Home அரசியல் பக்காத்தான் இளம் தலைவர்களை வீழ்த்த ஏன் தே.மு. வியூகம் வகுக்கிறது?

பக்காத்தான் இளம் தலைவர்களை வீழ்த்த ஏன் தே.மு. வியூகம் வகுக்கிறது?

647
0
SHARE
Ad

Nurul-Featureகோலாலம்பூர், ஏப்ரல் 13- மக்கள் கூட்டணியைச் சேர்ந்த மூன்று இளம் தலைவர்களை வீழ்த்த தேசிய முன்னணி அரசாங்கம் வியூகம் வகுத்திருப்பதாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியிருக்கின்றார்.

சில நாட்களுக்கு முன்னால் பண்டார் ரசாக்கில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக விழாவில் உரையாற்றியபோது அன்வார் மேற்கண்டவாறு கூறினார்.

குறிப்பாக லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் நூருல் இசா, பெட்டாலிங் ஜெயா உத்தாரா ஜசெக உறுப்பினர் டோனி புவா, பிகேஆர் கட்சியின் வியூக இயக்குநர் ரபிசி ரம்லி ஆகிய மூவரை  எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று மேலிடம் உத்தரவிட்டுள்ளதாக அவர் கூறியிருந்தார்.

#TamilSchoolmychoice

இவர்களைத் தவிர பத்து தொகுதியில் போட்டியிடும்  தியான்  சுவா, சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராஹிம் ஆகியோரையும் வீழ்த்த தேசிய முன்னணி வியூகம் அமைத்திருப்பதாகவும்  அன்வார் கூறியிருந்தார்.

ஆனால், டோனி புவா சீனர்கள் பெரும்பான்மையாக உள்ள பெட்டாலிங் ஜெயா உத்தாரா தொகுதியில் போட்டியிடுவதால் அவரை வீழ்த்துவது கடினம் என்றும் ஆனால் மற்றவர்களை வீழ்த்த தேசிய முன்னணி கடுமையாகப் பாடுபடப் போகிறது என்றும் அன்வார் கூறினார்.

ஏன் இவர்களைத் தோற்கடிக்க தேசிய முன்னணி கடுமையாக முயற்சி செய்கிறது?

அரசாங்கத்தின் பல ஊழல் விவகாரங்களை புள்ளி விவரங்களுடன் வெளியிட்டு, குறுகிய காலத்தில் மலேசியர்களிடையே பிரபலமாகியுள்ளவர் ரபிசி ரம்லி.

அதோடு மட்டுமல்லாமல், தேசிய முன்னணி வசம் தற்போதுள்ள பாண்டான் தொகுதியில் ரபிசி தேர்தலில் நிற்கவுள்ளார். வென்று நாடாளுமன்றத்தில் நுழைந்தால் அவர் பிகேஆர் கட்சியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினராக விளங்குவார் என்பதாலும் தேசிய முன்னணி தலைமைத்துவம் ரபிசியைப் பார்த்து அஞ்சுகின்றது.

ரபிசி பாண்டான் தொகுதியில் வென்றுவிட்டால், அதன் மூலம் தேசிய முன்னணி மற்றொரு நாடாளுமன்ற தொகுதியை இழக்கும். அதனாலும் அவரைத் தோற்கடிக்க கங்கணம் கட்டிக் கொண்டு தேசிய முன்னணி பாடுபடப் போகின்றது.

அதற்காக, நடப்பு பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ஓங் தீ கியாட்டை மசீச தலைவர் சுவா சொய் லெக்கின் எதிர்ப்பையும் மீறி மீண்டும் நிறுத்த பிரதமர் நஜிப் முடிவு செய்துள்ளதாகவும் அதன் மூலம்தான் ரபிசியைத் தோற்கடிக்க தேசிய முன்னணி வியூகம் வகுத்திருக்கின்றது என்றும் கருதப்படுகின்றது.

அதே வேளையில், வர்த்தகப் பின்னணியைக் கொண்ட ஜசெகவின் டோனி புவா அரசாங்கத்தின் பல பொருளாதார, வர்த்தக திட்டங்களை புள்ளி விவரங்களுடன் அலசி ஆராய்ந்து அதில் உள்ள குற்றம் குறைகளை எடுத்துச் சொல்லி வரும் காரணத்தால் தேசிய முன்னணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வருகின்றார்.

நூருல் இசாவைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. இவரை லெம்பா பந்தாய் தொகுதியில் தோற்கடிக்கும் பொறுப்பை கூட்டரசுப் பிரதேச நலன்களுக்கான அமைச்சர் ராஜா நோங் சிங் ஏற்றுக் கொண்டுள்ளார்.

அன்வாரின் போராட்டம் ஒரு தனிமனிதனின் சொந்த அரசியல் நலன்களுக்கான போராட்டம் என அம்னோ பிரச்சாரம் செய்துவந்த வேளையில் நூருல் இசாவின் பிரவேசம் அவர்களின் பிரச்சாரத்தை முறியடித்தது.

அன்வாரோடு முடிந்து போகும் என எதிர்பார்க்கப்பட்ட பிகேஆர் கட்சியின் அரசியல் எதிர்காலம், இளமையும் திறமையும் கொண்ட நூருல் இசாவால் இன்றைக்கு முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது.

கடந்த பொதுத் தேர்தலில் அம்னோவின் மகளிர் பகுதித் தலைவர் ஷாரிசாட்டை தோற்கடித்து அம்னோவின் முக்கிய கோட்டையான லெம்பா பந்தாய் தொகுதியைக் கைப்பற்றிய நூருல், இன்றைக்கு நாடு முழுமையிலும் மலேசிய மகளிரின் அடுத்த கட்ட அரசியல் சின்னமாகப் பார்க்கப்படுகின்றார்.

நூருல் தோற்கடிக்கப்பட்டால் பிகேஆரின் அரசியல் அமைப்பில் ஒரு மிகப்பெரிய சூன்யம் ஏற்படும். அதைவைத்து, அந்த கட்சிக்கு அடுத்த தலைமைத்துவம் ஏற்படுவதை தடை செய்ய முடியும் என்பதுதான் தேசிய முன்னணியின் கணக்காக இருக்க முடியும்!

ஆனால், தேசிய முன்னணி குறி வைத்துள்ளதாக கூறப்படும் மக்கள் கூட்டணி வேட்பாளர்கள் எல்லாம், துடிப்பான அரசியல்வாதிகள் என்பதாலும், இரவு பகல் பாராமல் உழைக்கக் கூடியவர்கள், மக்கள் செல்வாக்கைப் பெற்றவர்கள் என்பதாலும் கடுமையான போட்டிகளுக்கிடையிலும் அவர்கள் மீண்டும் வென்று வருவதில் எந்தவித தடைகளும் இருக்காது என்றே கருதப்படுகின்றது.

– இரா.முத்தரசன்