Home Photo News அமெரிக்க அதிபர் தேர்தல் சுவாரசியங்கள் -5 : வெற்றி பெற்றாலும் 2 ½ மாதங்கள் காத்திருக்கும்...

அமெரிக்க அதிபர் தேர்தல் சுவாரசியங்கள் -5 : வெற்றி பெற்றாலும் 2 ½ மாதங்கள் காத்திருக்கும் புதிய அமெரிக்க அதிபர்!

229
0
SHARE
Ad

(அமெரிக்க அதிபர் தேர்தல் சுவாரசியங்கள் கட்டுரைத் தொடரில், அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் வெற்றி பெற்ற பின்னரும் ஏன் இரண்டரை மாதங்கள் பதவியேற்கக் காத்திருக்க வேண்டும்? – என்பது போன்ற சுவையானத் தகவல்களை விவரிக்கிறார் இரா.முத்தரசன்)

  • வாக்களிப்பு நவம்பர் 5 – பதவி ஏற்பதோ ஜனவரி 20! ஏன் இந்த இரண்டரை மாத இடைவெளி?
  • அதிபர் அமைச்சரவை அமைப்பதற்கும், தற்காலிக அலுவலக செயல்பாடுகளுக்கும் மில்லியன் கணக்கில் அரசாங்கமே நிதி வழங்கும்
  • 1937-வரை மார்ச் மாதத்தில்தான் அமெரிக்க அதிபர் பதவியேற்றார்
  • 2000-ஆம் ஆண்டில் சுயேட்சை அதிபர் வேட்பாளராகப் போட்டியிட்ட டிரம்ப்!

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்களிப்பு, தேர்தல் நடைமுறை எப்படி என்று கடந்த கட்டுரையில் கண்டோம். வாக்களிப்பு நடந்து முடிந்ததும், வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டதும் என்ன நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன என்பதைப் பார்ப்போம்.

அதிபர் தேர்தலில் பல வேட்பாளர்கள் களம் கண்டாலும், போட்டி என்பது ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி இரண்டுக்கும் இடையில்தான்! தேர்தலுக்கு சுமார் 1 வருடத்திற்கு முன்பே இந்த இரண்டு கட்யியிலும் போட்டியிட ஆர்வம் கொண்ட வேட்பாளர்கள் தங்களைப் பதிவு செய்து கொண்டு தங்களின் கட்சியினரிடையே பிரச்சாரத்தைத் தொடங்குவர்.

யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். நம் நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள், எங்கே ஒருவன் தலைவர் பதவிக்குப் போட்டிக்கு வந்து விடுவானோ என பயந்து பல கட்டுப்பாடுகளையும், நிபந்தனைகளையும் விதிப்பது போல் அமெரிக்காவில் இந்த இரண்டு கட்சிகளும் வேட்பாளர்களுக்கு தடை சொல்வதில்லை.

#TamilSchoolmychoice

ஒவ்வொரு கட்சியிலும் சுமார் 10 முதல் 20 பேர்வரை பிரச்சாரக் களத்தில் இறங்குவர். யாருக்கு கட்சியில் ஆதரவு கிடைக்கிறதோ அவர்களே இறுதிவரை களத்தில் நிற்பர். தேவை நாடு முழுக்க பிரச்சாரம் செய்ய பணம் மட்டும்தான்!

மில்லியன் கணக்கான டாலர்கள் செலவு செய்ய தகுதி கொண்டவர்கள் மட்டுமே போட்டியில் இறங்குவார்கள். இதனால் பணக்காரர்கள் மட்டுமே அதிபர் தேர்தலில் ஆதிக்கம் செய்கின்றனர் என்ற குற்றச்சாட்டுகளும் எழுவதுண்டு. பொருத்தமான உதாரணம் டொனால்ட் டிரம்ப்.

சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்ட
டொனால்ட் டிரம்ப்

டொனால்ட் டிரம்ப் குடியரசுக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு 2016-ஆம் அதிபராக வென்றவர் என்றாலும் 2000-ஆம் ஆண்டில் ரிபோர்ம் கட்சியின் (Reform Party) சார்பில் அதிபர் வேட்பாளராகப் போட்டியிட்டவர் என்பது பலர் அறியாத தகவல். அந்தத் தேர்தலில் மில்லியன் கணக்கில் அவர் தேர்தல் செலவு செய்தார். ஒரு கட்டத்தில் அவருக்கென 7 விழுக்காட்டு மக்கள் ஆதரவு இருக்கிறது என்றும் கூறப்பட்டது. இருந்தாலும் இறுதியில் போட்டியில் இருந்து விலகிக் கொண்டார்.

