Home Photo News 1977-இல் எம்.ஜி. பண்டிதன் முதன் முதலாக ம.இ.கா. மத்திய செயலவை உறுப்பினரானபோது…

1977-இல் எம்.ஜி. பண்டிதன் முதன் முதலாக ம.இ.கா. மத்திய செயலவை உறுப்பினரானபோது…

854
0
SHARE
Ad

(ஐபிஎப் கட்சியின் தோற்றுநரும் முன்னாள் தேசியத் தலைவருமான டான்ஸ்ரீ எம்.ஜி.பண்டிதன் அவர்களின் பிறந்த நாள் (ஏப்ரல் 3, 1940). மஇகாவில் தொடங்கிய அவரின் அரசியல் பயணம் நீண்டகால போராட்டங்களைக் கொண்டதாகும். 1977இல் எம்.ஜி. பண்டிதன் முதன் முதலாக மஇகா மத்திய செயலவைப் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னணி விவரங்களை தன் பார்வையில் விவரிக்கிறார் இரா.முத்தரசன்)

1977ஆம் ஆண்டில் ம.இ.கா.  துணைத் தலைவர் பதவிக்காக நடைபெற்ற போட்டி அக்கட்சியின் வரலாற்றில் பல திருப்பங்களை ஏற்படுத்திய மிக முக்கிய சம்பவமாகும்.

ஜனவரி 1976ஆம் ஆண்டில் அப்போதைய துணைத் தலைவர் டான்ஸ்ரீ ஆதி. நாகப்பன் மாரடைப்பால் அகால மரணமடைந்தார்.

#TamilSchoolmychoice

தேசியத் தலைவராக இருந்த டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் ம.இ.கா. மத்திய செயற்குழு மூலம் மூன்று உதவித் தலைவர்களிலிருந்து ஒருவரை இடைக்காலத் துணைத் தலைவராக நியமிக்கலாம் என ம.இ.கா. அரசியல் சாசனம் வரையறுத்திருந்தது.

ஆனால், அந்த முடிவை செய்ய மாணிக்கா ஒப்புக் கொள்ளவில்லை. மாறாக, 1977 கட்சித் தேர்தல்களின் மூலமே அடுத்த துணைத் தலைவர், பேராளர்களால் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுவார் என அறிவித்தார்.

அப்போது ம.இ.கா.வின் மூன்று உதவித் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் (துன்) ச. சாமிவேலு.

1975 கட்சித் தேர்தல்களில் முதலாவது தேசிய உதவித் தலைவராக அதிக வாக்குகளில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

அப்போதெல்லாம் ம.இ.கா. சட்டவிதிகளின்படி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் கட்சித் தேர்தல்கள் நடைபெறும். இப்போது உள்ளதைப் போன்று மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அல்ல!

எனவே,  சாமிவேலுவை இடைக்கால தேசியத்தலைவராக நியமிக்க வேண்டும் என சாமிவேலுவின் ஆதரவாளர்கள் மாணிக்காவுக்கு நெருக்குதல் தந்தனர். மாணிக்கவோ அந்த நெருக்குதல்களுக்கு இணங்கவில்லை.

ஏதோ சில காரணங்களால் நேரடி கட்சித் தேர்தல்கள் மூலம் துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் எனக் கூறிவிட்டார்.

1977 மத்தியில் நடைபெற்ற  கட்சித் தேர்தல்களில் துணைத் தலைவர் பதவிக்கு சாமிவேலுவும் (டான்ஸ்ரீ) சி. சுப்பிரமணியமும் போட்டியிட்டனர்.

எம்.ஜி. பண்டிதனின் அரசியல் நுழைவு

அந்தக் காலகட்டத்தில் மாநில ம.இ.கா. தேர்தல்களில் மத்திய செயற்குழு உறுப்பினர் ஒருவர் மாநிலத்தைப் பிரதிநிதித்துத் தேர்ந்தெடுக்கப்படுவார்.

1977ஆம் கட்சித் தேர்தல்கள் வரை சிலாங்கூர் ம.இ.கா.வின் மாநிலச் செயலாளராக சாமிவேலு பதவி வகித்து வந்தார்.

சிலாங்கூர் மாநிலத் தலைவராக  டான்ஸ்ரீ என்.எஸ். மணியம் பதவி வகித்தார்.

1977 சிலாங்கூர் மாநில ம.இ.கா. தேர்தல்களில், டான்ஸ்ரீ என்.எஸ்.மணியம் ஒதுங்கிக் கொள்ள –  தலைவர் பதவிக்கு சாமிவேலு போட்டியிட்டார். அவரை எதிர்த்து அப்போது சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினராகவும் ஆட்சிக் குழு உறுப்பினராகவும்  இருந்த டத்தோ வி.எல். காந்தன் போட்டியிட்டார்.

