உள்ளூர் இயக்குநர் இந்திரன் சண்முகம் கைவண்ணத்தில் மலர்ந்த இம்மர்மத் தொடர் 22 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. இத்தொடரில் சி. குமரேசன், திலீப் குமார் மற்றும் ஆமு திருஞானம் என பல உள்ளூர் கலைஞர்கள் நடித்துள்ளனர். மலாய் தொடர் ‘கேராக் ஹாஸ்’ (Gerak Khas), அன்டர்கவர் ராஸ்கல்ஸ் (2010), மைந்தன் (2014), மயங்காதே (2016), மலாய் திரில்லர் திரைப்படம் டுகூன் (2018) மற்றும் என்னவள் (2019) போன்ற புகழ் பெற்ற உள்ளூர் திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் நடித்த பிரபல உள்ளூர் நடிகர், இயக்குனர், எழுத்தாளர் சி.குமரேசன் நடித்த முதல் உள்ளூர் தமிழ் தொடராக குருதி மழை திகழ்கிறது.
வழக்கின் பொறுப்பை ஏற்ற முதல் நாளிலேயே ஒரு கொலை ஏற்படவே கொலைகாரனை விரைவில் கைதுச் செய்வதற்கானக் கூடுதல் அழுத்தத்திற்கு ஆளாகிறார், இன்ஸ்பெக்டர் கதிர்வேல். அவரது மனைவியின் கொலை நிலைமையை மேலும் மோசமடையச் செய்கிறது. அவர் தனது சக காவல்துறை அதிகாரி, சப்-இன்ஸ்பெக்டர் எழிலுடன் (திலீப் குமார்) வழக்கை விசாரிக்கையில் இம்மோசமானத் தொடர் கொலையாளி மழை நாட்களில் மட்டும் தனது இரையை வேட்டையாடுவதைக் கண்டறிகின்றனர். தொடர் கொலையாளியை இருவரும் வெற்றிகரமாகக் கைது செய்வார்களா என்பதே இக்கதையின் முக்கிய அம்சமாகும்.