Home One Line P2 ஆஸ்ட்ரோவின் ‘தமிழ்லட்சுமி’ : ஏராளமான இரசிகர்களை ஈர்த்தது

ஆஸ்ட்ரோவின் ‘தமிழ்லட்சுமி’ : ஏராளமான இரசிகர்களை ஈர்த்தது

1131
0
SHARE
Ad

(கடந்த சில வாரங்களாக ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201) வாயிலாகவும் ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்டில் ஒளியேறி வருகிறது உள்ளூர் தமிழ் நாடகத் தொடரான “தமிழ்லட்சுமி”. அனைவரும் பாராட்டும் விதத்தில் சிறப்பாக அமைந்திருக்கிறது. ஏராளமான பார்வையாளர்களையும் இரசிகர்களையும் கவர்ந்திருக்கிறது)

கோலாலம்பூர் – ஆஸ்ட்ரோ வானவில் எச்டியில் (அலைவரிசை 201), திங்கள் முதல் வியாழன் வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் உள்ளூர் தமிழ் தொடரான ‘தமிழ்லட்சுமி’, வாடிக்கையாளர்களிடையே வலுவான பின்தொடர்பைப் பதிவுச் செய்ததோடு அதிக ரசிகர்களையும் பெற்றுள்ளது. வாடிக்கையாளர்கள் எப்போது வேண்டுமானாலும் ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்டில் வாயிலாகத் ‘தமிழ்லட்சுமி’ தொடரை பதிவிறக்கம் செய்து மகிழலாம்.

டாக்டர் விமலா பெருமாள் இயக்கத்திலும், டேனேஸ் குமார் தயாரிப்பிலும் மலர்ந்திருக்கிறது ‘தமிழ்லட்சுமி’. கோலாலம்பூரைப் பின்புலமாகக் கொண்டு அமைக்கப்பட்ட கதைக் களத்தைக் கொண்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

நீண்ட கால நெருங்கிய நண்பர்களான, திருமணமான மூன்று பெண்களைப் பற்றிய சுவாரசியமானச் சம்பவங்களைக் கொண்ட கதை. இத்தொடரில் ஜஸ்மின் மைக்கல் (லெட்சுவாக), ஹேமாஜி (தமிழாக) மற்றும் மூன் நிலா (எமியாக) முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். திருமண வாழ்வின் போராட்டங்கள், வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை சமநிலைப்படுத்துதல், குற்றம், ஒரு குடும்பத்தின் இயக்கவியல் என இன்னும் பல நிஜ வாழ்க்கைக் கூறுகளை இத்தொடர் சித்தரிக்கிறது. எனவே, இக்கூறுகளுடன் இரசிகர்களைத் தங்களைத் தொடர்புப்படுத்திக் கொள்ள முடிவதால், அதிக இரசிகர்களைக் கவர்ந்திழுத்தது.

சமீபத்தில் ஓர் நேர்காணலில், இயக்குநர் டாக்டர் விமலா பெருமாள் மற்றும் இந்தத் தொடரின் முன்னணி நடிகர்களான ஜஸ்மின் மைக்கல், ஹேமாஜி மற்றும் மூன் நிலா ஆகியோர் தங்களின் அனுபவங்களையும், ‘தமிழ்லட்சுமி’ படப்பிடிப்பில் ஏற்பட்ட மறக்கமுடியாத இனிமையான தருணங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

டாக்டர் விமலா பெருமாள், இயக்குனர்

  • ‘தமிழ்லட்சுமி’ தொடரைப் பற்றின சில விபரங்களைப் பகிர்ந்து கொள்ள முடியுமா?

அன்றாட மலேசிய இந்தியக் குடும்பங்களின் வாழ்க்கையைத் தொடும் ஒரு நாடகத் தொடர். தங்கள் வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையைச் சமப்படுத்த முயற்சிக்கும் திருமணமான பெண்களைப் பற்றின சுவாரசியமானக் கதை. அனைத்து கதாபாத்திரங்களும் எளிமையானதாகத் தோன்றினாலும், அவை ஒரு பெண்ணாக இருப்பதன் உண்மையானச் சாரத்தையும், தங்கள் அன்புக்குரியவர்களின் நல்வாழ்வுக்காக பெண்கள் எடுக்கும் அபாயங்களையும் பிரதிபலிக்கும் மிகப்பெரிய பொறுப்புகளைக் கொண்டுள்ளன.

