கோலாலம்பூர் – முறையே நவம்பர் 2 மற்றும் நவம்பர் 15 ஆகிய தேதிகளில் ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் வழியாக முதல் ஒளிபரப்பு காண்கின்றன இரண்டு உள்ளூர் தொடர்கள்.
முதல் உள்ளூர் தொடர் தமிழ் செல்லப்பிராணித் தொடர், ‘ராமராஜன்’ என்பதாகும். மற்றொன்று உள்ளூர் சமையல் நிகழ்ச்சியான ‘சமையல் சிங்காரி’ என்பதாகும்.
இந்தப் புதிய நிகழ்ச்சிகளின் மூலம் ஆஸ்ட்ரோ கூடுதலான உள்ளூர் தமிழ் எச்டி உள்ளடக்கங்களை அறிமுகப்படுத்துகிறது.
உள்ளூர் திரைப்பட இயக்குனரும் காதல் நகைச்சுவைத் திரைப்படமான, ‘ஜாங்கிரி’ புகழ் கபிலன் பூளோன்ரன் கைவண்ணத்தில் மலர்ந்த நகைச்சுவை மற்றும் இதயத்தைத் தூண்டும் காட்சிகளைக் கொண்ட காதல் நகைச்சுவைத் தொடரான ராமராஜனை ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் கண்டு இரசிக்க முடியும்.
ராமராஜன் தொடரில் திறமையான, உள்ளூர் நடிகர்களான தோக்கோ சத்தியா, திவ்யா நாயுடு, டத்தின் ஸ்ரீ கீதாஞ்சலி, ஜி, விக்ரன் இளங்கோவன், குபேன் மகாதேவன் மற்றும் டேவிட் அந்தோணி ஆகியோருடன் கோல்டன் ரெட்ரீவர் (Golden Retriever) இனத்தைச் சேர்ந்த, ஃபாக்ஸி (Foxxy) எனும் நாயையும் கதாபாத்திரங்களாகக் கொண்டு மலர்கின்றது.
திரு. ராமராஜன் மற்றும் அவரின் இரண்டு மகள்களான சுப்ராஜா மற்றும் பூர்வஷினி ஆகியோரின் குடும்பத்தையும், அவர்களின் அன்பான நாயையும் மையமாகக் கொண்டக் கதை. ராமராஜனின் மனைவியின் இறப்பிற்கு பிறகு, அவர் தனது மனைவியின் இறுதி ஆசையை நிறைவேற்றும் நோக்கில் தனது குடும்பத்தை மீண்டும் ஒன்றிணைக்க முயற்சிக்கிறார். இருப்பினும், ராமராஜனின் ஆத்மா அவர்களின் நாயின் உடலில் சிக்கி எதிர்பாராத நிகழ்வுகளுக்கு வழிவகுக்கிறது.
சமையல் சிங்காரி – சமையல் நிகழ்ச்சி
உள்ளூர் சமையல்காரர் சாந்தி ராஜ் உடன் பலவகையான சுவையான சமையல்களைக் காண்பிக்கும் சமையல் நிகழ்ச்சியான சமையல் சிங்காரி நிகழ்ச்சியை வாடிக்கையாளர்கள் கண்டு இரசிக்கலாம்.
விக்கி ராவ் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க டேனேஸ் குமார், மகேன் விகடகவி, ஷீசே, பாஷினி சிவகுமார், ஹேமாஜி, ராகாவைச் சேர்ந்த அஹிலா மற்றும் உதயா, யாஸ்மின் நடியா, குபேன் மகாதேவன், சுபாஷினி அசோகன், சாந்தினி பி சுபாஷ்சந்திர போஸ், தேவகுரு சுப்பையா மற்றும் மகேஸ்வரி கண்ணசாமி (மாலா அம்லு) ஆகிய உள்ளூர் பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் இடம் பெறுவர்.
சமையல் சிங்காரி வாடிக்கையாளர்களை மகிழ்விப்பதோடு மட்டும்மல்லாமல் ஆரோக்கியமான உணவு முறை பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தும். அதே நேரத்தில் அழிந்துபோகக்கூடிய பொருட்களிலிருந்து அழகுக் குறிப்புகளை உருவாக்குதல், சமையலறையில் உடற்பயிற்சிகளுக்கான யோசனைகள் போன்ற வாழ்க்கை முறை குறிப்புகளும் இந்நிகழ்ச்சியில் பகிரப்படும்.
அனைத்து வாடிக்கையாளர்களும் நவம்பர் 2-ஆம் தேதி முதல் ஒளிபரப்பு காணும் ராமராஜன் தொடரின் புதிய அத்தியாயங்களை திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு விண்மீன் அலைவரிசையில் கண்டு மகிழலாம்.
நவம்பர் 15-ஆம் தேதி முதல் ஒளிபரப்பு காணும் சமையல் சிங்காரி நிகழ்ச்சியின் புதிய அத்தியாயங்களை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு 9 மணிக்கு விண்மீன் கண்டு களிக்கலாம்.
இரண்டு தொடர்களையும் எப்போது வேண்டுமானாலும் ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்டில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழலாம்.