Home நாடு “பேராக் மாநில அளவிலான ஆரோக்கியமான தீபாவளி கொண்டாட்டம்” – சிவநேசன் தகவல்

“பேராக் மாநில அளவிலான ஆரோக்கியமான தீபாவளி கொண்டாட்டம்” – சிவநேசன் தகவல்

167
0
SHARE
Ad

(சிவா லெனின்)
ஈப்போ: பேராக் மாநில நிலையிலான தீபாவளி கொண்டாட்டம் இம்முறை ஆரோக்கியத்திற்கும் சுகாதார நிலையிலான புரிதலுக்கும் வழி வகுக்கும் நிலையில் கொண்டாடப்படவிருப்பதாக மாநில சுகாதாரம்,மனிதவளம்,ஒருமைப்பாடு மற்றும் இந்தியர் நலவாழ்வுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் அ.சிவநேசன் குறிப்பிட்டார்.

இம்முறை கொண்டாடப்படும் மாநில அளவிலான தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு அரசாங்கத்தின் சீனி பயன்பாட்டை குறைக்கும் இலக்கை கொண்டிருக்கும். அதனை மெய்ப்பிக்கும் நிலையில் தேநீர்,இனிப்பு பானங்களில் சீனியின் அளவு குறைவாகவே இருக்கும். அதேவேளையில்,அதிக எண்ணெய் சார்ந்த உணவுகளும் தவிர்க்கப்பட்டிருக்கும் என்றார்.

எதிர்வரும் நவம்பர் 23-ஆம் தேதி, மதியம் 3.00 மணிக்கு ஈப்போ இண்ட்ரா மூலியா அரங்கத்தில் நடைபெறவிருக்கும் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பின் முதன்மை பிரமுகராய் மாநில பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா தம்பதியினர், ராஜா மூடா தம்பதியினர், ராஜா டி ஹீலிர் தம்பதியினர் மற்றும் அரச குடும்பத்தை சார்ந்தவர்களும் கலந்து கொள்கிறார்கள் என்பதையும் சிவநேசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

#TamilSchoolmychoice

அதேவேளையில், பேராக் மாநில மந்திரி பெசாருடன் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் இம்மாநிலத்தின் 24 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் அரசு மற்றும் தனியார் இலாகாவினரும் கலந்து கொள்ளும் இந்நிகழ்ச்சியில் பொது மக்களும் திரளாக கலந்து சிறப்பிக்க சிவநேசன் அழைப்பு விடுத்தார்.

தொடர்ந்து பேசிய அவர் மாநில மக்களின் ஆரோக்கியத்தில் மாநில அரசாங்கம் தனித்துவ அக்கறையை கொண்டிருப்பதால் அனைத்து உணவிலும் சீனி அளவை குறைக்கும் நடவடிக்கையில் தீவிர முனைப்பு காட்டப்பட்டு வருவதாகவும் கூறினார். நாட்டில் ஆறில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருப்பதால் சீனியின் அளவை குறைப்பதில் நாம் பெரும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் சிவநேசன் கோரிக்கை விடுத்தார்.

எனவே,மாநில அரசாங்கம் மகிழ்ச்சியான சூழலில் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பை கொண்டாட ஆயத்தமாகி வரும் நிலையில் பொது மக்களும் திரளாக கலந்து கொள்வதோடு மட்டுமின்றி பல இனம் கலந்து கொள்ளும் இந்நிகழ்வில் மலேசியர்களுக்கே உரிய ஒற்றுமை,புரிந்துணர்வு,நல்லிணக்கம் என தனித்துவ மாண்போடு இந்த தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் தனித்துவம் காட்டுமாறும் அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.