கோலாலம்பூர்: எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிதியில் 42 மில்லியன் ரிங்கிட்டை முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பான ஏழு குற்றச்சாட்டுகளில் தண்டனை பெற்ற முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக், உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட 1 மில்லியன் ரிங்கிட் பிணைப் பணத்தை செலுத்தியுள்ளார்.
67 வயதான நஜிப், தனது மகன் நோராஷ்மானுடன் மதியம் 1 மணியளவில் நீதிமன்றத்திற்கு வந்தார். அதன்பிறகு, மதியம் 1.30 மணிக்கு நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியேறினார்.
நேற்று செவ்வாய்க்கிழமை, நஜிப் ரசாக்கிற்கு அதிகார அத்துமீறல் தொடர்பான குற்றச்சாட்டுக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 210 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.
நம்பிக்கை மீறல் குற்றச்சாட்டுக்கு, நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி ஒவ்வொரு குற்றத்திற்கும் நஜிப்புக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தார்.
பணமோசடி குற்றங்களுக்காக, ஒவ்வொரு குற்றத்திற்கும் நஜிப்புக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அனைத்து சிறைத் தண்டனைகளையும் நஜிப் ஒரே காலகட்டத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்திருந்தார். அதன்படி, அவர் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்கொள்வார்.