கோலாலம்பூர்: நோன்பு பெருநாளை முன்னிட்டு மாநிலங்களுக்கு இடையிலான பயணத்தை மேற்கொண்ட தனிநபர்களின் வீடுகளுக்கு அதிகாரிகள் வருகை தரலாம்.
காவல் துறைத் தலைவர், டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர், மாநிலங்களுக்கு இடையிலான நடமாட்டங்களுக்கு தடை விதிக்கப்படுவது குறித்து மிகுந்த தீவிரமாகக் கவனிப்பதாகக் கூறினார்.
மலேசிய காவல் துறை மற்றும் இராணுவத்தின் அனுமதி இல்லாமல் எல்லை தாண்டிய பயணத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார்.
“சாலைத் தடுப்புகளை நடத்துவதோடு மட்டுமல்லாமல், பொது விடுமுறைக்குத் திரும்புவதற்காக மாநில எல்லையைத் தாண்டி, நிபந்தனை கட்டுப்பாட்டு ஆணையை மீறுபவர்களைக் கண்டறிய காவல் துறை குடியிருப்பு மற்றும் கிராமப்புறங்களில் சோதனைகளை மேற்கொள்ளும்.”
“இந்த நோக்கத்திற்காக காவல் துறை மற்றும் இராணுவ கண்காணிப்புக் குழுக்கள் நாடு முழுவதும் உள்ள வீடுகள் மற்றும் கிராமங்களில் சென்று பார்க்கும்” என்று அவர் தெரிவித்தார்.
அனுமதி இல்லாமல் பயணத்தை மேற்கொண்ட வாகனங்களை காவல் துறை சோதனை செய்வார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
“தனிநபர்கள் மற்றும் அவர்களின் வாகனங்கள் மாநிலங்களுக்கு இடையேயான நடமாட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதற்கான பதிவுகள் காவல் துறையிடம் உள்ளன,” என்று அவர் கூறினார்.