Home One Line P1 செல்லியல் பார்வை : “மலேசியாவில் அவசர காலங்கள்”

செல்லியல் பார்வை : “மலேசியாவில் அவசர காலங்கள்”

1001
0
SHARE
Ad

Previous Emergency periods in Malaysia | மலேசியாவில் அவசர காலங்கள் | 27 October 2020

(கடந்த 27 அக்டோபர் 2020-இல் செல்லியல் காணொலி தளத்தில் இடம் பெற்ற “மலேசியாவில் அவசர காலங்கள்” என்ற தலைப்பிலான மேற்கண்ட காணொலியின் கட்டுரை வடிவம்)

பிரதமர் மொகிதின் யாசின் மாமன்னருக்குப் பரிந்துரைத்த அவசர காலம் அமுலாக்கத்திற்கு வரவில்லை. ஞாயிற்றுக்கிழமை அக்போபர் 25-ஆம் தேதி நடைபெற்ற மலாய் ஆட்சியாளர்கள் சந்திப்புக் கூட்டத்திற்குப் பின்னர், அவசர காலத்திற்கு ஒப்புதல் தர முடியாது என அறிவித்தார் நமது மாட்சிமை தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் ரியாதுடின் அப்துல்லா.

#TamilSchoolmychoice

மலேசியாவில் கடந்த காலங்களில் அவசரகால உத்தரவுகள்  பிறப்பிக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப் பட்டிருக்கின்றன.

அவை எப்போது நிகழ்ந்தன? ஏன் நிகழ்ந்தன? என்பது குறித்து சற்று திரும்பிப் பார்ப்போம்.

கம்யூனிஸ்ட் பயங்கரவாதம் கொண்டு வந்த அவசர காலம்

இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிறகு ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் தீவிர கம்யூனிச நாடுகளாக மாறின. மேலும் பல நாடுகளில் கம்யூனிச சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு ஆட்சிகள்  அமைக்கப்பட்டன.

மலேசியாவிலும் தென்கிழக்காசிய நாடுகளிலும் கூட கம்யூனிச  அபாயம் ஏற்பட்டது.

மலாயா தேசிய விடுதலை ராணுவம் என்று தங்களை அறிவித்துக் கொண்ட  கம்யூனிஸ்ட் போராளிகள் நாட்டின் பல இடங்களில் பயங்கரவாதத் தாக்குதல்களை மேற்கொண்டனர். அவர்களை முறியடிக்கவும், கம்யூனிச சித்தாந்த அரசியல் கட்சிகளை தடை செய்யவும், பயங்கரவாதிகள் என அடையாளம் காணப்பட்டவர்களை விசாரணையின்றி தடுப்புக்காவலில் வைக்கவும் அவசரகால சட்டம் ஒன்று1948 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டது.

1960-ஆம் ஆண்டுவரை மலேசியாவில் – அதாவது அப்போதைய மலாயாவில் – அவசர காலம் அமுலில் இருந்தது.

ஆகஸ்ட்  1959-இல் நடைபெற்ற நாட்டின் முதல் பொதுத் தேர்தலும் அதைத்தொடர்ந்து செப்டம்பரில் அதே ஆண்டில் கூடிய முதல் நாடாளுமன்றக் கூட்டமும் அவசரகாலம் அமுலில் இருந்த காலகட்டத்தில் தான் நடைபெற்றன.

இந்தோனேசியாவுடன் மோதல்

இந்தோனிசிய முன்னாள் அதிபர் சுகர்னோ

1963-ஆம் ஆண்டில் சிங்கப்பூர், சபா, சரவாக் ஆகிய பிரதேசங்களுடன் இணைந்து மலேசியா உருவாகியது.

அதைத்தொடர்ந்து 1964-ஆம் ஆண்டில் இந்தோனேசியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையில் தூதரக நல்லுறவுகள் முறிந்தன. மலேசியாவுக்கு   எதிரான இராணுவ முற்றுகையை அறிவித்தது இந்தோனிசியா. அப்போது இந்தோனிசிய அதிபராக இருந்தவர் சுகர்னோ.