அந்த சிலாங்கூர் மாநிலத் தேர்தலில்  மாநிலத்திற்கான மத்தியச் செயற்குழு உறுப்பினராக தனது அணியில் எம்.ஞானபண்டிதன் என்ற இளைஞரை சாமிவேலு நிறுத்தினார்.

கட்சி வட்டாரங்களில் ஆச்சரியங்கள் எழுந்தன. தமிழ் நேசன் நாளிதழில் ஓர் உதவி ஆசிரியராக இருந்த பண்டிதன் அந்தப் பதவிக்கு சாமிவேலுவால் தேர்ந்தெடுக்கப்பட்டது ஏன் என்ற கேள்விகளும்  கட்சி வட்டாரங்களில் எழுந்தன.

ஆனால், காலபோக்கில்  எம்.ஜி. பண்டிதன் என அழைக்கப்பட்ட  அந்த இளைஞரின் ஆற்றலையும் திறமையையும் சாமிவேலு அப்போதே ஏதோ ஒரு ரூபத்தில் தெரிந்து வைத்திருந்தார் போலும்!

சிலாங்கூர் மாநிலத் தேர்தலில் தனது அணியில் மத்திய செயற்குழு உறுப்பினராக பண்டிதனை சாமிவேலு நிறுத்தினார். அவரின் அணியினர் அனைவரும்  வெற்றி பெற்று சிலாங்கூர் மாநிலத்தைக் கைப்பற்றினர்.

பண்டிதனும் முதன் முதலாக  மத்திய செயற்குழு உறுப்பினராக ம.இ.கா. தீவிர அரசியலில் கால்பதித்தார். அப்போது அவர் ம.இ.கா. லொக் இயூ சன்பெங் கிளையில் உறுப்பினராக இருந்தார்.

கிளையின் தலைவராக கைவல்யம் என்பவரும்  கிளையின் செயலாளராக பண்டிதனின் மூத்த சகோதரர் எம். காண்டீபனும் செயல்பட்டனர்.

அப்போது கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேசமாக, சிலாங்கூர் மாநிலத்திலிருந்து தனியாகப் பிரிந்துவிட்டாலும் அரசியல் ரீதியாக கோலாலம்பூர்– சிலாங்கூர் இரண்டும் ஒரே மாநில ம.இ.கா. அமைப்பாக கட்சியின் கீழ் செயல்பட்டு வந்தது

சாமிவேலு துணைத் தலைவராக வெற்றி பெற பிரச்சாரம் செய்த பண்டிதன்…

மத்திய செயற்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பண்டிதன், ம.இ.கா. துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் பிரச்சாரத்தில் நாடு முழுக்க சுற்றுப் பயணம் செய்து சாமிவேலுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.

அப்போதுதான்  பண்டிதனின்  பிரச்சாரத் திறனும்  வெளியுலகுக்கு  தெரியவந்தது.

சாமிவேலுவும் துணைத் தலைவர் போட்டியில் 26 வாக்குகள் பெரும்பான்மையில் சுப்ராவை வெற்றி கொண்டார்.

சாமிவேலுவின் அந்த துணைத் தலைவர் தேர்தல் வெற்றிக்குப் பின்னணியில் பாடுபட்டவர்களில்  பண்டிதனும் ஒருவர் என அப்போது பரவலாகப் பேசப்பட்டது.

சாமிவேலுவின் முக்கிய ஆதரவாளர்களின் ஒருவராக பண்டிதன் ம.இ.கா. அரசியலில் வலம் வருவார் என அப்போது கணிக்கப்பட்டது.

ஆனால், அடுத்த இரண்டு ஆண்டுகளில்  சாமிவேலுவுக்கும் பண்டிதனுக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் எழுந்தன.

1979 ஆம் ஆண்டில் இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் ம.இ.கா. கட்சித் தேர்தல்கள் நடந்தபோது இந்த முறை ம.இ.கா. கூட்டரசுப் பிரதேச மாநிலம் தனியாக உருவாகி இருந்தது.

இதற்கிடையில், பண்டிதன் ம.இ.கா. லொக் இயூ சன்பெங் கிளையின் தலைவராகி இருந்தார். அந்தக் கிளை ம.இ.கா. கூட்டரசுப் பிரதேச மாநிலத்தின் கீழ் இயங்கத் தொடங்கியது.

