சென்னை : நேற்று புதன்கிழமை (மே 3) காலமான பிரபல நகைச்சுவை நடிகரும் இயக்குநருமான மனோபாலா நல்லுடலுக்கு தமிழ் திரையுலகினர் திரண்டு வந்து இறுதி மரியாதை செலுத்தினர்.
நடிகர் விஜய் நேரில் வந்து மனோபாலாவுக்கு இறுதி மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.
தமிழக முதல்வர் ஸ்டாலினும் மனோபாலா மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.
உடல்நலக்குறைவால் காலமான மனோபாலாவுக்கு வயது 69. கல்லீரல் பாதிப்பால் கடந்த 15 நாட்களாகச் சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சோகத்தை ஏற்படுத்திய இவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
“என் மாணவன் மனோபாலா மறைவு எனக்கும் எங்கள் தமிழ்த்திரை உலகுக்கும் ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும்!” என இயக்குநர் பாரதி ராஜா இரங்கல் தெரிவித்தார்.
நடிகர் கமல்ஹாசன், “இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட இனிய நண்பர் மனோபாலா மறைந்த செய்தி பெரும் துயரத்தை அளிக்கிறது. சினிமாவின் ஆர்வலர் என்பதே அவரது முதன்மையான அடையாளமாக இருந்தது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
ராதிகா சரத்குமாரும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். “நான் மிகுந்த மனவருத்தத்தில் இருக்கிறேன். இன்று காலைதான் போன் செய்து அவரது உடல்நிலைக் குறித்து விசாரித்தேன். அவரைப் பார்க்கவும் நினைத்திருந்தேன். தொழில் ரீதியாகவும் தனிப்பட்ட அளவிலும் அவருடன் பல விஷயங்களைப் பகிர்ந்துக் கொண்டிருக்கிறேன். நாங்கள் இருவரும் இணைந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டோம். சிரித்து, சண்டையிட்டு, ஒன்றாகச் சாப்பிட்டு பல விஷயங்கள் குறித்து உரையாடி இருக்கிறோம். அவர் ஒரு திறமையான நபர். கண்டிப்பாக அவரை நான் மிஸ் செய்வேன்” என்று ராதிகா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இயக்குநராக பல வெற்றிப் படங்களைத் தந்தவர் மனோபாலா. சிறு சிறு வேடங்களில், நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கியவர் பின்னர் இயக்குநர் தொழிலை விட்டு விட்டு முழு நேர நடிகராக மாறிவிட்டார்.