அட்லாண்டா – அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் வெள்ளிக்கிழமையன்று (ஜூன் 12) மற்றொரு கறுப்பின நபர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் புதிய ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்து வருகின்றன.
வெண்டிஸ் என்ற துரித உணவகத்தில் (Wendy’s drive-through) இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. வாகனம் வழியாக உணவுகளை வாங்கும் உணவகம் அதுவாகும். அந்த உணவகத்தின் முன்னால் ரேய்ஷார்ட் புருக்ஸ் என்ற பெயர் கொண்ட 27 வயது கொண்ட கறுப்பின நபர் ஒருவர் வழியை மறைக்கும் வண்ணம் காரை நிறுத்தி காத்திருந்திருக்கிறார். சிலர் அவரைக் கேட்டுக் கொண்டும் காரை அவர் நகர்த்தவில்லை.
இதைத் தொடர்ந்து காவல் துறையினர் அழைக்கப்பட்டு அவர்களும் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சி செய்திருக்கின்றனர். அப்போது நடந்த கைகலப்பில் ரேய்ஷார்ட் காவல் துறையினரைத் தாக்கியிருக்கிறார். காவல் துறையினர் வைத்திருந்த டேசர் என்ற மின் அதிர்ச்சித் துப்பாக்கியைப் பறித்துக் கொண்டு ஓடியிருக்கிறார்.
அவரை விரட்டிச் சென்ற காவல் துறையினரை நோக்கி அவர் திருப்பித் தாக்கியதில் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அந்த சம்பவத்தைத் தொடர்ந்து சனிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் சம்பவம் நடைபெற்ற வெண்டிஸ் உணவக வளாகம் எரிக்கப்பட்டது.
சுற்றுப் புறங்களும் சேதப்படுத்தப்பட்டன.
ரேய்ஷார்ட் மரணம் நிகழ்ந்த 24 மணி நேரத்தில் அட்லாண்டா நகர காவல் துறைத் தலைவர் எரிக்கா ஷீல்ட்ஸ் என்ற பெண்மணி பதவி விலகுவதாக அறிவித்தார்.
ரேய்ஷார்ட்டைச் சுட்டுக்கொன்ற காவல் துறை அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். அவருக்கு துணையாக இருந்த மற்றொரு அதிகாரி நிர்வாக வேலைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.