Home One Line P2 ஜோ பிடனின் வெற்றிக்கு உதவக்கூடிய பெண் துணையதிபர் யார்?

ஜோ பிடனின் வெற்றிக்கு உதவக்கூடிய பெண் துணையதிபர் யார்?

677
0
SHARE
Ad

வாஷிங்டன் – எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கும்  அமெரிக்க அதிபர் தேர்தலில் நடப்பு அதிபர் டொனால்டு டிரம்ப்பை எதிர்த்து ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார் ஜோ பிடன்.

கடந்த மார்ச் மாதம் நடந்த ஜனநாயகக் கட்சியின் அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கான பரப்புரையின் போது வாக்குறுதி ஒன்றை அளித்தார் ஜோ பிடன். தான் அதிபர் வேட்பாளராக வெற்றி பெற்றால் துணை அதிபராக பெண்மணி ஒருவரை தேர்ந்தெடுப்பேன் என்பதே அந்த வாக்குறுதி.

எதிர்பார்க்கப்பட்டது போலவே ஜோ பிடன் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக வெற்றி பெற்றார்.  எனினும் தனது துணை அதிபர் வேட்பாளரை இன்னும் அறிவிக்கவில்லை.

#TamilSchoolmychoice

எந்த நேரத்திலும் அவர் தனது துணை அதிபர் வேட்பாளரை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.  யாரை அவர் தேர்ந்தெடுப்பார் என பலவிதமான ஆருடங்கள் கூறப்படுகின்றன.

அமெரிக்க அரசியலில் பெண்கள்

அமெரிக்க அதிபர் தேர்தலில் பெண்மணிகள் முக்கிய பங்கு வகித்திருக்கின்றனர். அமைச்சர்களாகவும், வெள்ளை மாளிகையின் முக்கியப் பொறுப்புகளிலும் பதவி வகித்திருக்கின்றனர். ஆனால் இதுவரையில் அதிகமான அளவில் அதிபர், துணை அதிபர் வேட்பாளராக அவர்கள் முன் நிறுத்தப்பட்டது இல்லை.

நான்காண்டுகளுக்கு முன்னர் ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளருக்கு போட்டியிட்டார் ஹிலாரி கிளிண்டன் (படம்).

முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் மனைவியான இவர் அதற்கு முன்பாக ஒபாமா அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராக 4 ஆண்டுகள் பணியாற்றினார். எனினும் 2016 அதிபர் தேர்தலில் டிரம்பிடம் தோல்வியடைந்தார்.

அடிக்கடி வெளியிடும் சர்ச்சைக்குரிய கருத்துகளால் டிரம்புக்கு பரவலாக பெண்களிடையே மதிப்பு குறைந்திருக்கிறது எனக் கருதப்படுகிறது. இதனால் இந்த முறை பெண் ஒருவரைத் துணையதிபராக நியமித்தால் பெண்களின் வாக்கு வங்கியை எளிதாக கைப்பற்ற முடியும் என ஜோ பிடன் வியூகம் வகுத்திருக்கிறார்.

ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில்தான் தனது துணை அதிபர் வேட்பாளர் பெயரை அறிவிப்பேன் என அவர் கூறியிருந்தாலும் இப்போதிருந்தே ஆருடங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

முன்னணியில் இருக்கும் வேட்பாளர் கமலா ஹாரிஸ்

ஜோ பிடனின் தேர்வுகளில் முன்னணியில் இருப்பவர் கமலா ஹாரிஸ். சிறந்த கல்வித் தகுதிகளைக் கொண்டவர்.

அமெரிக்க செனட்டர் ஆக பதவி வகிப்பவர். கலிபோர்னியா மாநிலத்தின் சட்டத் துறை தலைவராக (அட்டர்னி ஜெனரல்) பணியாற்றியவர். சான் பிரான்சிஸ்கோ நகரின் அரசு வழக்கறிஞராகவும் பணியாற்றினார். பலவிதமான பின்னணி கொண்டவர் என்பதால் வாக்குகளைப் பெற்றுத் தரும் ஆற்றல் கொண்டவராகக் கருதப்படுகிறார்.

கமலாவின் தாயார் இந்தியர். தமிழகத்தைச் சேர்ந்தவர். தந்தையார் ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த கறுப்பினத்தவர். இந்த பின்னணி காரணமாக அவருக்கு கறுப்பர்கள், இந்தியர்கள் என இரு தரப்பினரின் ஆதரவும் கிட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த ஆண்டு ஜனநாயகக் கட்சிக்கான அமெரிக்க அதிபர் தேர்தலில் குதித்த கமலா ஹாரிஸ் பின்னர் அந்த போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்.

அமெரிக்காவில் அதிபர், துணையதிபர் தேர்தலில் குதிப்பவர்களை அங்குள்ள ஊடகங்கள் சல்லடை போட்டு சலித்து அவர்களின் பின்னணிகளை ஆராயும். அந்த வகையில் கமலா ஹாரிசையும் கடந்த ஆண்டே – அவர் அதிபர் வேட்பாளராக போட்டியிட்ட போதே – ஊடகங்கள் துல்லியமாக ஆராய்ந்து எழுதின. பாதகமான அம்சங்கள் எதுவும் எழவில்லை.

இதுவும் அவருக்கிருக்கும் சாதகங்களில் ஒன்று!

சிறந்த அறிவாற்றல் கொண்டவர். திறமைசாலி. பல விவகாரங்களில் உடனுக்குடன் பதில் கொடுக்கக்கூடிய ஆற்றல் மிக்கவர். என்றெல்லாம் 51வயதான கமலா ஹாரிஸ் போற்றப்படுகிறார்.

கலிபோனியா மாநிலத்தில் தேர்தல் நிதியை திரட்டுவதிலும் கமலா பெருமளவில் ஜோ பிடனுக்கு உதவி புரிவார். அண்மையில் இணையம் வழியாகவே இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர்களை ஜோ பிடனுக்கு ஆதரவாக அவர் திரட்டினார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு கலிபோர்னியா மாநிலத்தின் செனட்டராக கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்க வரலாற்றில், ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், செனட் உறுப்பினராக வெற்றி பெற்றது அதுவே முதன்முறையாகும்.

-இரா.முத்தரசன்