Home One Line P2 கமலா ஹாரிஸ் : மன்னார்குடி பைங்காநாடு துளசேந்திரபுரத்தில் தொடங்கிய பாரம்பரியம்

கமலா ஹாரிஸ் : மன்னார்குடி பைங்காநாடு துளசேந்திரபுரத்தில் தொடங்கிய பாரம்பரியம்

1307
0
SHARE
Ad

சென்னை – ஜனநாயகக் கட்சியின் துணையதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கமலா ஹாரிசின் தாயார் சியாயமளா கோபாலன் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் என்பது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்ட தகவலாகும்.

இந்நிலையில் அவரது தாத்தா பிவி கோபாலன் தமிழ் நாடு, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி அருகே உள்ள பைங்கா நாடு துளசேந்திரபுரம் என்ற ஊரைச் சேர்ந்தவர் என்ற புதிய தகவல்களை தமிழ் நாட்டு ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.

இதைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கமலா ஹாரிசின் குலதெய்வ ஆலயமான தர்ம சாஸ்தா ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

கமலா ஹாரிசின் தாத்தா துளசேந்திரபுரத்தில் ஓர் எழுத்தராக (ஸ்டெனோகிராபர்)  ஆங்கிலேய அரசின் கீழ் வேலை செய்து வந்தவராவார். பின்னர் பணி நிமித்தம் காரணமாக, ஒருமுறை ஆப்பிரிக்காவில் உள்ள சாம்பியா நாட்டிற்கு அகதிகள் கணக்கெடுப்புக்காக அவர் அனுப்பப்பட்டார். அங்கு அவர் அகதிகளின் நலன்களுக்காகப் பாடுபட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கமலாவுக்கு தாத்தா கூறிய அறிவுரைகள்

கமலா ஹாரிசின் பெற்றோர் சியாமளா கோபாலன் – டொனால்ட் ஹாரிஸ்

1911-ஆம் ஆண்டில் பைங்கா நாடு கிராமத்தில் பிறந்த கோபாலன், ராஜம் என்பவரை மணந்தார். கோபாலனின் 80-வது பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக கமலா ஹாரிஸ் சென்னை வந்து, தனது உறவினர்களுடன் கொ்ண்டாடி மகி்ழ்ந்தார்.1998-ஆம் ஆண்டில் கோபாலன் காலமானார்.

தனது தாத்தாவின் வழிகாட்டுதல்களும் அறிவுரைகளும் தனக்கு எப்போதுமே வாழ்க்கையில் துணைநின்றன என கமலா தனது நூலில் (Truths be hold) நினைவு கூர்ந்துள்ளார்.

பெசன்ட் நகரில் வசித்து வந்த தனது தாத்தா கோபாலனோடு கடற்கரையோரத்தில் நடைப்பயிற்சி செய்தபோது அவர் கூறிய அறிவுரைகள் தனக்கு எப்போதுமே மனதில் இருப்பதாக கமலா நினைவு கூர்ந்திருக்கிறார்.

மனித உரிமைகள், ஊழல் எதிர்ப்பு, நேர்மை, போன்ற அம்சங்களை தனது தாத்தாவின் அறிவுரைகள் கொண்டிருந்தன என்றும் கமலா கூறியிருக்கிறார்.

கோபாலனின் இரண்டு மகள்களில் ஒருவர் சியாமளா. சியாமளாவின் மகள்தான் கமலா ஹாரிஸ். சியாமளாவின் மற்றொரு மகள் மாயா.

1958-ஆம் ஆண்டிலேயே தனது 19 வயது மகள் சியாமளாவை அமெரிக்காவுக்கு மேல்படிப்பு படிக்க அனுப்பிய பெண்ணிய சீர்திருத்தச் சிந்தனையாளர் கோபாலன். அங்கு படிக்கச் சென்ற சியாமளா 25-வது வயது புற்றுநோய் ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றார்.

1960-ஆம் ஆண்டுகளில் மனித உரிமைகள் போராட்டங்கள் அமெரிக்காவில் உச்சகட்டத்தில் இருந்தபோது அந்தப் போராட்டங்களில் ஈடுபாடு காட்டிய சியாமளா மற்றொரு போராட்டவாதியான ஜமைக்கா நாட்டின் டொனால்ட் ஹாரிசைச் சந்தித்துக் காதல் வயப்பட்டார்.

அந்தப் புரட்சிகரமான கலப்புத் திருமணத்திற்கும் பச்சைக் கொடி காட்டியவர் கோபாலன். இருப்பினும் கமலாவின் இளம் வயதிலேயே அவரது பெற்றோர்கள் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

புற்றுநோய் ஆராய்ச்சியில் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டு புகழ்பெற்ற சியாமளா கோபாலன் அதே புற்றுநோய் தாக்கத்தால் 2009-இல், தனது 70-வது வயதில் காலமானார் என்பது கமலா ஹாரிசின் வாழ்க்கைச் சோகங்களில் ஒன்றாகும்.

பெற்றோரை நினைவுகூர்ந்த கமலா ஹாரிஸ்

கமலா ஹாரிசின் கணவர் டக்ளஸ் எம்ஹோப் – மகள்களுடன்

துணையதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் நேற்று புதன்கிழமை (ஆகஸ்ட் 12) முதன் முறையாக அதிபர் வேட்பாளர் ஜோ பிடனுடன் டிலாவெர் நகரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கமலா ஹாரிஸ் உரையாற்றினார். “எனது பெற்றோர்கள் உலகின் இரண்டு வெவ்வேறு மூலைகளில் இருந்து அமெரிக்காவுக்கு உலகத் தரமிக்க கல்வியை நாடி வந்தனர்” என அந்த உரையில் கமலா நினைவு கூர்ந்தார்.

கமலாவின் கணவர் டக்ளஸ் எம்ஹோப் ஒரு வழக்கறிஞராவார். பெரும் கோடீஸ்வரர். வெள்ளையரான இவருக்கு முதல் மனைவியின் மூலம் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். அவர்களையும் தனது மகள்களாக கவனித்து வருவதாக கமலா அடிக்கடி கூறியிருக்கிறார்.

கமலாவுக்கு நேரடியாகப் பிறந்த குழதைகள் யாரும் இல்லை என்பது அவரது வாழ்க்கையில் ஒரு நெருடலான சோகமாகும்.

எனினும் அதை அவர் ஒரு பொருட்டாக எங்கேயும் குறிப்பிட்டதில்லை.

இப்படியாக, மன்னார்குடி பைங்காபுரத்தில் தொடங்கிய கமலா ஹாரிசின் பாரம்பரியம் இன்றைக்கு வெள்ளை மாளிகையின் வாசல் வரை அவரை கைப்பிடித்து அழைத்து வந்திருக்கிறது.

துணையதிபராக வெள்ளை மாளிகையில் நுழைவாரா என்பது வரும் நவம்பரில் தெரிந்து விடும்!

-இரா.முத்தரசன்