பகாங் மந்திரி புசார் டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி பின் வான் இஸ்மாயிலை, அவரது குவாந்தான் மாநில அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்ததித்தபோது தம்மிடம் அவர் இதுபற்றிக் கூறியுள்ளதாக விக்னேஸ்வரன் தெரிவித்தார். இந்த சந்திப்பு கடந்த வியாழக்கிழமை (ஜூன் 4) நடைபெற்றது.
தனது சந்திப்பு குறித்த பத்திரிக்கை அறிக்கையில் மஇகா தேசியத் தலைவருமான விக்னேஸ்வரன் இந்த விவரங்களை வெளியிட்டார்.
இதனை அடுத்து, நகராண்மைக் கழகம் மற்றும் மாவட்ட மன்றப் பிரநிதிகளாக மஇகா உறுப்பினர்களை நியமிப்பதற்குரிய வழிவகைகளும் காணப்பட்டு வருகின்றன.
“மாநில அரசாங்கத்தில் இந்தியர்களின் பிரதிநிதித்துவத்தை பிரதிபலிக்கும் வகையில், அவர்களுக்கு உரிய பதவிகளும் வழங்கப்படவுள்ளன. மாநில மந்திரி புசார் இதை என்னிடம் கூறியிருக்கிறார். இதன்வழி பகாங் மாநிலத்தில் நிலவிவரும் இந்தியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு களம் இறங்க முடியும். மாநில மஇகா மேலும் துடிப்பாக இயங்க முடியும் என நம்புகிறேன்” என்றும் நாடாளுமன்ற மேலவைத் தலைவருமான விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
“விரைவில் நடைபெறவிருக்கும் சீனி சட்டமன்ற இடைத் தேர்தலில், தேசிய முன்னணி வேட்பாளர் வெற்றிப் பெறுவதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் மஇகா முடுக்கிவிட்டுள்ளது. மஇகா தொண்டர்கள் களம் இறங்கி, தேசிய முன்னணி வேட்பாளர் அதிகப் பெரும்பான்மையில் வாக்குகள் பெற்று, வெற்றிப் பெறுவதற்குரிய போராட்டத்தை மேற்கொள்வார்கள்” என்றும் விக்னேஸ்வரன் தனது அறிக்கையில் தெரிவித்தார்.
பகாங் மாநில மந்திரி புசார் வான் ரோஸ்டி பின் வான் இஸ்மாயில் அவர்கள் தமது நீண்டநாள் நெருங்கிய நண்பர் என்பதால், அவரது தலைமைத்துவத்தில் மாநில இந்தியர்களுக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்குமென்று தாம் நம்புவதாகவும் விக்னேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த மரியாதை நிமித்தம் சந்திப்பின்போது, விக்னேஸ்வரனுடன் பகாங் மாநில மஇகா பொறுப்பாளர்களுடன் உடனிருந்தனர்.
இந்த வருகையின்போது மாநிலத் தலைவர் வீ. ஆறுமுகம் தலைமையில் இளைஞர் பகுதித் தலைவர் மு. கார்த்திகேசன், மகளிர் பகுதித் தலைவி திருமதி ஆர். இன்பவள்ளி, இளைஞர் மற்றும் மகளிர் பகுதி உறுப்பினர்கள் அனைவரும் விக்னேஸ்வரனுக்கு சிறப்பான வரவேற்பினை நல்கினர்.