Home One Line P1 துன் மகாதீர் கூறும் காரணங்களில் உண்மையில்லை!- நஜிப்

துன் மகாதீர் கூறும் காரணங்களில் உண்மையில்லை!- நஜிப்

1174
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் துன் மகாதீர் பதவி விலகியதற்குக் கூறும் காரணங்களில் உண்மையில்லை.

துன் மகாதிர் முகமட் பிரதமர் பதவியிலிருந்து விலகியதற்கு உண்மையான காரணத்தைக் கூறவில்லை என்று முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் குறிப்பிட்டுள்ளார்.

பிப்ரவரி மாதம் பதவி விலகிய டாக்டர் மகாதீருக்கு வேறு காரணங்கள் இருப்பதாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

அது அம்னோ, தம்மைக் காரணமாகக் கொண்டதல்ல என்றும் நஜிப் முகநூல் பதிவில் பதிவிட்டுள்ளார்.

டாக்டர் மகாதீர், பிரதமர் பதவியிலிருந்து விலகியதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன.

“அன்வார் இப்ராகிம் பிரதமராக இருப்பதை அவர் விரும்பவில்லை. அவர் ஜசெக, பிகேஆரால் கட்டுப்படுத்தப்படுவதை விரும்பவில்லை. 15- வது பொதுத் தேர்தலில் பெர்சாத்து, நம்பிக்கைக் கூட்டணி மோசமாக தோல்வியடைவார்கள் என்று அவர் கவலைப்பட்டார் ” என்று நஜிப் முகநூலில் பதிவிட்டார்.

சுத்தமற்ற ஒரு கூட்டணி அரசாங்கத்தின் பிரதமராக இருக்க விரும்பாததால், பிப்ரவரி மாதம் தாம் பதவி விலகியதாக துன் மகாதீர் முகமட் முன்னதாகக் குறிப்பிட்டிருந்தார்.

டாக்டர் மகாதீர் பதவி விலகும் தனது முடிவு, அவ்வாறு செய்வதற்கான காரணங்களை நம்பிக்கைக் கூட்டணியில் உள்ள தனது கூட்டணிக் கட்சிகளுக்குத் தெரிவிக்கவில்லை என்று அவர் கூறினார்.

“அவர் தனது பதவி விலகல் கடிதத்தை மதியம் 1 மணிக்கு அனுப்பினார். பெர்சாத்து நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து மதியம் 2 மணிக்கு வெளியேறுவதாக அறிவித்தது.

“அந்நேரத்தில், அவர் பதவி விலகுவார், ஏன் விலகுவார் என்று நம்பிக்கைக் கூட்டணி, வாரிசானில் உள்ள தனது நண்பர்களுக்கு அவர் தெரிவிக்கவில்லை.

“பிப்ரவரி 24 அன்று பதவி விலகியப் பின்னர், அவர் பெர்சாத்து, மொகிதின் யாசின், யாரிடமும் கோபப்படவில்லை. இது பிப்ரவரி 29 மாலை வரை இருந்தது.

“அவர் பதவி விலகிய மறுநாளே, நம்பிக்கைக் கூட்டணியை எவ்வாறு காப்பாற்ற முடியும் என்று விவாதிக்க ஒரு கூட்டம் நடத்த வேண்டும் என்ற நம்பிக்கைக் கூட்டணி கோரிக்கையை கூட அவர் புறக்கணித்தார்,” என்று நஜிப் கூறினார்.

டாக்டர் மகாதீர் எட்டாவது பிரதமரல்ல என்று மாமனார் அறிவித்த பிறகுதான், அவர் மற்றவர்கள் மீது பழி சுமத்தத் தொடங்கியதாக நஜிப் கூறினார்.

டாக்டர் மகாதீர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதற்கான பிற காரணங்களையும் அவர் மேற்கோள் காட்டினார்.

“டாக்டர் மகாதீர் ஒற்றுமை அரசாங்கத்திற்கான பிரதமராக இருக்க விரும்பினார். அங்கு அவர் விரும்பும் நாடாளுமன்ற உறுப்பினரைத் தேர்வு செய்ய முடியும். அந்தந்த கட்சிகளின் விருப்பங்களை சார்ந்து இருக்கத் தேவையில்லை” என்று அவர் மேலும் கூறினார்.

“ஒற்றுமை அரசாங்கம் நிறுவப்பட்டிருந்தால், டாக்டர் மகாதீர் இனி அன்வாருக்கு அதிகாரத்தை மாற்றுவது குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. அவர் ஜசெக, பிகேஆரால் கட்டுப்படுத்தப்பட மாட்டார். தேசிய முன்னணி, பாஸ் கட்சிக் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை, காரணம் அவர்கள் அவருடைய அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருப்பார்கள்” என்று நஜிப் குறிப்பிட்டிருந்தார்.

“உங்கள் உண்மையான திட்டங்களை ஒப்புக் கொள்ளுங்கள். நீங்கள் நேர்மையாக இருக்க முடியுமா? ஏன் என்னைக் குறை கூறுகிறீர்கள்? ” என்று நஜிப் பதிவிட்டிருந்தார்.

முன்னதாக, தனது பிரதமர் பதவி விலகல் குறித்து தனது வலைத்தளத்தில் துன் மகாதீர் பதிவிட்டிருந்தார்.  தமது பதவி விலகலுக்கு நஜிப்தான் முக்கியக் காரணம் என்றத் தொனியில் அவர் விளக்கங்களை அளித்திருந்தார்.

“14-வது பொதுத் தேர்தலில் தோல்வியடைந்ததும், தான் புரிந்த குற்றங்களுக்காக நிச்சயம் சிறைக்குச் செல்வேன் என்பதை நஜிப் அப்துல் ரசாக் உணர்ந்தார். எனவே, உடனடியாக பாஸ் இடையிலான மலாய்-முஸ்லீம் கூட்டணி அரசாங்கம் என்ற நிலைப்பாட்டைப் பரிந்துரைத்தார்.
எனினும் அவர்களுக்கு போதிய பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூடுதலான ஆதரவு தேவைப்பட்டது.” என்று அவர் பதிவிட்டிருந்தார்.

ஆளும் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் ஜசெகவின் ஆதிக்கத்தில் நடைபெறுகிறது என்றும், ஜசெகவால் மலாய்க்காரர்கள் அழிக்கப்படுவார்கள் என்ற பிரச்சாரத்தை நஜிப் தொடங்கியதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

“பாஸ், அம்னோ, பெர்சாத்து இணைந்த கூட்டணிக்கு பிரதமராக இருக்க நான் மறுத்துவிட்டேன். அதற்குக் காரணம் இதன் மூலம் நான் அம்னோவுடனும், நஜிப்புடனும் இணைந்து வேலை செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கும். 14-வது பொதுத் தேர்தலில் நான் யாரைக் கண்டனம் செய்தேனோ, யாரைத் தோற்கடித்தேனோ அவர்களுடனேயே மீண்டும் இணைய நான் ஒப்புக் கொள்ளவில்லை.

“அப்படிச் செய்வதன் மூலம் அம்னோவுக்கு மீண்டும் உயிர்கொடுத்து அதனை மீண்டும் அரசாங்கத்தின் ஒரு பகுதியாகக் கொண்டுவருவதற்குத்தான் நான் பாடுபட்டவனாகி இருப்பேன். நம்பிக்கைக் கூட்டணியின் மற்ற உறுப்பியக் கட்சிகளுக்கு நான் வழங்கிய வாக்குறுதிகளை நான் மீறியவனாகியிருப்பேன்.” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.