சென்னை: சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் வழக்கு குறித்த தனது கருத்தை வெளியிட்ட நடிகர் ரஜினிகாந்தின் டுவிட்டர் பதிவுக்கு கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதியுடம் காவலர்கள் நடத்தை குறித்த செய்தி வெளிவந்ததை அடுத்து, அவர் ஆவேசமான பதிவைப் பகிர்ந்துள்ளார். அவர் வருத்தமாக இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
“தந்தையையும் மகனையும் துன்புறுத்தி மிருகத்தனமாகக் கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் நீதிபதி எதிரிலேயே சில காவலர்கள் நடந்துகொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டணை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். விடக் கூடாது. #சத்தியமா_விடவே_கூடாது.” என்று கோபத்துடன் எழுதியுள்ளார்.
இதனை பலர் கேலியாக விமர்சித்து, வெறுமனே கருத்து பகிர்வுக்காக மட்டும் இம்மாதிரியான பதிவுகளை வெளியிட வேண்டாம் என்று பதிவிட்டுள்ளனர். பேச வேண்டிய பல தருணங்களில் பேசாமல் இருந்ததையும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
காவல் துறையினர் காவலில் கொலை செய்யப்பட்ட தந்தை மற்றும் மகனுக்கு நீதி கோரி கோலிவுட் பிரபலங்கள் பதிவுகள் பகிர்ந்து வருகின்றனர். அவர்களின் கொலைக்கு காரணமான காவல் துறையைச் சேர்ந்தவர்களுக்கு தகுந்த தண்டனைகள் வழங்கப்பட வேண்டடும் என்று சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.