்திற்குள் கொண்டு வந்து சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டார் என்பதுதான் அவர் மீதான மையக் குற்றச்சாட்டு. ஆனால் அதன் பின்னணியில் – இன்றைக்குக் காலம் கடந்து விட்ட காரணத்தால் – விவாதிக்கத் தேவையற்ற – பல அரசியல் காரணங்கள் அந்த முடிவுக்குள் புதைந்து கிடந்தன.

மஇகாவில் இருந்து விலக்கப்பட்டதைத் தொடர்ந்து தொடர்ந்து நாடு முழுக்க ‘நீதி கேட்டு நெடும்பயணம்’ எனும் தலைப்பில் மக்கள் சந்திப்புக் கூட்டங்களை நடத்தினார் பண்டிதன். அந்த ஏற்பாடுகளைச் செய்தது அவருக்கு ஆதரவாக இயங்கிய தமிழர் நல நற்பணி மன்றங்கள்.

ஏறத்தாழ ஒவ்வொரு வாரமும்  ஏதாவது ஓர் ஊரில் நீதி கேட்டு நெடும்பயணக் கூட்டம் நடைபெறும். பொதுவாக இலவசக் கலைநிகழ்ச்சிகளும் அந்தக் கூட்டங்களோடு நடத்தப்பட்டன. எல்லா நிகழ்ச்சிகளிலும் பண்டிதன் சுமார் அரை மணி நேரம் முதல் ஒரு மணி வரை தன் அரசியல் நிலைப்பாட்டை எடுத்துக் கூறி உரையாற்றுவார். ஆரவாரக் கைத்தட்டல்களைப் பெறுவார்.

ஒவ்வொரு கூட்டத்திற்கும் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் வரை திரண்டனர். எந்தவித அரசியல் கட்சிப் பின்னணியும் இல்லாமல் அத்தகைய பிரமாண்டக் கூட்டங்களை – தனிமனிதனாக – அதற்கு  முன்னரும் பின்னரும் இந்தியர்கள் யாரும் திரட்டிக் காட்டியதில்லை. பண்டிதன் மட்டுமே அந்த சாதனையைப் புரிந்தார்.

ஒவ்வொரு வாரமும், அந்த நிகழ்ச்சிகளுக்கு முன்னதாக, நிகழ்ச்சிகள் நடைபெறும் விவரங்கள் அமரர் இளைய தமிழவேள் ஆதி.குமணன் ஆசிரியராக இருந்து நடத்திய தமிழ் ஓசை நாளிதழில் விளம்பரங்களாக வெளியிடப்பட்டன. நிகழ்ச்சி முடிந்ததும் அந்த நிகழ்ச்சி குறித்த செய்திகள் விரிவாகப் படங்களுடன் வெளியிடப்பட்டன.

இணையம் இல்லாத – கைப்பேசிகள் அறியாத – காலம் அது! தமிழ் நாளிதழ்களே இந்திய சமூகத்தின் தொடர்புப் பாலமாகவும், குரலாகவும் இயங்கின. பண்டிதன் நடத்திய சந்திப்புக் கூட்டங்கள் தமிழ் ஓசை மூலமாக எளிதில் மக்களை சென்றடைந்தன.

இதன் காரணமாக, பண்டிதனின் பெரும்பான்மையான ஆதரவாளர்கள் தமிழ் ஓசையை வாங்கி ஆதரவு தரத் தொடங்கினர். நீண்டகாலமாக, முன்னணியில் இருந்த தமிழ் நேசனைப் பின்னுக்குத் தள்ளி அதிகம் விற்பனையாகும் தமிழ் நாளிதழாக தமிழ் ஓசை உயர்ந்ததற்கு பண்டிதனின் அரசியல் போராட்டமும் ஒரு காரணம்.

பண்டிதனின் அரசியல் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்ததும், ஆதி.குமணனின் ஆதரவு எழுத்துப் படைப்புகளும், தமிழ் ஓசை, மலேசிய நண்பன், மக்கள் ஓசை என வரிசையாக அவரால் நடத்தப்பட்ட நாளிதழ்களும்தான்!

