Home One Line P2 கமலா ஹாரிஸ் துணையதிபர் வேட்பாளர் : கறுப்பர்கள், இந்தியர்களிடையே உற்சாக அலை!

கமலா ஹாரிஸ் துணையதிபர் வேட்பாளர் : கறுப்பர்கள், இந்தியர்களிடையே உற்சாக அலை!

820
0
SHARE
Ad

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் தனக்கான துணையதிபர் வேட்பாளராக கமலா ஹாரிசைத் (படம்) தேர்ந்தெடுத்திருக்கிறார் ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன்.

இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் மட்டுமின்றி உலகம் எங்கிலும் உள்ள கறுப்பின, இந்திய வம்சாவளியினரிடையே உற்சாக அலை எழுந்துள்ளது.

காரணம், கறுப்பினத்தவரைத் தந்தையாகவும், தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழ்ப் பெண்மணியைத் தாயாராகவும் கொண்டவர் கமலா. அதனால்தான் அவர் பெயரும் கமலா எனத் தொடங்குகிறது.

#TamilSchoolmychoice

துணையதிபர் வேட்பாளராகக் களமிறங்கும் முதல் கறுப்பினப் பெண்மணியாகவும், முதல் இந்திய வம்சாவளிப் பெண்மணியாகவும் திகழ்கிறார் கமலா ஹாரிஸ்.

கமலாவின் தாயார் தமிழகத்தின் தலைநகர் சென்னையைச் சேர்ந்த டாக்டர் ஷியாமளா கோபாலன் ஹாரிஸ் என்பவராவார். இவர் ஒரு மார்பகப் புற்று நோய் மருத்துவ நிபுணர். 1958-இல் தனது 19-வது வயதில் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் பயில்வதற்காக அமெரிக்கா வந்தவர்.

கமலாவின் தந்தை ஜமைக்காவைச் சேர்ந்த ஒரு கறுப்பின வம்சாவளியினராவார். டொனால்ட் ஹாரிஸ் என்ற அவர் அமெரிக்காவின் புகழ்பெற்ற ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தின் பொருளாதாரத் துறை பேராசிரியராவார்.

இருப்பினும் கமலா இளவயதினராக இருக்கும் போதே அவரது பெற்றோர்கள் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

ஜோ பிடனுக்கு வெற்றியைத் தேடித் தரக் கூடிய கமலா ஹாரிஸ்

77 வயதான ஜோ பிடன் எதிர்வரும் நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பைத் தோற்கடிப்பார் எனப் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

அதே வேளையில் 77 வயதாகி விட்டதால் அவரால் அமெரிக்க அரசாங்கத்தைத் திறம்பட நடத்த முடியுமா? முதுமை அவரது பணிகளுக்குத் தடைக்கல்லாக இருக்குமா? என்பது போன்ற கேள்விகளும் பிரச்சாரங்களில் எழுப்பப்பட்டன.

ஜோ பிடனின் துணையதிபர் வேட்பாளர் யார் என்பதும் ஆர்வத்துடன் கவனிக்கப்பட்டது.

காரணம், அடுத்த நான்காண்டுகளில் 77 வயதான ஜோ பிடனுக்கு ஏதாவது நேர்ந்து விட்டால் இடைக்கால அதிபராக வரக் கூடிய அந்தத் துணையதிபர்  எஞ்சிய காலத்திற்கு அமெரிக்க அரசாங்கத்தை வழிநடத்தக் கூடிய வல்லமையும், அறிவாற்றலும் கொண்டவராக இருக்க வேண்டும்!

கமலா ஹாரிசை தனது துணையதிபர் வேட்பாளராக அறிவித்ததன் வழி ஒரே கல்லில் இரண்டு மூன்று மாங்காய்களை ஜோ பிடன் வீழ்த்தியிருக்கிறார்.

முதலாவது ஒரு பெண் வேட்பாளரை முன் நிறுத்தியிருப்பது!

அமெரிக்கப் பெண் வாக்காளர்களிடையே டொனால்ட் டிரம்புக்கான ஆதரவு கடுமையாக வீழ்ச்சி கண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் ஒரு பெண் துணையதிபர் வேட்பாளரை முன் நிறுத்தியிருப்பது ஜோ பிடனின் வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

அடுத்ததாக, அமெரிக்கா எங்கும் கறுப்பினத்தவர் மோசமாக காவல் துறையினரால் நடத்தப்படுவதாக போராட்டங்களும், எதிர்ப்புணர்வுகளும் உச்ச கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில் கறுப்பினப் பெண்மணியை துணையதிபர் வேட்பாளராக அறிவித்திருக்கிறார் ஜோ பிடன். இதுவும் அவருக்கு சாதகமான அம்சம்.

