ரோம்: சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தயாரித்ததாக கூறும் 14 டன் ஆம்பெடமைன் வகை போதை பொருளை (amphetamines) ஒரு பெரிய கப்பலில் இருந்து இத்தாலி காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தென்மேற்கு இத்தாலியில் உள்ள சலெர்னோ துறைமுகத்திற்கு மூன்று சந்தேகத்திற்கிடமான கொள்கலன்களை அதிகாரிகள் கண்காணித்து, தொழில்துறை பயன்பாட்டிற்காக காகித சிலிண்டர்களுக்குள் 1.1 பில்லியன் டாலர் (4.74 பில்லியன் ரிங்கிட் ) சந்தை மதிப்புள்ள 84 மில்லியன் மாத்திரைகளைக் கண்டறிந்ததாக கார்டியா டி பைனான்சா காவல் துறையினர் புதன்கிழமை ஓர் அறிக்கையில் தெரிவித்தனர்.
மதிப்பு மற்றும் அளவு இரண்டின் அடிப்படையில் இந்த பறிமுதல் உலகின் மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதலாகும் என்று புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.
நேபிள்ஸ் நகரத்தின் காவல் துறைத் தலைவரான கமாண்டர் டொமினிகோ நபோலிடானோ சிஎன்எனிடம் கூறுகையில், மருந்துகள் நன்கு மறைக்கப்பட்டிருப்பதாகவும், துறைமுகத்தில் உள்ள வருடிகள் அவற்றைக் கண்டறியவில்லை என்றும் அவர் கூறினார்.
“எங்களால் அவற்றைப் பார்க்க முடியவில்லை. ஆனால், காமோரா (இத்தாலிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு) உடன் நாங்கள் நடத்திக் கொண்டிருக்கும் விசாரணைகளின் காரணமாக அது வந்து கொண்டிருப்பதை நாங்கள் அறிவோம்.” என்று அவர் கூறினார்.
“சிரியாவில் பெருமளவில் உற்பத்தி செய்யப்படும் செயற்கை மருந்துகள் கடத்தப்படுவதன் மூலம் ஐஎஸ்ஐஎஸ் / டாயிஸ் அதன் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பெருமளவில் நிதியளிக்கிறது என்பது அறியப்படுகிறது. இது சமீபத்திய ஆண்டுகளில் உலக அளவில் ஆம்பெடமைன்களை உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனமாக மாறியுள்ளது.” என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.