Home அரசியல் ஜ.செ.க மீதான விசாரணை ஏப்ரல் 18 ஆம் தேதி தொடக்கம் – சங்கப் பதிவாளர் அலுவலகம்...

ஜ.செ.க மீதான விசாரணை ஏப்ரல் 18 ஆம் தேதி தொடக்கம் – சங்கப் பதிவாளர் அலுவலகம் (ROS) கடிதம்

650
0
SHARE
Ad

Karpal Singhபினாங்கு,ஏப்ரல் 14 – கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பினாங்கு மாநிலத்தில் நடைபெற்ற ஜ.செ.க வின் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தேர்தல் ஆண்டுக்   கூட்டத்தில், அக்கட்சியின் மத்திய தேர்தல்  நிர்வாகக் குழுவில் குளறுபடிகள் ஏற்பட்டதாக எழுந்த புகார்களையடுத்து, கோலாலம்பூரில் வருகிற ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறவிருக்கும் அப்புகார்கள் தொடர்பான விசாரணையில் கலந்து கொள்ளுமாறு ஜ.செ.க விற்கு, சங்க பதிவாளர் அலுவலகம் (The Registrar of Societies) கடிதம் அனுப்பியுள்ளது.

இக்கடிதம் தொடர்பாக ஜ.செ.க கட்சியின் தேசியத் தலைவர் கர்பால் சிங்(படம்) கூறுகையில், “வருகிற ஏப்ரல் 18 ஆம் தேதி காலை பத்து மணிக்கு சங்க பதிவாளர் அலுவலகத்தில், விசாரணை அதிகாரி முகமட் நவாவி மாட் முன்னிலையில் இவ்விசாரணை நடைபெறவிருக்கிறது.

இதில்  ஜ.செ.க வின் முன்னாள் தேர்தல் இயக்குநர் பூய் வெங் கியோங் மற்றும் தேர்தல் வியூக வகுப்பாளர் ஒங் கியான் மிங் ஆகியோர் கலந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

அத்துடன் தேர்தல் தொடர்பான மத்திய நிர்வாகக் குழுவின் 9 ஆவணங்களையும் சமர்ப்பிக்குமாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, சங்க பதிவாளர் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ள அனைத்தையும், சட்டத்திற்கு உடன்பட்டு நாங்கள் செய்யத் தயாராக உள்ளோம்.

இப்பிரச்சனை நிர்வாகக் குழுவில் ஏற்பட்ட சிறு தவறுகள் தானே ஒழிய, மோசடியோ அல்லது அதிகார துஷ்பிரயோகமோ அல்ல என்று கர்பால் சிங் தெரிவித்துள்ளார்.

விசாரணைகளில் இடையூறுகள் செய்ய வேண்டாம்

வருகிற ஏப்ரல் 20 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர்  நடைபெறவிருக்கும் இவ்விசாரணையால் ஜ.செ.க கட்சியின் பதிவு ரத்து செய்யப்படும் நிலை ஏற்படலாம் என்ற கருத்து குறித்து விளக்கமளித்த கர்பால் சிங், அப்படி ஒரு நிலை ஏற்பட வாய்ப்பு இல்லையென்றும், சங்க பதிவாளர் அலுவலகம் தகுந்த ஆதாரங்கள் கிடைத்தால் மட்டுமே எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

ஒருவேளை ஜ.செ.க கட்சியின் பதிவு ரத்து செய்யப்படும் நிலை வந்தால், அது திட்டமிட்ட சதி என்றும், நஜிப் இவ்விவகாரத்தில் தலையிட்டு தேவையற்ற இடையூறுகளை செய்யக்கூடாது என்றும் கர்பால் சிங் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சங்க பதிவாளர் அலுவலகம் விசாரணையைத் தொடங்கினாலும், தேர்தல் பிரச்சாரங்களில் ஜ.செ.க தங்களது சின்னத்தைப் பயன்படுத்த அனுமதி தர வேண்டுமென்றும் கர்பால் சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.