அந்த அனுபவங்கள் மூலம், அமெரிக்க அரசியலில் அதிபராக வேண்டும் என்றால் இரண்டு முக்கியக் கட்சிகளில் ஏதாவது ஒன்றில் இணைய வேண்டும் என முடிவெடுத்த அவர், குடியரசுக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

அமெரிக்க மக்களிடையே பிரபலமாக பல முன்னெடுப்புகளை எடுத்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நடத்தினார். தனது நிறுவனத்தில் வேலை செய்யும் நபர் ஒருவரை எவ்வாறு தேர்ந்தெடுப்பேன் என்பது குறித்து அவர் நடத்திய ‘தி அப்ரெண்டிஸ்’ (The Apprentice) தொடர் தொலைக்காட்சி நிகழ்ச்சி அமெரிக்காவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரபலமானது.

அதைத் தொடர்ந்தே, 2016-இல் குடியரசுக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டார். அவரின் பண பலத்துடன் போட்டியிட முடியாமல் குடியரசுக் கட்சியின் மற்ற வேட்பாளர்கள் ஒதுங்கிக் கொள்ள, இறுதியில் அமெரிக்காவின் 45-வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இப்போது மீண்டும் 2024-இல் குடியரசுக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இப்போது அவரின் பணபலத்தோடு ஏற்கனவே அதிபராக வெற்றி பெற்றவர் என்ற பிரபல்யமும் அவருக்கு சேர்ந்து கொண்டது.

பொதுமக்களிடம் பணம் வசூலிக்கலாம்

பணபலம் அமெரிக்க அரசியலில் தவிர்க்க முடியாதது என்றாலும், வேட்பாளராகப் போட்டியிடுபவர் கட்சியிலும், பொதுமக்களிடத்திலும் பகிரங்கமாக நிதி திரட்டலாம். இதனால் திறமையான வேட்பாளர்களும் மக்களின் நிதி ஆதரவைக் கொண்டு போட்டியில் குதிக்க முடியும்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா

அப்படித்தான் 2008-இல் போட்டியிட்ட பராக் ஒபாமா அதிகம் பணவசதியோ, குடும்ப அரசியல் பின்புலமோ இல்லாத வேட்பாளராகப் பார்க்கப்பட்டார். அதிலும் முதல் கறுப்பின வேட்பாளர் என்ற முத்திரை வேறு. இருந்தாலும் ஜனநாயகக் கட்சியின் மற்ற வேட்பாளர்கள் – ஹிலாரி கிளிண்டன் போன்ற பிரபலங்கள் – ஒதுங்கிக் கொண்டு அவருக்கு ஆதரவு நல்கினர். ஒபாமா வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது என பொதுமக்களும், குறிப்பாக கறுப்பின பணக்காரர்கள் நிதியை வாரி வழங்க, ஒபாமாவும் அதிபராக வெற்றி பெற முடிந்தது. இவ்வாறுதான் பணக்கார வேட்பாளர்களின் ஆதிக்கத்தை அமெரிக்க அரசியல் நடைமுறை முறியடிக்கிறது.

டிரம்புக்கு 70 மில்லியன் டாலர் வழங்கி ஆதரவளித்த வணிகர் எலோன் மஸ்க்

இன்னொரு உதாரணம், டெஸ்லா மின்சாரக் கார்கள் தயாரிக்கும் தொழிலதிபர் எலோன் மஸ்க் டிரம்புக்கு பகிரங்க ஆதரவு தெரிவித்திருப்பதோடு, 70 மில்லியன் டாலர் நன்கொடையும் வழங்கியிருக்கிறார். இதன்மூலம் டிரம்புக்கு மிக அதிகமான நன்கொடை வழங்கியவர் என்ற பெருமையையும் பெறுகிறார் எலோன் மஸ்க்!

வாக்களிப்புக்கும் பதவியேற்புக்கும் ஏன் இந்த இடைவெளி?

அமெரிக்க அதிபர் வாக்களிப்பு முடிந்ததும் வாக்குகளை எண்ணி முடித்து வெற்றியாளரை நிர்ணயிக்க சில நாட்கள் பிடிக்கின்றன. காரணம், சிக்கலான நடைமுறைகள். மாநிலம் வாரியாக வாக்காளர்களின் வாக்குகள் எண்ணப்பட்டு, ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல் வாக்குகளை யார் பெறுகிறார்கள் என்பது நிர்ணயம் செய்யப்படும். மொத்தமுள்ள 538 தேர்தல் வாக்குகளில் 270-க்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெறுபவர்கள் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

எனினும் அவர் உடனடியாகப் பதவியேற்க அனுமதிக்கப்படுவதில்லை. அமெரிக்க சட்டங்களின்படி ஜனவரி 20-ஆம் தேதிதான் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் அதிபர் பதவியேற்க முடியும்!

