இஸ்லாமாபாத், ஏப்.15- பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரப் (படம்). கடந்த 2 தேர்தல்களில் குஜ்ஜர் கான் தொகுதியில் போட்டியிட்டு இவர் வெற்றி பெற்றார்.
குஜ்ஜர் கான் தொகுதியில் மின்சார உற்பத்தி தொடர்பான பல்வேறு திட்டங்களை இவர் தொடங்கி வைத்தார். இந்த திட்டங்களில் ஊழல் செய்ததாக ராஜா பர்வேஸ் அஷ்ரப் மீது குற்றம் சாட்டப்பட்டது.
தற்போது நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலிலும் குஜ்ஜர் கான் தொகுதியில் போட்டியிடுவதற்காக அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். அம்மனுவினை தொகுதி தேர்தல் அதிகாரி தள்ளுபடி செய்தார்.
ஊழல் வழக்குகளை சந்தித்து வருபவரின் வேட்பு மனுவினை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தேர்தல் அதிகாரி மறுத்துவிட்டார்.
இம்முடிவினை எதிர்த்து ராஜா பர்வேஸ் அஷ்ரப் மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டு மனுவும் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு வரும் தேர்தலில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.