Home One Line P2 திரையரங்குகள் நவம்பர் முதல் மூடப்படுகின்றன

திரையரங்குகள் நவம்பர் முதல் மூடப்படுகின்றன

595
0
SHARE
Ad

கோலாலம்பூர் : கொவிட்-19 தொற்று பரவலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பது திரைப்படத் துறை. திரைப்படப் படப்பிடிப்புகள் இல்லை. புதிய திரைப்படங்களின் வெளியீடுகள் இல்லை. இதன் காரணமாக, மலேசியாவில் நவம்பர் மாதம் முதற்கொண்டு கட்டம் கட்டமாக திரையரங்குகள் காலவரையின்றி மூடப்படுவதாக அதன் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

திரைப்பட வெளியீட்டாளர்களின் மலேசியக் கூட்டமைப்பு (The Malaysian Association of Film Exhibitors – MAFE) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இருப்பினும் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவோம் என்றும் அதற்கேற்ப எதிர்காலத்தில் முடிவுகள் எடுப்போம் என்றும் அந்தக் கூட்டமைப்பு மேலும் தெரிவித்தது.

#TamilSchoolmychoice

சில மாநிலங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள  நிபந்தனைகளுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருக்கின்றன.

புதிய படங்களின் திரையீடுகள் நிகழவில்லை என்பதும் எதிர்பார்க்கப்பட்ட பிரம்மாண்டமான படங்களின் திரையீடுகள் ஒத்திவைக்கப்பட்டுக் கொண்டே இருப்பதும் திரையரங்குகள் மூடப்படுவதற்கான மற்ற காரணங்களாகும்.

உதாரணமாக, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்படவிருந்த ஜேம்ஸ்பாண்ட் புதிய திரைப்படம் பல முறை ஒத்திவைக்கப்பட்டு தற்போது, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம்தான் திரையிடப்படும் என அதன் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

அதேபோல பெரிதும் எதிர்பார்க்கப்படும் விஜய் – விஜய் சேதுபதி நடித்த “மாஸ்டர்” தமிழ்த் திரைப்படமும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. சில படங்களோ காத்திருக்க முடியாமல் கட்டண வலைத் திரைகளில் (ஓடிடி) திரையிடப்பட்டு வருகின்றன.

திரையரங்குகளுக்கு வரும் இரசிகர்களின் எண்ணிக்கை 90 விழுக்காடு வரையில் குறைந்து விட்டன. அதே வேளையில் திரையரங்குகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டியிருக்கிறது. கொவிட்-19 காரணமாக சுகாதாரப் பாதுகாப்பு அம்சங்களுக்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியிருக்கிறது.

இதன் காரணமாக அதிகரிக்கும் செலவினங்களும் திரையரங்குகள் மூடப்படுவதற்கான காரணம் என திரைப்பட வெளியீட்டாளர்களின் மலேசியக் கூட்டமைப்பு  அறிவித்திருக்கிறது.