மஇகா கூட்டரசுப் பிரதேச மாநிலத் தலைவருக்கான போட்டி – சுப்ராவை எதிர்த்துப் போட்டியிட்ட பண்டிதன்

1979 கட்சித் தேர்தல்களில் ம.இ.கா. கூட்டரசுப் பிரதேச மாநிலத் தலைவராக டான்ஸ்ரீ சி. சுப்ரமணியம் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பண்டிதன் மாநிலத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார்.

சாமிவேலுவும் அந்தப் போட்டியில் பண்டிதனை ஆதரித்தார். இருந்தாலும் பண்டிதன் தோல்வியைத் தழுவினார். சுப்ராவே மாநிலத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார்.

அதனால் தொடர்ந்து பண்டிதன் மத்திய செயற்குழு உறுப்பினராக செயல்பட முடியவில்லை.

1979-இல் ம.இ.கா. கூட்டரசுப் பிரதேச மாநிலத் தலைவருக்கான தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த பண்டிதன் தேசிய நிலைத் தேர்தல்களில் உதவித்தலைவராக போட்டியிட முடிவெடுத்தார்.

ஆனால் அந்த முடிவுக்கு சாமிவேலு ஆதரவு தரவில்லை. எனவே, யார் பக்கமும் சாராது தனித்து நின்று உதவித் தலைவர் போட்டியில் குதிக்க பண்டிதன் முடுவெடுத்தார்.

1979 கட்சித் தேர்தலில்தான் சுப்ராவும், டத்தோ பத்மநாபனும் உதவித் தலைவர்களாகப் போட்டியிட்டனர். முறையே முதலாவது இரண்டாவது நிலைகளில் வெற்றி பெற்றனர்.

8 உதவித் தலைவர் வேட்பாளர்கள் போட்டியிட்ட அந்தத் தேர்தலில் பண்டிதன் தனித்து பிரச்சாரம் செய்து, சுமார் 300-க்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று 7-வது நிலையில் தோல்வி கண்டார்.

ஆனால், அந்தத் தோல்வியே அவரின் அடுத்தக் கட்ட அரசியல் வெற்றிக்கான விதையானது.

1979ஆம் ஆண்டு அக்டோபரில் டான்ஸ்ரீ மாணிக்கவாசகத்தின் மறைவு ம.இ.கா.வின் அரசியல் பயணத்தை திசை மாற்றியது. சாமிவேலு இடைக்கால தேசியத் தலைவரானார்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் அரசியல் காட்சிகள் மாறின. 1981 கட்சித் தேர்தல்களில் மஇகா கூட்டரசுப் பிரதேச மாநிலத் தலைவராகப் போட்டியிட்ட (டான்ஸ்ரீ) சுப்ரா தனது அணியில் மாநிலத்தைப் பிரதிநிதிக்கும் மத்திய செயற்குழு உறுப்பினராக பண்டிதனுக்கு வாய்ப்பளித்து தன்னுடன் இணைத்துக் கொண்டார்.

பண்டிதனும் வெற்றி பெற்று இரண்டு ஆண்டுகால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் மத்திய செயலவை உறுப்பினரானார்.

அதே ஆண்டில் நடைபெற்ற தேசிய நிலைப் பதவிகளுக்கான போட்டியில் சுப்ரா தேசியத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உதவித் தலைவருக்கான போட்டியில் பண்டிதனை பகிரங்கமாக ஆதரித்தார் சுப்ரா.

அந்தத் தேர்தலில் டத்தோ பத்மாவும் பண்டிதனும் ஓரணியாக தேசிய உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு இருவருமே முதலாவது இரண்டாவது நிலைகளில் வெற்றி பெற்றனர்.

மூன்றாவது நிலையில் உதவித் தலைவராக சாமிவேலுவின் நெருங்கிய நண்பரும் தீவிர ஆதரவாளருமான டத்தோ வீ.கோவிந்தராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1977-இல் மத்திய செயலவை உறுப்பினராக முதன் முதலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மஇகாவின் தீவிர அரசியலில் கால்பதித்த பண்டிதன் பின்னர் 1979-இல் அந்தப் பதவியை இழந்து – 1979-1981 இடைப்பட்ட 2 ஆண்டுகளுக்கு கட்சியில் எந்தப் பொறுப்புகளும் வகிக்காமல் இருந்தார்.

1981முதல் மஇகா கூட்டரசுப் பிரதேசம் சார்பிலான மத்திய செயலவை உறுப்பினராகவும், தேசிய நிலையில் உதவித் தலைவராகவும் மஇகா அரசியலில் வலம் வரத் தொடங்கினார் பண்டிதன்.

-இரா.முத்தரசன்