ஈப்போ: பேராக்கில் இன்று புதிய மந்திரி பெசார் பதவி ஏற்பு விழாவில் பேசிய சுல்தான் நஸ்ரின் ஷா, அரசாங்கம் மற்றும் மந்திரி பெசார் மாற்றத்திற்கு வழிவகுத்த அரசியல் நெருக்கடி பெருமைப்படக்கூடியதல்ல என்று தெரிவித்தார்.
மாறாக, இது நிர்வாகத்தின் தோல்வியே என்று அவர் குறிப்பிட்டார்.
14-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர், மந்திரி பெசார் தொடர்பான பதவியேற்பு விழா மூன்று முறை நடைபெற்றுள்ளதாகவும், மாநில சட்டமன்றத்தில் இதுவரை நிகழாத புதிய வரலாற்றைப் இது பதிவு செய்துள்ளதாகவும் சுல்தான் கூறினார்.
“ஆனால், இது பெருமைப்படக்கூடிய வரலாறு அல்ல. இது தோல்வியின் பிரதிபலிப்பாக வரலாற்றில் பதிவு செய்யப்படும். மக்களின் நலனுக்காக அரசை சிறந்த முறையில் நிர்வகிப்பதில் கவனம் செலுத்தத் தவறிய அரசியல்வாதிகளின் தலைமைத்துவத் தோல்வி,” என்று சுல்தான் நஸ்ரின் கூறினார்.
அனைத்து மாநில சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள மக்கள், தேசிய கூட்டணி அல்லது நம்பிக்கை கூட்டணியாக இருந்தாலும், மலாய்க்காரர்கள், பழங்குடியினர், சீனர்கள் மற்றும் இந்தியர்களோ, அவர்கள் ஒரே தேவைகளைக் கொண்டிருக்கிறார்கள் என்று சுல்தான் குறிப்பிட்டார்.
அவர்களுக்கான துன்பங்கள், நம்பிக்கைகள் ஒன்றே, மேலும் அவர்கள் கவனத்தை எதிர்பார்ப்பார்கள் என்று அவர் கூறினார்.
“குறைந்த வருமானம் பெறுபவர்கள், ஏழைகள், கொவிட்-19 தொற்றுநோயால் அதிகளவில் வேலை மற்றும் வருமானத்தை இழந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இந்த அரசியல் போராட்டத்தில் சிக்கிக் கொள்ளக்கூடாது,” என்று சுல்தான் நினைவூட்டினார்.