ஜனவரி 20, ஞாயிற்றுக்கிழமையாக இருந்தால், அடுத்த நாள் ஜனவரி 21-ஆம் தேதிதான் அவர் பதவியேற்பார். கடந்த காலத்தில் சில முறை இத்தகைய தேதி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

நவம்பர் 5-ஆம் தேதிதான் அமெரிக்க அதிபருக்கான வாக்களிப்பு என்றாலும் சில மாநிலங்களில் முன்கூட்டியே வாக்களிக்கலாம்.

1937-ஆம் ஆண்டுவரை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர், நவம்பர் தேர்தலுக்குப் பின்னர் சில மாதங்கள் கழித்து மார்ச் மாதத்தில்தான் பதவியேற்றார். காரணம், வாக்குகளை எண்ணுவதற்கு அதிக நாட்கள் பிடித்தன. பின்னர் சட்டத் திருத்தங்கள் செய்யப்பட்டு ஜனவரி 20, அதிபர் பதவியேற்கும் நாள் என்பது நிர்ணயிக்கப்பட்டது.

அதிபர் பதவியேற்க, இந்த இரண்டரை மாத இடைவெளிக்குப் பொருத்தமான காரணங்கள் உண்டு. நம் நாட்டைப் போல் அமைச்சரவை அமைப்பது அமெரிக்க அரசியலில் அவ்வளவு சுலபமல்ல. ஒவ்வொரு அமைச்சர் வேட்பாளரின் பின்னணிகளையும், தகுதிகளையும் அமெரிக்க நாடாளுமன்றம் ஆராயும். அமெரிக்க நாடாளுமன்றம் ஏதாவது காரணங்களுக்காக ஒருவரை அமைச்சராக நியமிக்க மறுத்தால் அவர் பதவியேற்க முடியாது. அமெரிக்காவில் அமைச்சுப் பொறுப்புகளை ஏற்பவர்களை அமைச்சர்கள் என அழைப்பதில்லை. மாறாக செயலாளர் என அவர்களைப் பெயர் குறிப்பிடுகிறார்கள். உதாரணத்திற்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ‘செக்ரடரி ஆஃப் ஸ்டேட்’ (Secretary of State) என அழைக்கப்படுகிறார். தற்காப்பு அமைச்சர் செக்ரடரி ஆஃப் டிஃபென்ஸ் எனப் பெயர் குறிப்பிடப்படுகிறார்.

அமெரிக்க மாநிலங்கள் வாரியாக தேர்தல் வாக்குகளின் எண்ணிக்கையைக் காட்டும் வரைபடம்

இந்த முறை நவம்பர் 5-ஆம் தேதி தேர்தல் வாக்களிப்பு என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. எனினும் சில மாநிலங்களில் முன்கூட்டியே ஒருவர் வாக்களிக்க முடியும். வாக்களிப்பு முடிந்ததும், வெற்றி பெறுபவர் எதிர்வரும் 2025, ஜனவரி 20-ஆம் தேதிவரை  அதிபராகப் பதிவியேற்கக் காத்திருக்க வேண்டும். இந்த இரண்டரை மாத இடைவெளியில் அதிபராக வெற்றி பெற்றவர் தனது அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் பணிகளில் ஈடுபடுவார். அதற்காக சிறப்பு அலுவலகம் ஒன்று அமைக்கப்படும். இந்தப் பணிகளுக்காக தேர்தல் ஆணையம் தனியாக அவருக்கு மில்லியன் கணக்கான டாலர்களை வழங்கும்.

அமெரிக்காவில் இதுவரை 60 அதிபர் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இந்த முறை தேர்ந்தெடுக்கப்படுபவர் 47-வது அதிபராவார்.

நவம்பர் 5 முதல் ஜனவரி 20 வரையிலான இடைப்பட்ட காலத்தில், பொதுவாக நடப்பு அதிபர் – அதாவது இந்த முறை ஜோ பைடன் – எந்தவிதமான முக்கிய முடிவுகளும் எடுக்கமாட்டார். குறிப்பிடத்தக்க நியமனங்கள் எதனையும் செய்ய மாட்டார். புதிய அதிபரின் முடிவுக்காக விட்டு விடுவார்.

-இரா.முத்தரசன்

தொடர்புடைய மற்ற கட்டுரைகளின் இணைப்பு:

அமெரிக்க அதிபர் தேர்தல் சுவாரசியங்கள் -1: வாக்களிப்பு ஏன் நவம்பர் மாதத்தில் மட்டும் நடத்தப்படுகிறது? 

அமெரிக்க அதிபர் தேர்தல் சுவாரசியங்கள் -2; தொலைக்காட்சி விவாதங்கள் ஓர் அங்கமாக மாறியது எப்படி? 

அமெரிக்க அதிபர் தேர்தல் சுவாரசியங்கள் -3 : கமலா ஹாரிஸ் தன் தந்தையாரைப் பற்றி அதிகம் பேசாதது…

அமெரிக்க அதிபர் தேர்தல் சுவாரசியங்கள் – 4 : அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்களிப்பு நடைமுறை எப்படி?