வாஷிங்டன் – அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடவிருக்கும் 20 வேட்பாளர்களில் ஒருவராக செனட்டர் கமலா ஹாரிசை அந்தக் கட்சி அதிகாரபூர்வமாக அங்கீகரித்திருப்பதைத் தொடர்ந்து அவர் அதிபர் தேர்தலில் குதிப்பது உறுதியாகியுள்ளது.
தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரிபப்ளிக் எனப்படும் குடியரசுக் கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவராவார்.
அவரை எதிர்த்து நிற்பதற்குத் தகுதியான 20 வேட்பாளர்களை கடந்த வியாழக்கிழமை ஜனநாயகக் கட்சி அறிவித்தது. அவர்களில் கமலா ஹாரிசும் ஒருவராவார்.
இந்த 20 வேட்பாளர்களுக்கிடையிலான முதல் நேரடி விவாதம் ஜூன் 26 மற்றும் 27-ஆம் தேதிகளில் மியாமி நகரில் நடைபெறும் என்றும் அந்த விவாதம் நாட்டின் முன்னணி தொலைக்காட்சி அலைவரிசைகளில் நேரலையாக ஒளிபரப்பாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
20 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், வலுவான வேட்பாளர்களாக மூவர் மட்டுமே பார்க்கப்படுகின்றனர்.
முன்னாள் அமெரிக்கத் துணையதிபர் ஜோ பிடன், வெர்மோண்ட் மாநிலத்தின் செனட்டர் பெர்னி சாண்டர்ஸ், கலிபோர்னியாவின் செனட்டர் கமலா ஹாரிஸ் ஆகிய மூவருமே முன்னணியில் இருக்கும் மூன்று ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் ஆவர்.
முதல் நாள் பத்து வேட்பாளர்கள், இரண்டாம் நாள் பத்து வேட்பாளர்கள் என இரண்டு நாட்களுக்கு வேட்பாளர்களுக்கிடையில் விவாதங்கள் நடைபெறும்.
இந்தியத் தாயாரையும், கறுப்பினத் தந்தையையும் கொண்ட கமலா ஹாரிஸ் தனது அறிவாற்றலாலும் வாதத் திறமைகளாலும் இந்த முறை அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு பரவலாகப் பெருகி வருகிறது.