கோலாலம்பூர்: மடானி ஒற்றுமை அரசாங்கத்தின் தீபாவளி பொது விருந்துபசரிப்பு தீபாவளி தினத்தன்று (வியாழக்கிழமை 31 அக்டோபர் 2024) கோலாலம்பூரிலுள்ள செந்துல் டிபோட் என்னும் இடத்தில் பிரம்மாண்டமான அளவில் நடத்தப்பட்டது.
பல இனங்களையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களுடன் அமைச்சர்களும், துணையமைச்சர்களும் அரசாங்க அதிகாரிகளும் இந்த நிகழ்ச்சியில் திரளாகப் பங்கேற்றனர். இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோபிந்த் சிங் தலைமையிலான இலக்கவியல் (டிஜிடல்) அமைச்சு செய்திருந்தது.
சிறப்பு விருந்தினராக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கலந்து கொண்டு உரையாற்றினார். துணைப்பிரதமர் சாஹிட் ஹாமிடி, அமைச்சர்கள் கோபிந்த் சிங், தெங்கு சாப்ருல், சாம்ரி அப்துல் காதிர், துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி, நாடாளுமன்ற அவைத் தலைவர் டான்ஸ்ரீ ஜோஹாரி அப்துல் ஆகியோரும் தீபாவளி பொது விருந்துபசரிப்பில் கலந்து கொண்டனர்.
நிறைய அளவில், பலதரப்பட்ட மலேசிய, இந்திய உணவுகள் பொதுமக்களுக்கு இந்த நிகழ்ச்சியில் பரிமாறப்பட்டன. பொதுமக்களை மகிழ்விக்க இந்திய பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளும், பாடல்களும் இடம் பெற்றன.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அன்வார் இருளைப் போக்கி ஒளியைப் பரப்புவது தீபாவளி என்பது பாரம்பரிய சித்தாந்தம், நம்பிக்கை – அதற்கேற்ப மக்களின் வாழ்வில் ஒளியேற்ற மடானி அரசாங்கம் தொடர்ந்து பாடுபடும் என உறுதியளித்தார்.