  • பெண்கள் அதிகாரம் என்றக் கருப்பொருளைக் கொண்டு ஒரு தயாரிப்பை இயக்குவது உங்களின் முதல் முறையா?

ஆம். பெண்களை மையமாகக் கொண்ட தலைப்புகளில் குறிப்பாக ‘பெண்கள் அதிகாரம்’ உள்ளிட்ட தலைப்புகளில் எனது கண்ணோட்டத்தையும் முன்னோக்கையும் பகிர்ந்துகொள்வது எனது கனவாக எப்போதும் இருந்தது. இறுதியாக, நான் எனது கனவை அடைந்துவிட்டேன் என்பதில் மகிழ்ச்சி.

இத்தொடர் ரசிகர்களின் சிந்தனைக்கு விருந்தாக இருக்கும் என்று பெரிதும் நம்புகிறேன். ரசிகர்களைத் தொடர்பு படுத்தும் கதாபாத்திரங்கள் மற்றும் காட்சிகள் உள்ளிட்ட, நம் அன்றாட வாழ்க்கையில் நிகழும் மிக உண்மையான சூழ்நிலைகளையும் ‘தமிழ்லட்சுமி’ திரைக்குக் கொண்டுவருகிறது.

  • இத்தொடரின் பின்னணியில் உள்ள உங்களின் உத்வேகத்தை எங்களுடன் பகிர்ந்துக் கொள்ள முடியுமா?

என் சுய கண்காணிப்பு மட்டுமல்லாமல் என் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடனான தொடர்புகளினால் உருவானது உத்வேகம். மேலும், பெண்கள் மற்றும் ஆண்கள் ஒரே அணியாக இணைந்து செயல்படும் அடிப்படைக் கடமையை அடிக்கோடிட்டுக் காட்டும் ஒரு கதையை முன்வைக்க விரும்பினேன்.

  • இத்தொடரை இயக்குவதில் நீங்கள் எதிர் நோக்கிய சில சவால்கள் என்ன?

‘வெடிகுண்டுப் பசங்க’, ‘விளையாட்டுப் பசங்க’ மற்றும் பல திரைப்பட வெற்றிகளுக்குப் பிறகு இது எனது முதல் தொடர். இது ஒரு புதிய முயற்சி என்பதால் மட்டுமல்லாமல், நீண்ட திரைக்கதை அமைப்பு (ஸ்கிரிப்டுகள்), நீட்டப்பட்ட படப்பிடிப்புகள், கலைஞர்களின் கடமைகள், திடீர் மாற்றங்கள் என தொடருடன் கூடிய பலதரப்பட்டச் சவால்களை நான் எதிர் நோக்கினேன். ஒரு தொடரை இயக்குவதற்கான எந்த திட்டமும் என்னிடம் இல்லை.

தயாரிப்பாளர், டேனேஸ் குமாரும் நானும் மேற்கொண்ட ஆராய்ச்சியின் அடிப்படையில் பல பிரச்சினைகள் விவரிக்கப்பட வேண்டிய நிலையில் இருப்பதை உணர்ந்தோம். மேலும், 2 மணி நேர திரைப்படத்தில் இவ்வனைத்து சிக்கல்களையும் திணிக்க நேரும். ஆனால், இச்சிக்கல்களை ஒட்டிய தெளிவான கருத்துக்களை வழங்க, ஒரு சிறந்த தேர்வாக தொடர் இருந்தது.

எனவே, ஒரு திரைப்படத்திற்கு பதிலாக ஒரு தொடரை நாங்கள் முடிவு செய்தோம். ஒரு திரைப்படத் தயாரிப்பாளர் ஒருபோதும் தன்னைத் திரைப்படங்களுக்கு மத்தியில் கட்டுப்படுத்திக் கொள்ளக்கூடாது. மாறாக பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி தெளிவான கருத்துக்களை இரசிகர்ளுக்கு வழங்க வேண்டும்.

