ஷா ஆலாம் – மலேசியப் பாதுகாப்பு அமைச்சரும் கொவிட்-19 விவகாரங்களுக்கான மூத்த அமைச்சருமான டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், இந்தியத் தூதர் மிருதுள் குமார் இருவருக்கும் தனிப்பட்ட விருந்துபசரிப்பை ஒன்றை மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தனது இல்லத்தில் வழங்கினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜூன் 14-ஆம் தேதி இந்த விருந்துபசரிப்பை வழங்கியதாக புகைப்படங்களுடன் தனது முகநூல் பக்கத்தில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் பதிவிட்டிருக்கிறார்.
இந்தியா, மலேசியாவுக்கு இடையிலான தூதரக நல்லுறவுகளை வலுப்படுத்தும் விதத்திலும், இருநாடுகளுக்கிடையிலான பொருளாதார மேம்பாடுகளை முன்னெடுக்கும் வகையிலும் தங்களுக்கிடையில் மிகவும் பயனான கலந்துரையாடல்கள் நடைபெற்றன என்றும் விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கிறார்.
கொவிட்-19 பாதிப்புகளினால் விமானப் பயணங்களுக்குத் தடைவிதிக்கப்பட்ட காலகட்டத்தில் பல மலேசியர்கள் இந்திய நகரங்களில் சிக்கிக் கொண்டு நாடு திரும்ப முடியாமல் அவதிப்பட்டனர். இன, மொழி, மத பேதமின்றி இவர்கள் அனைவரும் நாடு திரும்ப கடுமையாகப் பாடுபட்டார்.
அவரது இந்த முயற்சிக்கு பல்வேறு அமைப்புகள், தனிநபர்கள், விமான நிறுவனங்கள், அமைச்சுகள், இந்தியத் தூதரகம் ஆகியவை துணை நின்றன.