Home One Line P1 கடலடி சுரங்கப்பாதை திட்டம்: இராமசாமியும் விசாரிக்கப்படுகிறார்!

கடலடி சுரங்கப்பாதை திட்டம்: இராமசாமியும் விசாரிக்கப்படுகிறார்!

538
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன்: பினாங்கு கடலடி சுரங்கப்பாதை திட்டம் தொடர்பான விசாரணையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அடுத்து பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமியை விசாரிக்க இருப்பதாகத் தெரிகிறது.

எம்ஏசிசி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (ஜூலை 3) காலை 9.30 மணிக்கு தனது அலுவலகத்திற்கு வர இருப்பதை இராமசாமி உறுதிப்படுத்தினார்.

இன்னும் சில ஆட்சிக் குழு உறுப்பினர்கள் மற்றும் முதலமைச்சர் அலுவலகத்தையும் அதிகாரிகள் பார்வையிடுவார்கள் என்று கூறப்பட்டதாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“என் அலுவலகத்திற்கு ஒரு எம்ஏசிசி அதிகாரியிடமிருந்து அழைப்பு வந்தது. அவர்கள் நாளை வர விரும்புவதாகக் கூறினர்.

“நிச்சயமாக, நாங்கள் அவர்களை வரவேற்கிறோம். நாங்கள் இங்கே ஒரு திறந்த கதவுக் கொள்கையை கடைப்பிடிக்கிறோம். அவர்களுக்கு தேவையான எந்த வகையிலும் எம்ஏசிசிக்கு உதவ நான் தயாராக இருக்கிறேன்.

அரசியல் நன்கொடைகள் குறித்து 2018- ஆம் ஆண்டில் எம்ஏசிசி தனது வாக்குமூலத்தை எடுத்ததாக இராமசாமி வியாழக்கிழமை (ஜூலை 2) செய்தியாளர்களிடம் கூறினார்.

“அதன்பிறகு இந்த விவகாரம் முடிவுக்கு வந்தது. இப்போது புதிய அரசாங்கத்துடன், அவர்கள் அதை மீண்டும் பார்க்க விரும்புகிறார்கள்.” என்று அவர் கூறினார்.

வருகையின் நோக்கத்தையோ அல்லது அவர்கள் கேட்க விரும்பும் கேள்விகளின் தன்மையையோ எம்ஏசிசி அவரிடம் சொல்லவில்லை என்று அவர் கூறினார்.

“நான் கடலடி சுரங்கப்பாதை திட்டத்தில் ஈடுபடவில்லை என்று 2018- ஆம் ஆண்டில் அவர்களிடம் கூறியுள்ளேன், ஏனென்றால் அது எனது இலாகா அல்ல.

“அவர்கள் என்னிடம் விரிவான தகவல்களைக் கேட்டால், அது பற்றி எனக்குத் தெரியாது என்று நான் சொல்ல வேண்டியுள்ளது, இது எனது இலாகாவின் கீழ் இல்லை.” என்று அவர் கூறினார்.

மாநில ஆட்சிக்குழுவில் , மாநில பொருளாதார திட்டமிடல், கல்வி, மனித மூலதன மேம்பாடு மற்றும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு ஆகியவற்றின் பொறுப்பில் இராமசாமி உள்ளார்.

பினாங்கு துறைமுக முன்னாள் ஆணையத் தலைவர் ஜெப்ரி செவ்

இதனிடையே, இந்த விவகாரமாக நேற்று புதன்கிழமை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் செவ்வாய்க்கிழமை ​​கைது செய்யப்பட்ட பினாங்கு துறைமுக முன்னாள்  ஆணையத் தலைவர் ஜெப்ரி செவ், சனிக்கிழமை வரை நான்கு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் எம்ஏசிசிக்கு அளித்த வாக்குமூலம் தொடர்ந்து இந்த கைது செய்யப்பட்டதாக அவரது வழக்கறிஞர் ஆர்எஸ்என் ராயர் தெரிவித்திருந்தார்.

“எம்ஏசிசி ஏழு நாட்கள் தடுப்புக் காவலுக்கு விண்ணப்பித்தது, ஆனால், முறையீட்டுக்குப் பின்னர், நீதிபதி நான்கு நாட்கள் அனுமதி வழங்கினார்.

“சமீபத்தில் புகார் அறிக்கையைத் தொடர்ந்து எம்ஏசிசியின் விசாரணையை எளிதாக்குவதற்காக இந்த கைது செய்யப்பட்டது. மேலதிக விவரங்களை வெளியிட எனக்கு அனுமதி இல்லை” என்று அவர் கூறியிருந்தார்.

செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு ஜாலான் சுல்தான் அகமட் ஷாவில் உள்ள எம்ஏசிசியின் பினாங்கு தலைமையகத்தில் வாக்குமூலம் அளிக்க வந்தபோது ஜெப்ரி செவ் கைது செய்யப்பட்டார்.

சர்ச்சைக்குரிய 6.3 பில்லியன் ரிங்கிட் பினாங்கு கடலடி சுரங்கப்பாதை திட்டம் குறித்த புதிய தடயங்களைத் தொடர்ந்து, மீண்டும் ஊழல் தடுப்பு ஆணையம் இது தொடர்பாக ஆராயத் தொடங்கியது.

இது தொடர்பாக மேலும் பல மாநில அதிகாரிகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அழைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2018- இல் பிபிசி தலைவராக வருவதற்கு முன்பு, 52 வயதான செவ், உற்பத்தி, தொழில்கள் மற்றும் முதலீடுகளுக்குப் பொறுப்பாக, முன்னாள் முதல்வர் லிம் குவான் எங்கின் சிறப்பு உதவியாளராக இருந்தார்.

இதற்கிடையில், மூன்று எம்ஏசிசி குழுக்கள் கடந்த சில நாட்களில் கடலடி சுரங்கப்பாதை திட்டம் தொடர்பாக பல நிறுவனங்களில் சோதனைகளை நடத்தியது.

இந்த நடவடிக்கையில் காவல் துறை மற்றும் உள்நாட்டு வருமான வரி வாரியம் சம்பந்தப்பட்டிருந்தது.

விசாரணைகளை நடத்துவதற்காக மூன்று துறையினரும் கடந்த இரண்டு வாரங்களாக பினாங்கில் இருந்ததாக நம்பப்படுகிறது.

சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு கோலாலம்பூரில், கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை திட்டத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தின் மூத்த நிர்வாகியை எம்ஏசிசி விசாரித்தது.

மே மாதத்தில், பினாங்கு கடலடி சுரங்கப்பாதை திட்டத்தில் ஆறு விசாரணை ஆவணங்களைத் திறந்திருப்பதை எம்ஏசிசி உறுதிப்படுத்தியது.

முதல் விசாரணை 2017 ஜூலை மாதம் தொடக்கப்பட்டது என்றும் கடந்த ஆண்டு ஜனவரியில் மேலும் ஐந்து விசாரணைகள் தொடங்கப்பட்டன என்றும் எம்ஏசிசி தெரிவித்தது.

மொத்தம் ஐந்து விசாரணை ஆவணங்கள் பூர்த்தி செய்யப்பட்டு சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளுக்காக மூன்று விசாரணை ஆவணங்கள் எம்ஏசிசிக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக அது தெரிவித்தது.

கடலடி சுரங்கப்பாதை திட்டத்தில் ஈடுபட்டதற்காக 2018- ஆம் ஆண்டில், எம்ஏசிசி, ஈவின் பெர்ஹாட் நிர்வாக இயக்குனர் டத்தோ ஈவ் ஸ்வீ கெங் மற்றும் கொன்சோர்தியம் ஜெனித் கன்ஸ்ட்ரக்ஷன் செண்டெரியான் பெர்ஹாட் மூத்த நிர்வாக இயக்குனர் டத்தோ ஷாருல் அகமட் முகமட் சுல்கிப்லி ஆகியோரைத் தடுத்து வைத்தது.

அந்நேரத்தில் எம்ஏசிசி நான்கு மாநில அரசு நிறுவனங்களின் அலுவலகங்களை சோதனை செய்தது. பினாங்கு பொதுப்பணித் துறை, பினாங்கு மாநில செயலாளர், நிலங்கள் மற்றும் சுரங்கங்களின் பினாங்கு அலுவலகம், மற்றும் பினாங்கு மதிப்பீடு மற்றும் சொத்து சேவைகள் துறை மற்றும் மூன்று சொத்து மேம்பாடு மற்றும் கட்டுமான நிறுவனங்கள் மீது சோதனைகள் நடத்தப்பட்டன.

இந்த கட்டுமானத் திட்டம் மலேசியா-சீனா கூட்டு முயற்சியாகும். இது பினாங்கின் கர்னி டிரைவை மலேசிய நிலப்பகுதியில் உள்ள பாகான் ஆஜாம் பகுதியை இணைக்கும் 7.2 கி.மீ கடலடி சுரங்கப்பாதையை கட்டும் திட்டமாகும்.