  • எந்தப் பகுதியாவது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் பாதிக்கப்பட்டதா? ஆம் எனில், எவ்வாறு நீங்கள் அதனை கையாண்டீர்கள்?

சுமார் ஒன்றரை ஆண்டுகள் நீண்ட தயாரிப்பு காலத்தில், தொகுப்பாக்கம் (எடிட்டிங்), வரைகலை (கிராபிக்ஸ்) மற்றும் ஒலிக் கலவை உள்ளிட்ட பிந்தைய தயாரிப்புப் பணிகள் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது நிறைவு செய்யப்பட்டது. தொழில்நுட்பம் மற்றும் விடாமுயற்சியுடன் செயல்பட்ட பிந்தைய தயாரிப்பு குழுவுக்கு நன்றி.

  • இத்தொடருக்கான உங்களின் சில நம்பிக்கைகள் என்ன?

ஒருவருக்கொருவரின் தேவைகளை மதிக்க வேண்டும் என்ற முக்கியக் கருத்து உட்பட ஒவ்வொரு காட்சியிலும் இணைக்கப்பட்டுள்ள மறைமுகக் கருத்துகளை இரசிகர்கள் புரிந்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

ஏனெனில், ஒருவருக்கொருவரின் தேவைகளை மதித்தல் பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்கும் இடையில் அதிகமான வாய்ப்புகளை ஏற்படுத்தும். இத்தொடர் வெவ்வேறு வயதினர் உட்பட பலதரப்பட்ட இரசிகர்களுக்கானக் கதை.

இத்தொடரைக் கண்டு மகிழும் ரசிகர்களிடமிருந்து ஆக்கப்பூர்வமானக் கருத்துகளைப் பெற நான் காத்திருக்கிறேன். இதனால் எதிர்காலத்தில் எனது திட்டங்களை மேம்படுத்துவதோடு சிறந்த படைப்புகளை வழங்கவும் உறுதுணையாக இருக்கும்.

  • இத்தொடரில் உங்களுக்குப் பிடித்த காட்சி(கள்) ஏதேனும் உள்ளதா?

அனைத்து காட்சிகளும் எனது சுய எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டவை. மேலும் அனைத்து காட்சிகளும் சிறப்பான வகையில் இருந்தன. இருப்பினும், இறுதியில் ஒரு உணர்ச்சிபூர்வமான காட்சி என்னை நெகிழச் செய்தது. இக்காட்சியின் போது கலைஞர்கள் வரிகளையும் முக பாவனைகளையும் இரசிகர்களைக் கவரும் வண்ணம் மிக அழகாக எடுத்துச் சென்றனர்.  அக்காட்சி என்னையும் நெகிழச் செய்தது.

  • அடுத்த கட்டமாக ஈடுபட்டிருக்கும் ஏதேனும் எதிர்காலத் திட்டங்களைப் பற்றி பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்களா?

ஆம், தற்பொழுது என் வசம் இரண்டு திரைப்படங்கள் உள்ளன. நான் தற்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவுள்ள பிற திட்டங்களில் பணியாற்றி வருகிறேன். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்படும்.

  • உள்ளூர் இந்தியத் திரைப்படத் துறையில் இயக்குனராக விரும்பும் இளைய தலைமுறையினருக்கு உங்களின் ஆலோசனைகள் என்ன?

எனது அறிவுரை என்னவென்றால், முதலில் உங்களை மனதளவில் தயார்படுத்திக் கொள்ளுங்கள். பின் முழு ஆர்வத்துடன் திட்டங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். இத்துறையில் வெற்றிக் கனிகளைச் சுவைக்க இரு முக்கியமான விஷயங்கள், கடின உழைப்பு மற்றும் குழுப்பணி ஆகும்.

புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும், போக்குகளைத் தழுவவும், திரைப்படத் தயாரிப்பின் அடிப்படை நெறிமுறைகளையும் கொள்கைகளையும் கடைப்பிடிக்கவும் ஒருவர் திறந்த மனதுடன் இருக்க வேண்டும். திரைப்படத் தயாரிப்பு என்பது கதைக் கூறல் பற்றியதாகும், ஒரு நல்ல கதையைக் கூற, ஒருவர் முன்பே கேட்பதோடு கற்றுக் கொள்ளவும் வேண்டும்.

  • உள்ளூர் இந்திய திரைப்படத் துறையில் திறன்மிக்கக் கலைஞர்களுக்கு ஆஸ்ட்ரோ வழங்கும் வாய்ப்புகளைக் குறித்து உங்கள் கருத்து என்ன?

உள்ளூர் இந்தியத் திரைப்பட துறையில் திறன்மிக்க உள்ளூர் கலைஞர்கள் பிரகாசிக்க சிறந்த வாய்ப்புகளை வழங்குவதில் ஆஸ்ட்ரோ எப்போதும் முக்கியப் பங்காற்றியுள்ளது. பல மலேசியக் கலைஞர்களின் வாழ்க்கையையும் சிறப்பாக மாற்றியுள்ளது ஆஸ்ட்ரோ.

முந்தைய காலங்களில் ஒளிபரப்பு துறையில் நாம் புதியவர்களாக இருந்ததால், நீண்ட காலத்திற்கு முன்பே ஆஸ்ட்ரோ வாய்ப்புகளை வழங்கினாலும் ஒளிபரப்பக்கூடிய உள்ளடக்கம் நம்மிடம் அதிகம் இல்லை.

திறன்மிக்க உள்ளூர் கலைஞர்களின் தரமிக்க உள்ளூர் திரைப்படங்கள் மற்றும் திட்டங்கள் அதிகரிப்பதன் வழி, ஆஸ்ட்ரோ உள்ளூர் உள்ளடக்கத்திற்கான பகுதிகளை விரிவுபடுத்தியுள்ளது. மேலும், உள்ளூர் இந்திய திரைப்படத் துறையில் பல்வேறு திறன்மிக்க புதிய  கலைஞர்களுக்கு இன்னும் பல வாய்ப்புகளை ஆஸ்ட்ரோ வழங்கி வருகிறது.

  • வேலை மற்றும் குடும்ப வாழ்க்கையை சமநிலைப்படுத்த முயற்சி செய்யும் இளம் பெண்களுக்கு குறிப்பாக உள்நாட்டில் திரைப்பட இயக்குனராக முயற்சி எடுக்க விரும்பும் பெண்களுக்கு ஏதேனும் ஆலோசனைகள் உண்டா?

என்னைப் பொறுத்தவரை, இவை அனைத்தும் நேர நிர்வாகத்தைப் பொறுத்தது. வேலைக்கும் குடும்பத்துக்கும் இடையில் ஒருவர் தனது நேரத்தை சமப்படுத்த முடிந்தால், ஆரோக்கியமான, சீரான வாழ்க்கையை அடைய முடியும். திரைப்படத் தயாரிப்பு சில நேரங்களில் மிகவும் சவாலானதாக இருக்கும். எனவே, உங்களை தார்மீகம் (moral) மற்றும் உடல் உழைப்பு (physical) ரீதியாக ஆதரிக்க ஒரு நல்லக் குழுவைக் கொண்டிருப்பது கட்டாயமாகும். ஒரு பெண்ணாக, நீங்கள் விரும்பினால், நீங்கள் செய்ய முடியாதது ஏதுமில்லை. எனவே, கிடைக்கப்பெறும் வாய்ப்புகளைப் பற்றிக் கொள்வதோடு, உங்களால் முடிந்தவரை ஆராய்ந்து கற்றுக்கொள்ளுங்கள். வாய்ப்புகளை நீங்கள் பற்றிக் கொண்டால் மட்டுமே அவை உங்களுடையதாக முடியும்.

அடுத்து : “தமிழ்லெட்சுமி” நடிகையர் ஜஸ்மீன் மைக்கல், ஹேமாஜி, மூன் நிலா மூவரின் அனுபவங்கள்!