கூச்சிங்: தேசிய கூட்டணி அரசு மற்றும் மாநில அளவில் காபுங்கான் பார்டி சரவாக் (ஜிபிஎஸ்) கூட்டணிக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தின் சுயேட்சை உறுப்பினராக இருக்க பிகேஆரில் இருந்து விலகுவதாக லுபோக் அந்து நாடாளுமன்ற உறுப்பினர் தம்பாத் @ ஜுகா முயாங் அறிவித்தார்.
நேற்றிரவு பெர்னாமாவுக்கு வாட்சாப் வழியாக அனுப்பிய அறிக்கையில், பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் மற்றும் சரவாக் முதல்வர் டத்தோ பாதிங்கி அபாங் ஜோஹாரி துன் ஓபென் ஆகியோருக்கு தனது ஆதரவைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.
“நான் எனது ஆதரவாளர்களுடன் கலந்துரையாடினேன், லுபோக் அந்து பகுதியின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக தேசிய கூட்டணி அரசாங்கத்தை முழுமையாக ஆதரிக்க அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.” என்று அவர் கூறினார்.
நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தில் இணைவதற்கு முன்பதாக சுயேட்சையாகப் போட்டியிட்டு, பின்பு பிகேஆரில் இணைந்ததாக அவர் கூறினார்.
“துன் டாக்டர் மகாதீர் முகமட் பதவியிலிருந்து விலகிய நேரத்தில், நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தில் உள்ள கட்சிகளுக்கு இடையே உள் தகராறு ஏற்பட்டதற்கு நான் வருந்துகிறேன். இதனால் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் வீழ்ச்சியடைந்தது.” என்று அவர் கூறினார்.
14-வது பொதுத் தேர்தலில் ஜுகா 5,834 வாக்குகளைப் பெற்று தேசிய முன்னணி வேட்பாளர் ராபர்ட் பாசாங் அலாம் மற்றும் பிகேஆரின் நிக்கோலஸ் பாவின் அங்காட் ஆகியோரை வீழ்த்தினார்.