கோலாலம்பூர்: நாளை புதன்கிழமை அமல்படுத்த இருக்கும் மீட்சிக்கான நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் இரயில் பெட்டிகளில் மற்றும் இரயில் நிலையங்களில் கூடல் இடைவெளி அனுசரிக்கப்படாது என்று ரப்பிட் இரயில் செண்டெரியான் பெர்ஹாட் தெரிவித்துள்ளது.
அதன் நிர்வாக இயக்குனர் அப்துல் ஹாடி ஹாருண் கூறுகையில், நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறையின் கீழ் போக்குவரத்து அமைச்சு 100 விழுக்காடு மக்களை இரயில் பெட்டிகளில் ஏற்ற அனுமதி வழங்கியுள்ளதாக அது தெரிவித்துள்ளது.
“ஜூன் 10 முதல் மீட்சிக்கான நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் கெளானா ஜெயா எல்ஆர்டி, ஸ்ரீ பெட்டாலிங் எல்ஆர்டி, சுங்கை பூலோ எம்ஆர்டி, ஆகிய இடங்களில் கூடல் இடைவெளி அனுசரிக்கப்படாது. ”
“இடைவெளியை அனுசரிக்கக் கோரும் அறிவிப்புகளை நிலையங்களில் இருந்து நீக்கப்பட்டு விட்டது.” என்று இன்று அது வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முன்னதாக 750,000 பயணிகளை ஏற்றிச் சென்ற இரயில் சேவை, கட்டுப்பாட்டு ஆணையின் போது 200,000 பயணிகளை மட்டுமே கொண்டிருந்தது. இதன் மூலம் மீண்டும் தமது இலக்கை அடைய இரயில் சேவை திட்டமிட்டுள்ளது.
ஆயினும், மக்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் போன்ற விவகாரங்களில் அந்நிறுவனம் முக்கியத்துவம் அளிக்கும் என்றும் இரயில் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களின் உடல் வெப்ப நிலை சோதிக்கப்படும் என்றும், முகக்கவசங்கள் அணிந்து, கிருமித்தூய்மி போன்ற பொருட்களை பயன்படுத்தவும் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.