Home Featured உலகம் கமலா ஹாரிஸ் – அமெரிக்காவின் முதலாவது இந்திய-அமெரிக்க செனட்டர்!

கமலா ஹாரிஸ் – அமெரிக்காவின் முதலாவது இந்திய-அமெரிக்க செனட்டர்!

1205
0
SHARE
Ad

kamala-harris

வாஷிங்டன் – அமெரிக்க வரலாற்றில்  இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதலாவது செனட்டராக கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் கலிபோர்னியாவின் அரசாங்கத் தலைமை வழக்கறிஞராவார்.

இவர் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்.

#TamilSchoolmychoice

அதிபர் தேர்தலோடு அமெரிக்காவின் காங்கிரஸ் மற்றும் செனட் அவைக்கும் தேர்தல்கள் நடைபெற்றது. அந்தத் தேர்தல்களின் வழிதான் கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

52 வயதான கமலாவின் தாயார் தமிழகத்தின் தலைநகர் சென்னையைச் சேர்ந்த டாக்டர் ஷியாமளா கோபாலன் ஹாரிஸ் என்பவராவார். இவர் ஒரு மார்பகப் புற்று நோய் மருத்துவ நிபுணர். 1958-இல் தனது 19-வது வயதில் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் பயில்வதற்காக அமெரிக்கா வந்தவர்.

கமலாவின் தந்தை ஜமைக்காவைச் சேர்ந்த ஒரு கறுப்பின வம்சாவளியினராவார். டொனால்ட் ஹாரிஸ் என்ற அவர் அமெரிக்காவின் புகழ்பெற்ற ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தின் பொருளாதாரத் துறை பேராசிரியராவார்.

இருப்பினும் கமலா இளவயதினராக இருக்கும் போதே அவரது பெற்றோர்கள் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

kamala-harris-2

கமலா ஹாரிஸ்

அமெரிக்க ஆப்பிரிக்க வம்சாசாவளியினராக இருப்பதாலும் கறுப்பின மக்களாலும் கமலாவின் வெற்றி கொண்டாடப்படுகின்றது. அமெரிக்காவின் செனட் அவையை அலங்கரிக்கும் இரண்டாவது கறுப்பினப் பெண்மணியாக அவர் ஊடகங்களால் அறிவிக்கப்பட்டிருக்கின்றார்.

சிறந்த அறிவாற்றலும், அழகும் கொண்டவராக கமலா ஹாரிஸ் திகழ்கின்றார்.

முதலாவது பெண் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என ஹிலாரி கருதப்பட்ட வேளையில் அந்த எதிர்பார்ப்புகள் தவிடுபொடியாகிவிட்டன. அதிபராகக் கூடிய ஆற்றல் வாய்ந்த அடுத்த பெண் அரசியல்வாதி யார் என்ற கேள்விக்கு ஊடகங்கள் உச்சரிக்கும் பெயர் கமலா ஹாரிஸ்.

அதே வேளையில், ஒபாமாவுக்கு அடுத்து அதிபராகக் கூடிய கறுப்பின அரசியல்வாதி யார் என்ற கேள்விக்கும் விடையாகத் திகழ்கின்றார் கமலா.

கறுப்பின வம்சாவளிப் பெண்மணி என்பதால் கறுப்பர்களின் ஆதரவு – இந்தியப் பின்னணி என்பதால் இந்தியர்கள் ஆதரவு – வழக்கறிஞர் என்ற திறன் – மிகப் பெரிய மாநிலமான கலிபோர்னியாவின் தலைமை வழக்கறிஞராக அனுபவம் – இப்போதோ செனட்டராக மத்திய அரசாங்க அனுபவம் –

இப்படியாக எல்லாம் சேர்ந்து அடுத்து வரும் ஆண்டுகளில் கமலா ஹாரிஸ் அமெரிக்க அரசியலில் முக்கிய இடம் வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

-இரா.முத்தரசன்