Home நாடு எல்.ஆர்.டி : ஓடும் இரயிலில் திறந்து கொண்ட கதவுகள் – பயணிகள் அதிர்ச்சி

எல்.ஆர்.டி : ஓடும் இரயிலில் திறந்து கொண்ட கதவுகள் – பயணிகள் அதிர்ச்சி

630
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நாட்டின் கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் முக்கியப் பொதுப் போக்குவரத்தாகத் விளங்கி வருவது எல்.ஆர்.டி இலகு இரயில் பயணமாகும். இன்று நிகழ்ந்த ஒரு சம்பவத்தில் எல்ஆர்டி இரயில் ஓடிக் கொண்டிருந்தாலும் தானியங்கி முறையில் கதவுகள் மூடாமல் இரயில் சென்றது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தை பயணி ஒருவர் தனது கைப்பேசியில் காணொலியாகப் படம் பிடித்து டுவிட்டர் தளத்தில் பதிவிட்டார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து எல்ஆர்டி இரயில் நிருவாகத்தை நடத்தும் ரேப்பிட் கேஎல் (Rapid KL) நிறுவனம் இந்த சம்பவத்தை ஒப்புக் கொண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

#TamilSchoolmychoice

“பிற்பகல் 3.01 மணியளவில் ஆரா டாமன்சாரா நிலையத்திலிருந்து லெம்பா சுபாங் நிலையம் நோக்கி செல்லும் இரயிலில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.கதவுகள் திறக்கப்பட்டிருந்த சம்பவத்தை உடனடியாக கட்டுப்பாட்டு மையம் கண்டு பிடித்தது. அடுத்த 2 நிமிடங்களில் அந்த இரயில் போக்குவரத்து சேவையில் இருந்து நிறுத்தப்பட்டது. 900 மீட்டர் தொலைவிலிருந்த லெம்பா சுபாங் நிலையத்தை அடைந்ததும் அந்த இரயில் போக்குவரத்து சேவையில் இருந்து அகற்றப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. சம்பவம் நடந்த சமயத்தில் அந்த இரயிலில் 7 பயணிகள் இருந்தனர். இந்த சம்பவத்தை ரேப்பிட் கேஎல் நிறுவனம் கடுமையாகக் கருதுகிறது என்றும் இதற்கான காரணங்கள் ஆராயப்படும். மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பது உறுதி செய்யப்படும்” எனவும் ரேப்பிட் கேஎல் நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

சுமார் 2 மாதங்களுக்கு முன்னர் இரண்டு எல்ஆர்டி இலகு இரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட சம்பவம் நடந்து நாட்டை அதிர்ச்சியில் உள்ளாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.