Home நாடு “பன்முகக் கலைஞர் தங்கமணியின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது” – விக்னேஸ்வரன் ஆழ்ந்த இரங்கல்

“பன்முகக் கலைஞர் தங்கமணியின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது” – விக்னேஸ்வரன் ஆழ்ந்த இரங்கல்

676
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நாட்டின் மூத்த கலைஞர்களில் ஒருவராகவும் பன்முகத்திறன் கொண்ட கலைஞராகவும் திகழ்ந்து வந்த வே.தங்கமணி அவர்களின் திடீர் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும் என்று ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

“நாட்டின் பிரபலக் கலைஞராக நீண்ட காலம் கலைத்துறையில் ஈடுபட்டு வந்துள்ள தங்கக்குரலோன் என்றழைக்கப்படும் தங்கமணியின் திடீர் மறைவு குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்திருக்கிறேன். கலைத்துறை ஒரு பண்பட்ட கலைஞரை இழந்து தவித்து வருகிறது. நாடகம், திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்துள்ள தங்கமணி தனது குரல் வளத்திற்காக தங்கக்குரலோன் என்றும் அழைப்பட்டு வந்தார். அன்னாரின் திடீர் மறைவு கலைத்துறைக்கு பேரிழப்பாகும்” என்றும் விக்னேஸ்வரன் தமது இரங்கல் செய்தியில் தெரிவித்தார்.

“நாடறிந்த நல்லதொரு கலைஞராக திகழ்ந்து வந்த தங்கமணி, கலைத்துறையில் ஒரு நடிகராகவும், இயக்குநராகவும், எழுத்தாளராகவும், குரல் பதிவாளராகவும் வலம் வந்து பன்முகத் திறன்கொண்ட கலைஞராக வலம் வந்தவர். வானொலி, தொலைக்காட்சியில் விளம்பரங்களில் நடித்தவர். அதற்கு குரல் பதிவும் வழங்கியிருக்கிறார்” என்றும் விக்னேஸ்வரன் நினைவுகூர்ந்தார்.

#TamilSchoolmychoice

“தங்கமணி ம.இ.காவோடும் நெருக்கமான தொடர்பு கொண்டவர். துன் சாமிவேலு காலம் தொட்டு ம.இ.காவின் பல்வேறு நிகழ்ச்சிகளில் அறிவிப்பாளராக பணியாற்றியிருக்கும் தங்கமணி அவர்களை பலமுறை சந்தித்து பேசியிருக்கிறேன். ம.இ.காவில் எனது தலைமைத்துவத்தின் கீழ் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்” எனவும் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

“தமிழ்சார்ந்த இயக்கங்கள், கலை சார்ந்த இயக்கங்களிலும் ஈடுபாடு கொண்ட தங்கமணி, யாசி எனப்படும் மலேசிய இந்திய கலைஞர் அறவாரியத்தில் செயற்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். அதேநேரத்தில் கண்ணதாசன் அறவாரியத்தில். செயற்குழு உறுப்பினராகவும் இருந்தவர். பேராக், சித்தியவானில் பிறந்நு வளர்ந்த தங்கமணி 1982-இல் கோலாலம்பூர் வந்தார். அதன்பிறகு கலைத்துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். நீண்ட காலம் கலைத்துறையில் ஈடுபாடு கொண்டிருந்த கலைஞர் வே.தங்கமணியின் திடீர் மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அன்னாரைப் பிரிந்து துயருறும் அவர் தம் குடும்பத்தினருக்கு விக்னேஸ்வரன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளார்.