சென்னை – கொவிட்-19 பாதிப்புகளால் தற்போது நடைமுறையில் இருக்கும் நடமாட்டக் கட்டுப்பாடுகள் எதிர்வரும் ஜூன் 30 வரை நீட்டிக்கப்படுவதாக தமிழ் நாடு அரசாங்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றின்வழி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்தியா முழுவதும் நடமாட்டக் கட்டுப்பாடுகள் எதிர்வரும் ஜூன் 30 வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசாங்க அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து தமிழக அரசின் அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
மத்திய அரசாங்கத்தின் அறிவிப்புப்படி, கொவிட்-19 பாதிப்புகளால் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் வட்டாரங்களைத் தவிர்த்து மற்ற வட்டாரங்களில் நிலைமைகளுக்கேற்ப தளர்வுகளை அனுமதிக்கலாம் என்றும் புதுடில்லி அறிவித்தது.
தமிழ்நாடு அரசாங்கமும் சில தளர்வுகளை அறிவித்திருக்கிறது.
தமிழ் நாட்டில் பொதுப் போக்குவரத்து 50 விழுக்காட்டு வாகனங்களுடன் மீண்டும் தொடங்கப்படுகின்றன.
உணவகங்களின் செயல்பாடுகளும் நிபந்தனைகளுடன் தொடங்கப்படுகின்றன.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய வட்டாரங்கள் இன்னும் முழுமையான நடமாட்டக் கட்டுப்பாடுகளைக் கொண்டிருக்கும். இவற்றுக்கு விதிவிலக்கு கிடையாது. தமிழ் நாட்டில் அதிக கொவிட்-19 பாதிப்புகளைக் கொண்ட வட்டாரங்களாக இவை திகழ்கின்றன.
உணவகங்கள் ஜூன் 8 முதல் திறக்கப்படலாம். எனினும் வழக்கமான பயனர்களின் எண்ணிக்கையை விட 50 விழுக்காட்டினர் மட்டுமே அமர்ந்து உணவு உண்ண அனுமதிக்கப்படுவர்.
வழிபாட்டுத் தலங்கள், மெட்ரோ இரயில், புறநகர் இரயில்கள் மீதான தடைகளும், நிபந்தனைகளும் இன்னும் நீடிக்கின்றன.
பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என்றாலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய வட்டாரங்களுக்கும் அண்டை மாநிலங்களுக்கும் செல்வதற்கு வாகனங்கள் கட்டாயமாக முன் அனுமதி பெற வேண்டும்.