கோலாலம்பூர்: டாக்டர் மகாதீர் முகமட்டுக்கு பதிலாக பெர்சாத்து தலைவராக டான்ஸ்ரீ மொகிதின் யாசினுக்கு சிலாங்கூர் பெர்சாத்து ஆதரவு வழங்குவதாக ஒருமனதாக அறிவித்துள்ளது.
சிலாங்கூர் பெர்சாத்து தலைவர் அப்துல் ராசிட் அசாரி, பிரதமர் மற்றும் தலைவர் பதவியிலிருந்து மகாதீர் விலகியதாகக் கூறியதைத் தொடர்ந்து கட்சியின் அரசியலமைப்பிற்கு ஏற்ப இந்த ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
“மத்திய அரசியலமைப்பு மற்றும் பெர்சாத்து அரசியலமைப்பின் விதிகளளின்படி, பெர்சாத்துவின் தலைவராகவும், பிரதமராகவும் மொகிதின் யாசின் நியமிக்கப்படுவதற்கு சிலாங்கூர் பெர்சாத்து ஏகமனதாக ஒப்புதல் அளிக்கிறது” என்று அவர் இன்று செவ்வாய்க்கிழமை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மகாதீரின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து, கட்சி அரசியலமைப்பின் பிரிவு 16 (9)- இன் விதிகள் இதற்கு பொருந்தும் என்று அப்துல் ராசிட் கூறினார்.
“சிலாங்கூர் பெர்சாத்து துன் டாக்டர் மகாதீருக்கு மரியாதையையும், நன்றியையும் தெரிவிக்கிறது.” என்று அவர் மேலும் கூறினார்.
தலைவர் பதவி விலகினால் அல்லது பதவி நீக்கம் செய்யப்பட்டால், புதிய தலைவருக்கான தேர்தல் நடைபெறும் வரை அடுத்த நிலையில் உள்ள தலைவர் பதவி வகிக்க வேண்டும் என்று கட்சி விதிமுறை கூறுகிறது.
பிப்ரவரி 24-ஆம் தேதி துன் டாக்டர் மகாதீர் தாம் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.