இதைத்தொடர்ந்து இந்தோனிசியாவுடன் போர் ஏற்படலாம் என எழுந்த சூழலைச் சமாளிக்க அப்போதைய பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் 3 செப்டம்பர்  1964-இல்  நாட்டில் அவசரகால உத்தரவை பிறப்பித்தார். நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்த அவசரகால சட்டம் மாமன்னருக்கு அவசரகால சட்டங்களை உருவாக்க அதிகாரமளித்தது.

சுதந்திரத்திற்குப் பின்னர் நாட்டில் அறிவிக்கப்பட்ட முதல் அவசர காலம் இதுவாகும்.

மே 13 கலவரங்களைத் தொடர்ந்து அமுலாக்கப்பட்ட அவசர காலம்

மே 13 கலவர காலத்தின்போது பிரதமராக இருந்த துங்கு அப்துல் ரஹ்மான்

10 மே 1969 நடைபெற்ற பொதுத் தேர்தலைத் தொடர்ந்து நாட்டில் கலவரங்கள் வெடித்தன. மே13 கலவரங்கள் என அவை வரலாற்றில் இடம் பிடித்தன. அதைத்தொடர்ந்து மே மாதம் 15-ஆம் தேதி  அவசர காலம் பிறப்பிக்கப்பட்டது.

நாடாளுமன்றமும் முடக்கப்பட்டது.

அப்போதைய மாமன்னர் அவசரகால சட்டத்தை இயற்றி நாட்டின் நிருவாக – சட்ட உருவாக்க – அதிகாரங்களை தேசிய நடவடிக்கை மன்றத்திடம் ஒப்படைத்தார்.

பிரதமராக துங்கு அப்துல் ரஹ்மான் நீடித்தார். எனினும் தேசிய நடவடிக்கை மன்றத்தின் தலைவராக பொறுப்பேற்ற துணைப் பிரதமர் துன் அப்துல் ரசாக் அனைத்து அதிகாரங்களையும் கொண்டிருந்தார்.

தேசிய நடவடிக்கை மன்றம் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்தி சில சட்டங்களை இயற்றியது. அவ்வாறு இயற்றப்பட்ட சட்டங்களில் ஒன்று விசாரணையின்றி ஒருவரை தடுப்புக்காவலில் வைப்பது.

பொதுத் தேர்தல் முடிந்து இரண்டு ஆண்டுகள் கழித்து 20 பிப்ரவரி 1971-ஆம் நாளில்தான் நாடாளுமன்றம் மீண்டும் கூடியது.

மாநில அளவில் அமுலாக்கப்பட்ட அவசரகால சட்டங்கள்

மாநில ரீதியாகவும் சில சமயங்களில் அவசரகால சட்டங்கள் நமது நாட்டில் அமுலாக்கம் கண்டிருக்கின்றன.

1966 ஆண்டில் அப்போதைய சரவாக் முதலமைச்சராக இருந்த ஸ்டீபன் காலோங் நிங்கானை அந்தப் பதவியில் இருந்து அகற்றுவதற்காக சரவாக் மாநிலம் முழுவதும் அவசர காலம் அறிவிக்கப்பட்டது.

அதையும் நாடாளுமன்றமே ஒரு சட்டமாக இயற்றியது. அந்த சட்டத்தின்படி சரவாக் மாநில ஆளுநருக்கு முழுமையான அதிகாரங்கள் வழங்கப்பட்டன. மாநில முதலமைச்சரின் ஆலோசனையின்றி மாநில ஆட்சி மன்றத்தை நடத்துவதற்கும் ஆளுநருக்கு சட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டன.

