Home One Line P1 “பெரிக்காத்தான் நேஷனல் உருவானதே மகாதீரின் ஆலோசனையால்தான்” – அஸ்மின் அலி

“பெரிக்காத்தான் நேஷனல் உருவானதே மகாதீரின் ஆலோசனையால்தான்” – அஸ்மின் அலி

714
0
SHARE
Ad

கோலாலம்பூர் : பக்காத்தான் ஹரப்பான் என்ற நம்பிக்கை கூட்டணியிலிருந்து விலகி பெரிக்காத்தான் நேஷனல் என்ற தேசிய கூட்டணியை உருவாக்கும் கருத்தை முதன் முதலில் முன்மொழிந்தது அப்போதைய பிரதமர் துன் மகாதீர்தான்  என அஸ்மின் அலி மனம் திறந்து கூறியுள்ளார்.

ஸ்டார் நாளிதழுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் அஸ்மின் அலி இந்த அதிர்ச்சி தரும் கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

அந்த நேர்காணலில் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் எவ்வாறு கவிழ்ந்தது – அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பது போன்ற பல விவரங்களை அவர் பகிரங்கமாக வெளியிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

“கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி பல கட்சிகளைச் சேர்ந்த 131 நாடாளுமன்ற உறுப்பினர்களின் சத்திய பிரமாண ஆதரவு கடிதங்களை பெற்றோம். அவர்கள் அனைவரும் முன்மொழிந்தது துன் மகாதீர் பிரதமராவதற்குத்தான். தொடர்ந்து பிரதமராக மகாதீர் நீடிப்பதற்குத்தான் நாங்கள் பாடுபட்டோம். பிப்ரவரி 23-ஆம் தேதி 4 மணி அளவில் மகாதீர் 6 கட்சிகளின் தலைவர்களை சந்தித்தார். பெர்சாத்து கட்சியின் தலைவர் மொகிதின் யாசின், அம்னோ தலைவர் சாஹிட் ஹாமிடி, வாரிசான் சபா கட்சித் தலைவர் ஷாபி அப்டால், பாஸ் தலைவர் ஹாடி அவாங், சரவாக் ஜிபிஎஸ் தலைவர் அபாங் ஜோஹாரி ஆகியோருடன் நானும் அந்த சந்திப்பில் கலந்து கொண்டேன். அந்தக் கூட்டத்தில் எங்களின் முழுத் திட்டமும் மகாதீரிடம் விவரிக்கப்பட்டது” என அஸ்மின் அலி மேலும் கூறியிருக்கிறார்.

எதிர்பாராமல் பதவி விலகிய மகாதீர்

“ஆனால் அடுத்த நாள் காலையில் யாரும் எதிர்பாராத வண்ணம் துன் மகாதீர் பதவி விலகினார். அதைத்தொடர்ந்து அரசியல் நெருக்கடிக்கு நாங்கள் ஆளாகிவிட்டோம். அந்த குறுகிய நேரத்தில், கிடைத்த சிறிய இடைவெளியில் மொகிதின் யாசின் பிரதமராக நாங்கள் முயற்சி செய்தோம். அந்த வாய்ப்பை நாங்கள் பயன்படுத்தி இருக்காவிட்டால் வேறு யாராவது மாமன்னரைச் சந்தித்து தங்கள் பெரும்பான்மையை நிரூபித்து இருப்பார்கள். பிரதமராகவும் ஆகியிருப்பார்கள்”  என்றும் அஸ்மின் அலி அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

“அந்த சூழ்நிலையில் எனக்கும் மொகிதின் யாசினுக்கும் இடையில் இருந்த ஒரே தேர்வு நம்பிக்கைக் கூட்டணியை விட்டு வெளியேறுவது மட்டும் தான்” என்று கூறிய அஸ்மின் அலி அதைத் தொடர்ந்து ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிகேஆர் கட்சியை விட்டு விலகினார்.

“அதன் பின்னர் மீண்டும் பிப்ரவரி 24ஆம் தேதி நாங்கள் மகாதீரைச் சந்தித்தோம். என்ன நடந்தது என்று கேட்டோம் அதற்கிடையில் அவர் இடைக்காலப் பிரதமராக நியமிக்கப்பட்டிருந்தார். பிப்ரவரி 24 முதல் 28 வரை இரவு பகலாகப் பாடுபட்டு பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைத் திரட்டினோம்.  இறுதியாக மொகிதின் யாசினுக்கு பெரும்பான்மை கிடைத்தது. நாங்கள் குறுகிய பெரும்பான்மையில் அரசாங்கத்தை அமைத்தோம். இது தேர்தல் வழியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் அல்ல என்றாலும் ஓர் அரசியல் நெருக்கடி காரணமாக அமைக்கப்பட்ட அரசாங்கமாகும். அந்த நெருக்கடியை உருவாக்கியது மகாதீரின் பதவி விலகல் தான்” என்றும் அஸ்மின் கூறினார்.

“அன்றைய தினத்தில் மகாதீர் தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பிக்காமல் இருந்தால் இன்றுவரை அவர்தான் பிரதமராக இருந்திருப்பார். முன்பை விட மிகப்பெரிய பெரும்பான்மையோடு அவர் பிரதமராகத் தொடர்ந்து இருப்பார்” என்றும் அஸ்மின் அலி கூறியிருக்கிறார்.