1989 தேசியத் தலைவர் தேர்தலில் சுப்ரா வெற்றி பெற்றிருந்தால்…

மஇகாவில் இருந்து விலக்கப்பட்ட உடனேயே பண்டிதன் தனிக் கட்சியைத் தொடங்கவில்லை. அடுத்த சில மாதங்கள் நீதிகேட்டு நெடும்பயணம் சந்திப்புக் கூட்டங்களை நடத்தி தன் ஆதரவுத் தளத்தை விரிவுபடுத்திக் கொண்டார்.

1989ஆம் ஆண்டில் மஇகா தேசியத் தலைவருக்கான போட்டி நடைபெற்றபோது கட்சியில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளைக் காரணம் காட்டி சாமிவேலுவுக்கு எதிராகப் போட்டியில் குதித்தார் டான்ஸ்ரீ சுப்ரா.

சுப்ராவுக்கு ஆதரவாக நாடு முழுக்க பிரச்சாரம் செய்தார் பண்டிதன். தலைநகர் பிரிக்பீல்ட்ஸ் சாரணியர் மண்டபத்தில் நடைபெற்ற சுப்ராவின் முதல் பிரச்சாரக் கூட்டத்தில் தனது ஆதரவாளர்களுடன் கலந்து கொண்டு சுப்ராவுக்குத் தனது பகிரங்க ஆதரவைத் தெரிவித்தார் பண்டிதன்.

அப்போது அவர் கட்சியில் இருந்து விலக்கப்பட்டிருந்தார். இருந்தாலும் நாடு முழுமையிலும் மஇகா கிளைத் தலைவர்களைச் சந்தித்து சுப்ராவுக்காக ஆதரவு திரட்டினார்.

தேசியத் தலைவராக வெற்றி பெற்றால் பண்டிதனை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வருவேன் – சாமிவேலுவால் மூடப்பட்ட மஇகா கிளைகளுக்கு  மீண்டும் உயிரூட்டுவேன் – என சுப்ராவும் பகிரங்கமாக அறிவித்தார்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அந்தத் தேர்தலில் சுப்ரா, சாமிவேலுவிடம் தோல்வி அடைந்தார். பண்டிதனுக்கு, மஇகாவில் மீண்டும் இணையக் கிடைத்திருக்கக்கூடிய இறுதி வாய்ப்பும் நிறைவேறாமல் போக, வேறு வழியின்றி ஐபிஎஃப் என்ற புதிய கட்சியைத் தோற்றுவித்தார் பண்டிதன்.

அவர் தனிக்கட்சியைத் தொடங்காமல், தன் ஆதரவாளர்களோடு ஜசெக, பிகேஆர் போன்ற கட்சிகளில் இணைந்திருந்தால்…

பண்டிதனின் மரணத் தறுவாயில் அவரை மீண்டும் கட்டியணைத்த சாமிவேலு, முன்பே அதனைச் செய்து பண்டிதனை மீண்டும் மஇகாவுக்குள் கொண்டு வந்திருந்தால்…

தேசிய முன்னணிதான் எப்போதும் ஆட்சியில் இருக்கும் என்ற சிந்தனையை மாற்றி, மாற்று அரசியலுக்கும் வாய்ப்பிருக்கிறது – என 2008 பொதுத் தேர்தலின்போது  பக்காத்தான் ராயாட் கூட்டணியோடு பண்டிதன் தன் ஐபிஎஃப் கட்சியை இணைத்திருந்தால்…

பண்டிதனுக்குப் பின் வந்த தலைவர்கள் எந்த நிலையிலும் ஐபிஎஃப் கட்சியை தேசிய முன்னணிக்குத் துதிபாடும் அரசியல் இயக்கமாக வைத்திராமல் துணிந்து – பக்காத்தான் ராயாட் – அல்லது பக்காத்தான் ஹாரப்பான் – என மடைமாற்றம் செய்திருந்தால்…

இவ்வாறான சுவாரசியமான – விவாதங்களுக்குரிய – கேள்விகளைக் கொண்டிருந்த பண்டிதனின் அரசியல் வாழ்க்கைப் பயணம் – அவரின் உடல்நலக் குறைவால், 2008-ஆம் ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதி நிறைவு கண்டது.

-இரா.முத்தரசன்