கறுப்பினத்தவர்களின் வாக்குகளை ஜோ பிடன் தனது முடிவின் மூலம் அள்ளுவார் என்ற கணிப்புகள் வலுத்து வருகின்றன. அதே வேளையில் அமெரிக்க இந்தியர்களும் தங்களின் இந்திய வம்சாவளிப் பெண்மணி அடுத்த துணையதிபராகப் போகிறார் என்ற உற்சாகத்தால் ஜோ பிடனுக்கே வாக்குகளை வழங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் 3 மில்லியன் அமெரிக்க இந்தியர்களைக் கொண்ட நாடு அமெரிக்கா. சில மாநிலங்களில், குறிப்பாக கலிபோர்னியா, நியூயார்க் போன்ற மாநிலங்களில் இந்திய வம்சாவளியினரின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால் இந்த மாநிலங்களில் ஜோ பிடனின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் மாநிலம் வாரியாக வெற்றி பெற வேண்டிய அவசியம் இருப்பதால், இந்தியர்களின் வாக்குகள் சில மாநிலங்களை ஜோ பிடன் வெற்றி கொள்ள பெருமளவில் உதவி புரியும்.

கமலா ஹாரிசின் தேர்வு அறிவிக்கப்பட்டது முதல் சமூக ஊடகங்களில் உலகம் எங்கும் உள்ள இந்தியர்கள் பெரும் ஆதரவையும் வரவேற்பையும் கமலா ஹாரிசுக்குத் தெரிவித்து வருகின்றனர்.

அறிவாற்றல் மிக்கவர்

இதுபோன்ற சாதகமான அம்சங்களோடு 55 வயதே ஆன கமலா ஹாரிஸ் அறிவாற்றலிலும் திறனிலும், சிறப்பாக வாதாடுவதிலும் தலைமைப் பண்புகளிலும் வல்லவராகத் திகழ்கிறார்.

எனவே, ஜோ பிடனுக்கு அவரது பதவிக் காலத்தின்போது அசம்பாவிதம் ஏதும் நேர்ந்தால் அமெரிக்க அரசாங்கத்தை தனது தோள்களில் சுமந்து வழிநடத்தும் வலிமை கொண்டவராகவும் கமலா பார்க்கப்படுகிறார். இந்த அம்சத்தைக் கவனத்தில் கொண்டுதான் தான் துணையதிபர் வேட்பாளரை அறிவிக்கப் போவதாக ஜோ பிடன் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

வழக்கறிஞரான கமலா, செனட்டர், கலிபோர்னியா மாநில அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் (அட்டர்னி ஜெனரல்), ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் என பல தளங்களில், பல முனைகளில் தனது ஆற்றலை நிரூபித்தவராவார்.

கடந்த டிசம்பரில் (2019) ஜனநாயகக் கட்சி வேட்பாளர் என்ற நிலையில் இருந்து கமலா ஹாரிஸ், விலகிக் கொள்வதாக அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து அவர் துணையதிபர் வேட்பாளராக நியமிக்கப்படுவார் என்ற ஆரூடங்கள் உலவி வந்தன.

தற்போது அந்த ஆரூடங்கள் உண்மையாகி, அடுத்து வரும் சில மாதங்களில் அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தை வண்ணமயமாக்கும் – பரபரப்பாக்கும் – விதத்தில் கமலா அதிரடியாக இன்று முதல் அந்தக் களத்தில் நுழைகிறார்.

டொனால்ட் டிரம்பையும், அவரது துணையதிபர் மைக் பென்சையும் பிரச்சார மேடைகளிலும் விவாதக் களங்களிலும் நேரடியாக எதிர்கொண்டு எதிர்த் தாக்குதல் நடத்தக்கூடிய ஆற்றலாளர் –

தொடுக்கப்படும் கேள்விக் கணைகளுக்கு சாமர்த்தியமாகவும் திறம்படவும் பதில் கொடுக்கக் கூடியவர் கமலா என்பதும் அமெரிக்க தேர்தல் களத்தை மேலும் சுவாரசியமாக்கியுள்ளது.

-இரா.முத்தரசன்