வாஷிங்டன்: அமெரிக்க ஜனநாயக கட்சியின் செனட்டர் கமலா ஹாரிஸ், 2020-ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் அமெரிக்க தேர்தலில் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் களமிறங்கப் போவதாக தமது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இந்த முறை ஜனநாயகக் கட்சியின் வேட்பாளருக்கான தேர்வு கடுமையான போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் பல்வேறு சர்ச்சைகளிலும், மக்கள் எதிர்ப்பிலும் சிக்கிக் கொண்டிருக்கும் டிரம்ப் அடுத்த அதிபர் தேர்தலில் எளிதாகத் தோற்கடிக்கப்படுவார் எனக் கருதப்படுகிறது.
இதற்கிடையே, ஜனநாயகக் கட்சியைப் பிரதிநிதித்து போட்டியில் குதிக்கப் போவதாக துளசி கபார்ட் என்ற இந்தியப் பெண்மணி அறிவித்திருந்தார். இவர் அமெரிக்க நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்து நாடாளுமன்ற உறுப்பினராவார்.
கமலா ஹாரிஸ் உள்பட இதுவரையிலும் எட்டு பேர் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் இறங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 2016-ஆம் ஆண்டு கலிபோர்னியா நகரத்தின் செனட்டராக கமலாஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.