கோலாலம்பூர் : தொடர்ந்து சர்ச்சையாகிக் கொண்டிருக்கும் தனது பிரதமர் பதவி விலகல் குறித்து தனது வலைத் தளத்தில் இன்று வெள்ளிக்கிழமை (ஜூலை 17) விரிவான விளக்கங்களுடன் பதிவிட்டார் துன் மகாதீர்.
அவரது விளக்கத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
- இன்று வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த பெரும்பான்மையில் – இரண்டே நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையுடன் – அரசாங்க ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஏன் இது நேர்ந்தது?
- 14-வது பொதுத் தேர்தலில் தோல்வியடைந்ததும் தான் புரிந்த குற்றங்களுக்காக நிச்சயம் சிறைக்குச் செல்வேன் என்பதை நஜிப் அப்துல் ரசாக் உணர்ந்தார்.
- எனவே உடனடியாக பாஸ் இடையிலான மலாய்-முஸ்லீம் கூட்டணி அரசாங்கம் என்ற நிலைப்பாட்டைப் பரிந்துரைத்தார்.
- எனினும் அவர்களுக்கு போதிய பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூடுதலான ஆதரவு தேவைப்பட்டது.
- உடனே, ஆளும் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் ஜசெகவின் ஆதிக்கத்தில் நடைபெறுகிறது என்றும் ஜசெகவால் மலாய்க்காரர்கள் அழிக்கப்படுவார்கள் என்றும் பிரச்சாரங்களைத் தொடக்கினார் நஜிப்.
- ஜசெகவை வெளியேற்ற நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்ற வியூகம் வகுக்கப்பட்டது. பெர்சாத்து நம்பிக்கைக் கூட்டணியை விட்டு விலக வேண்டும். அம்னோ, பாஸ் கட்சிகளுடன் இணைந்து புதிய அரசாங்கத்தைத் தோற்றுவிக்கவும் திட்டம் வகுக்கப்பட்டது.
- ஹம்சா சைனுடின் இதற்காக அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களை எனக்கு ஆதரவாகக் கையெழுத்திட முயற்சிகள் எடுத்தார். நஜிப் கூட அவ்வாறு எனக்காகக் கையெழுத்திட்டார்.
- இந்தப் பரிந்துரையை நான் எதிர்த்தேன். ஆனால் மொகிதினோ ஆதரித்தார். பெர்சாத்துவில் இருந்த பெரும்பான்மையினர் இந்தப் பரிந்துரைக்கு ஆதரவாக இருந்தனர்.
- பெர்சாத்து நம்பிக்கைக் கூட்டணியை விட்டு விலகியதுமே அந்தக் கூட்டணியின் அரசாங்கம் கவிழ்ந்து விட்டது என்றுதான் கொள்ள வேண்டும். இதன்படி பார்த்தால் அமைச்சரவையின் எல்லா உறுப்பினர்களும் அவர்களின் பதவிகளை இழந்துவிட்டனர். நான் கூட பிரதமர் என்ற முறையில் எனது பதவியை இழந்து விட்டேன். பதவி விலகுவது என்பது அதன்பிறகு வெறும் நடைமுறைதான்.
- பாஸ், அம்னோ, பெர்சாத்து இணைந்த கூட்டணிக்கு பிரதமராக இருக்க நான் மறுத்துவிட்டேன். அதற்குக் காரணம் இதன் மூலம் நான் அம்னோவுடனும், நஜிப்புடனும் இணைந்து வேலை செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கும். 14-வது பொதுத் தேர்தலில் நான் யாரைக் கண்டனம் செய்தேனோ, யாரைத் தோற்கடித்தேனோ அவர்களுடனேயே மீண்டும் இணைய நான் ஒப்புக் கொள்ளவில்லை.
- அப்படிச் செய்வதன் மூலம் அம்னோவுக்கு மீண்டும் உயிர்கொடுத்து அதனை மீண்டும் அரசாங்கத்தின் ஒரு பகுதியாகக் கொண்டுவருவதற்குத்தான் நான் பாடுபட்டவனாகி இருப்பேன். நம்பிக்கைக் கூட்டணியின் மற்ற உறுப்பியக் கட்சிகளுக்கு நான் வழங்கிய வாக்குறுதிகளை நான் மீறியவனாகியிருப்பேன்.
- இத்தகைய நியாயமற்ற, முறையற்ற கூட்டணியின் பிரதமராக இருக்க வேண்டும் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
- ஆனால் மொகிதின் அதற்கு ஒப்புக் கொண்டார். எனவே, அந்தக் குழுவிடமிருந்து நான் உறவை முறித்துக் கொண்டு வெளியே வந்தேன்.
- இன்று எனது பெர்சாத்து கட்சி உறுப்பியம் பறிக்கப்பட்டிருக்கிறது. எனது பதவியும் பறிக்கப்பட்டிருக்கிறது. எனது நீக்கத்திற்கு எதிராக நான் நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறேன்
மேற்கண்டவாறு தனது கட்டுரையில் மகாதீர் தெரிவித்திருக்கிறார்.