Home One Line P1 சிவகங்கா கொவிட்-19 தொற்று பரப்பிய நபருக்கு 5 மாதங்கள் சிறைத் தண்டனை – அபராதம்

சிவகங்கா கொவிட்-19 தொற்று பரப்பிய நபருக்கு 5 மாதங்கள் சிறைத் தண்டனை – அபராதம்

756
0
SHARE
Ad

அலோர்ஸ்டார் – கெடாவிலுள்ள குபாங் பாசு  நகரில் உள்ள நாப்போ என்ற இடத்தில் ஒரு நாசிக் கண்டார் உணவகம் நடத்தி வந்த உரிமையாளருக்கு   சிவகங்கா என்ற கொவிட்-19 தொற்றுத் திரளைப் பரப்பியதற்காக இன்று அலோர்ஸ்டார்  கீழ்நிலை நீதிமன்றத்தில் (மாஜிஸ்ட்ரேட்) 5 மாதங்கள் சிறைத் தண்டனையும் 12,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.

நேசார் முகமட் சாபூர் பாட்சா என்ற 57 வயதுடைய அந்த நபருக்கு மாஜிஸ்ட்ரேட் முகமட் ஹாடி ஹாக்கிமி ஹாருண் இந்த தண்டனையை விதித்தார்.

கடந்த ஜூலை 14-ஆம் தேதி நேசார் மீது விதிக்கப்பட்டிருந்த  வீட்டுக்குள்ளேயே இருக்கும் நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவை மீறி  அவர் நடந்து கொண்டதாக அவர் மீது 4 குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டன.

#TamilSchoolmychoice

அலோர்ஸ்டாரிலுள்ள பழைய மருத்துவமனையின் வளாகத்திலேயே நடத்தப்பட்ட சிறப்பு வழக்கு அமர்வின்போது, விசாரணைக்குப் பின்னர் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.

தொற்று நோய்கள் தடை மற்றும் கட்டுப்பாடு மீதான 1988-ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் இந்த குற்றச்சாட்டுகள் நேசார் மீது சுமத்தப்பட்டன.

அவர் மீது சுமத்தப்பட்டிருந்த நடமாட்டக் கட்டுப்பாட்டை மீறி அவர் பல இடங்களுக்கு சுதந்திரமாக சென்று வந்ததால் இந்த சுற்றுப்புறத்தில் பல பேருக்கு அவர் மூலம் கொவிட்-19 தொற்று பரவியது.

தமிழ்நாடு, சிவகங்கை நகரிலிருந்து அவர் நாடு திரும்பிய போது அவருக்கு இந்த தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து இந்த தொற்று நோய் பரவலுக்கு சிவகங்கா தொற்று என  சுகாதார அமைச்சு பெயரிட்டது.

அவர் மீது சுமத்தப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளில் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 3 ஆயிரம் அபராதம் விதித்த நீதிபதி அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் மொத்தமாக ஐந்து மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

அவரது சிறைத்தண்டனை இன்று முதல் அமுலுக்கு வருகிறது.