Home One Line P2 மறைந்த கலைஞர் எஸ்.பி. பாலாவுக்கு வைகறை ஸ்டூடியோவின் இசை அஞ்சலி

மறைந்த கலைஞர் எஸ்.பி. பாலாவுக்கு வைகறை ஸ்டூடியோவின் இசை அஞ்சலி

647
0
SHARE
Ad

கிள்ளான் : ‘பாடும் நிலா’ என இசையுலகில் பவனி வந்த திரையுலகப் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலா மறைவு, இந்திய இசைத் துறைக்கு ஈடு இணையற்ற பேரிழப்பாகும். கடந்த 25.09.2020 ஆம் நாள் இயற்கை அன்னை அவரைத் தம்முடன் அழைத்துக் கொண்டாள்.

16 மொழிகளில் 40 ஆயிரம் பாடல்களைப் பாடிக் கோடிக்கணக்கான நெஞ்சங்களைத் தன்பால் ஈர்த்தவர் அவர். தெலுங்கைத் தாய்மொழியாய் கொண்டவர் எனினும், பாடும் மொழிகளின் இலக்கணம் உணர்ந்து துல்லியமாகப் பாடியவர். குறிப்பாகத் தமிழ் பாடல்களை உச்சரிப்பு குறையில்லாமல் பாடி, வழிகாட்டியவர். அம்மாபெரும் கலைஞருக்கு உலகளாவிய முறையில் கோடிக் கணக்கான இரசிகர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இசையுலகில் ஒரு சகாப்தமாக விளங்கிய அம்மாபெரும் கலைஞருக்கு, மலேசிய நாட்டு வைகறை ஸ்டூடியோஸ், அஞ்சலி செலுத்த ஒரு பாடலை உருவாக்கியுள்ளது. பாடலை நாட்டின் முன்னணிக் கலைஞர்களோடு வளரும் கலைஞர்களும் சேர்ந்து குரல் கொடுத்துள்ளனர். இதனில் இன்னொரு சிறப்பு என்னவெனில், தமிழகத் திரையிசையுலகில் புகழ்பெற்று விளங்கும் பழம் பெரும் பாடகர் கலைமாமணி டி.எல்.மகராஜனும் சேர்ந்திருப்பதாகும்.

#TamilSchoolmychoice

இந்த இசைப்பாடல் உருவாக்கத்திற்கு மலேசியக் கலைஞர்கள் ரகுராமன், ஜீவா, பிரித்தா பிரசாத், அல்லிமலர் மனோகரன், சகிலா இளவரசு, சர்மிளா சிவகுரு, தாரணி குமார், அருள்வேந்தன் மனோகரன், தேவராஜன் சின்னையா, கலைவாணி மற்றும் அருள் நுண்கலைப்பள்ளி மாணவர்கள் பாடியுள்ளனர். பாடகர்களுடன் பின்னணி இசை கலைஞர்கள் தொழில் நுட்பக் கலைஞர்களென சுமார் 30 கலைஞர்கள் இப்பாடல் உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மலேசியத் தமிழ் இசைப்பாடல் துறையில் அறிமுகமாகி எழுதி வரும் வாணிஶ்ரீ பாடலை எழுதியுள்ளார். பாடலுக்கு இனிய முறையில் இசைக்கூட்டி உள்ளார் இசை முரசு இளவரசு அவர்கள்.

உணர்வுகளின் வெளிப்பாடான இந்த அஞ்சலிப்பாடல், காணொலிப் பின்னணியோடு அரங்கேறவுள்ளது. பாடலுக்குரிய வரிகள் புத்தம் புது எழுத்துருவில் பதிவாகியுள்ளது. முரசு மென் பொருள்களின் வடிவமைப்பாளர் முத்து நெடுமாறன். இந்தப் புதிய எழுத்துரு வழி தம் அஞ்சலியைச் செலுத்தியுள்ளார்.

இந்த அஞ்சலிப் பாடல் உருவாக்கத்தில் பங்கேற்ற அத்தனை கலைஞர்களும் கைம்மாறு கருதாமல் முழு ஒத்துழைப்புத் தந்து பாடும் நிலா பாலா மேல் கொண்டுள்ள ஆழ்ந்த அன்பை வெளிப்படுத்தும் வகையில் தங்களின் பங்களிப்பை வழங்கினர்.

இந்த சிறப்புமிக்க பாடலை, வரும் சனிக்கிழமை 5.12.2020 ஆம் நாள் காலை 10.00 மணி முதல் வைகறை ஸடூடியோஸ் யுடியுப் வழியாக கேட்டு, எஸ்.பி.பாலா அவர்களுக்கு இசையாலேயே அஞ்சலி செலுத்தலாம்.