இதைத் தொடர்ந்து கடந்த பல ஆண்டுகளாக பாரம்பரியமாக பேராக் மாநிலத்தில் தேசிய முன்னணி கூட்டணி ஆட்சியின்போது மஇகாவுக்கு வழங்கப்பட்டு வந்த அவைத் தலைவர் பதவி இந்த முறை வழங்கப்படவில்லை.
2008-ஆம் ஆண்டில் அப்போதைய பக்காத்தான் ராயாட் கூட்டணி பேராக் மாநில ஆட்சியைப் பிடித்தது. அப்போது ஜசெகவைச் சேர்ந்த சிவகுமார் பேராக் மாநில சட்டமன்றத்தின் அவைத் தலைவராக (சபாநாயகராக) நியமிக்கப்பட்டார்.
முதன் முதலாக இந்தியர் ஒருவர் பேராக் சட்டமன்றத்தின் அவைத் தலைவராகப் பொறுப்பேற்றது இந்திய சமூகத்தினரிடையே வரவேற்பைப் பெற்றது. மகிழ்ச்சியையும் தோற்றுவித்தது.
எனினும், அடுத்த ஆண்டிலேயே சில சட்டமன்ற உறுப்பினர்களின் கட்சித் தாவலால் பேராக் மாநில பக்காத்தான் ராயாட் ஆட்சி கவிழ்ந்தது. தேசிய முன்னணியின் ஆட்சி பேராக்கில் அமைந்தது.
பக்காத்தான் ராயாட் முன்னுதாரணத்தைப் பின்பற்றி, தேசிய முன்னணியும் ஓர் இந்தியருக்கே அவைத் தலைவர் பதவியை வழங்கியது.
முன்னாள் பேராக் சட்டமன்ற உறுப்பினராக டத்தோ கணேசன் மஇகாவின் சார்பில் முன்மொழியப்பட்டு அவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2016 ஆகஸ்ட் மாதத்தில் செனட்டராக தேவமணி நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் அவைத் தலைவர் பதவியிலிருந்து விலகினார். அவருக்குப் பதிலாக நியமிக்கப்பட்டவரும் மஇகா பிரதிநிதிதான். வழக்கறிஞரான தங்கேஸ்வரி சுப்பையா அவைத் தலைவராக நியமிக்கப்பட்டு, அதன் மூலம் பேராக் சட்டமன்றத்தின் முதல் பெண் அவைத் தலைவர் என்னும் பெருமையையும் பெற்றார்.
பேராக் சட்டமன்ற அவைத் தலைவராக நியமிக்கப்பட ஒருவர் அம்மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கவேண்டியதில்லை என்பதால், மேற்குறிப்பிட்ட மஇகா பிரதிநிதிகள் அனைவரும் சட்டமன்ற உறுப்பினர்களாக இல்லாமலேயே அவைத் தலைவர் பதவியை அலங்கரித்தனர்.
2018-இல் மீண்டும் பக்காத்தான் ஹரப்பான் எனப்படும் நம்பிக்கைக் கூட்டணி பேராக்கில் ஆட்சி அமைத்தது. இந்த முறை நம்பிக்கைக் கூட்டணி இந்தியர் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை.
தற்போது பேராக் மாநிலத்தில் அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து பெரிக்காத்தான் நேஷனல் எனப்படும் தேசியக் கூட்டணி ஆட்சி அமைத்திருக்கிறது.
இந்தக் கூட்டணிக்கு மஇகா ஆதரவு தெரிவித்தாலும், அவைத் தலைவர் பதவி மஇகாவுக்கு வழங்கப்படவில்லை. அம்னோ பிரதிநிதியான 52 வயது முகமட் சாஹிருக்கு அந்தப் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.


தேசியக் கூட்டணி ஆட்சியின் கீழ் மஇகாவுக்கு ஒரே ஒரு அமைச்சர் பதவி மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. துணையமைச்சர்கள் பதவிகள் வழங்கப்படவில்லை. ஆனால் நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியில் 4 அமைச்சர்கள் ஒரு துணையமைச்சர் இந்தியர்களாக இருந்தனர்.
தற்போது தேசியக் கூட்டணி சார்பில் துணையமைச்சராக இருக்கும் எட்மண்ட் சந்தாரா மஇகாவின் பிரதிநிதியல்ல. அஸ்மின் அலியோடு பிகேஆர் கட்சியிலிருந்து வெளியேறியவர் அவர். பெர்சாத்து கட்சியிலும் மலாய்க்காரர் அல்லாத அவர் இணைய முடியாது என்பதால் அவர் இப்போது எந்தக் கட்சியைப் பிரதிநிதிக்கிறார் என்பது கூட அறிவிக்கப்படவில்லை.
மஇகா பகிரங்கமாகவே தங்களுக்கு போதிய வாய்ப்புகளும், பதவிகளும் புதிய அரசாங்கத்தில் வழங்கப்படவில்லை என அறைகூவல் விடுத்திருக்கிறது.
மஇகாவின் தகவல் பிரிவுத் தலைவர் குணாளன் அண்மையில் மஇகாவின் ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் பிரதிபலிக்கும் வண்ணம் அறிக்கை ஒன்றையும் விடுத்திருந்தார்.
வழக்கமாக வழங்கப்பட்டு வந்த பேராக் சட்டமன்ற அவைத் தலைவர் பதவியும் இப்போது மஇகாவுக்கு வழங்கப்படவில்லை.
இதைத் தொடர்ந்து புதிய தேசியக் கூட்டணி ஆட்சி மீதான இந்திய சமூகத்தின் அதிருப்திகளும் அதிகரித்து வருகின்றன.