கோலாலம்பூர்: துன் டாக்டர் மகாதீர் முகமட் இனி பெர்சாத்து கட்சியின் தலைவராக இருக்க முடியாது என்று சங்க பதிவு இலாகா ஒரு கடிதத்தில் தெரிவித்துள்ளது.
மே 5 தேதியிட்ட அந்தக் கடிதத்தில், பெர்சாத்து தலைவர் பதவியில் இருந்து டாக்டர் மகாதீர் பதவி விலகியது உடனடியாக நடைமுறைக்கு வரும் என்றும், அடுத்த பெர்சாத்து தேர்தல் வரை கட்சித் தலைவராக டான்ஸ்ரீ மொகிதின் யாசின் அந்த பதவியில் இருப்பார் என்றும் அது கூறியுள்ளது.
அந்தக் கடிதத்தின்படி, பெர்சாத்து நடப்பு தலைவராக மொகிதின் ஏற்றுக்கொள்வது கட்சியின் அரசியலமைப்பின் பிரிவு 16.9- க்கு உட்பட்டு இருப்பதாக அது கூறியது.
“ஒரு தலைவர் பதவி விலகினால் அல்லது பணிநீக்கம் செய்யப்பட்டால், பிரிவு 13.3- இன் படி புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கு அடுத்த கட்சி தேர்தல் நடைபெறும் வரை அடுத்தப்படியாக இருப்பவர் அந்த பதவியை வகிக்க வேண்டும். மேலும் அது பிரிவு 16.2- இன் படி அதிகாரங்களைக் கொண்டுள்ளது.
“எனவே, தலைவர் பதவி விலகியதாக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், டாக்டர் மகாதீர் முகமட் தலைவராக விலகியது முறையானது என்றும், மொகிதின் முறையான நடப்பு தலைவராகவும் உள்ளார் என்பதை சங்க பதிவு இலாகா சரிபார்த்துள்ளது. இது பெர்சாத்து அரசியலமைப்பிற்கு ஏற்ப உடனடியாக நடைமுறைக்கு வருகிறது,” என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிப்ரவரி 24 அன்று டாக்டர் மகாதீர் கட்சித் தலைவர் மற்றும் பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.