சரவாக்கில் அமுலாக்கப்பட்ட அவசரகால சட்டத்தைப் பயன்படுத்தி 23 செப்டம்பர் 1966-இல் மாநில ஆட்சி மன்றம் கூட்டப்பட்டது. அந்தக் கூட்டத்தில்  முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவர் அந்தப் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

கிளந்தானில் அமுலாக்கப்பட்ட அவசர கால சட்டம்

8 நவம்பர் 1977-ஆம் தேதி கிளந்தான் மாநிலத்தில் அவசரகால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்போது  மந்திரி பெசாராக பதவியிலிருந்து விலகுவதற்கு முகமட் நாசிர் மறுத்ததைத் தொடர்ந்து அரசியல் கலவரங்கள் அந்த மாநிலத்தில் வெடித்தன.

அதைத் தொடர்ந்துதான் நாடாளுமன்றம், அவசரகால சட்டத்தை கிளந்தான் மாநிலத்திற்கென பிரத்தியேகமாக 1977 ஆண்டில் உருவாக்கியது. இதன் மூலம் மாநிலத்தை நிருவகிக்கும் அதிகாரம் பிரதமரால் நியமிக்கப்படும் இயக்குனர் ஒருவருக்கு வழங்கப்பட்டது.

மாநில சுல்தான் வசம் சட்ட உருவாக்க அதிகாரம் வழங்கப்பட்டது.

இதன் மூலம் முகமது நாசிர் பெயரளவில் மந்திரி பெசாராக மார்ச் 1978 சட்டமன்றத் தேர்தல் வரை நீடித்தார்.

மார்ச் 1978-இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஸ் கட்சி தோற்கடிக்கப்பட்டது. துங்கு ரசாலி ஹம்சா (படம்) தலைமையிலான அம்னோ கூட்டணி பெரும்பான்மை சட்டமன்றங்களைக் கைப்பற்றி கிளந்தானில் ஆட்சி அமைத்தது.

புகைமூட்ட சூழலினால் பிறப்பிக்கப்பட்ட அவசர கால சட்டங்கள்

கடந்த காலங்களில் நாட்டில் மோசமான புகைமூட்டம் ஏற்பட்டு, காற்றின் தூய்மைக் கேடு மிக அபாயகரமான கட்டத்தை அடைந்தபோது அவசர காலம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

1997, 2005, 2013 ஆண்டுகளில் சிலாங்கூர், சரவாக், ஜோகூர் போன்ற மாநிலங்களில்  புகைமூட்டப் பிரச்சனைகளால் அவசர காலம் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.

சுதந்திரத்திற்குப் பின்னர் அமுலாக்கம் கண்ட அவசர கால சட்டங்களில் 1969-இல் மே 13 கலவரங்கள் காரணமாகக் கொண்டுவரப்பட்ட அவசர காலச்சட்டம் மட்டுமே நாடாளுமன்றத்தை முடக்கியது. அதற்கான அப்போதைய காரணங்களையும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

மற்ற அவசர கால சட்டங்கள் அனைத்துமே நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தோடு அமுலாக்கம் கண்டவை.

அதற்குப் பின்னர் இறுதியாக 2020-ஆம் ஆண்டில் மொகிதின் யாசின் பரிந்துரைத்த அவசர காலம் மட்டுமே நாடாளுமன்றத்தை முடக்கும் திட்டத்தை உள்ளடக்கியிருந்தது.

அதிலும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவை மொகிதின் யாசின் இழந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர்,  கொவிட்-19 பாதிப்புகளைக் காரணம் காட்டி, அவசரகாலம் கொண்டுவந்து, அதன் மூலம் நாடாளுமன்றத்தை முடக்கும் தவறான முன்னுதாரணத்தை செயல்படுத்தத் தயாரானார் மொகிதின் யாசின்.

நல்லவேளையாக, மலேசிய அரசியலமைப்பு சட்டத்திற்கு மதிப்பளித்து, மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு,

மாமன்னர் எடுத்திருக்கும் முடிவால் மலேசியாவில் இந்த முறை அவசர காலம் தவிர்க்கப்பட்டிருக்கிறது.

-இரா.முத்தரசன்