Home Photo News அமெரிக்க அதிபர் தேர்தல் சுவாரசியங்கள் -3 : கமலா ஹாரிஸ் தன் தந்தையாரைப் பற்றி...

அமெரிக்க அதிபர் தேர்தல் சுவாரசியங்கள் -3 : கமலா ஹாரிஸ் தன் தந்தையாரைப் பற்றி அதிகம் பேசாதது ஏன்?

259
0
SHARE
Ad
கமலா ஹாரிஸ்

(அமெரிக்க அதிபர் தேர்தலில் மையப் புள்ளி விவாதங்களாக உருவெடுத்துள்ளவை ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிசின் பூர்வீகப் பின்புலங்கள். இந்தியத் தாயார் கறுப்பினத் தந்தை. தாயாரின் தியாகங்களையும் அவரின்  தந்தையார் கோபாலன் குறித்தும் தனது இந்திய பாரம்பரியம் குறித்தும் அடிக்கடி பேசும் கமலா, தந்தையாரைப் பற்றி மட்டும் அதிகம் பேசாமல் தவிர்ப்பது ஏன்? பின்னணிகளை விவரிக்கிறார் இரா.முத்தரசன்)

  • துணையதிபர் வேட்பாளர்களின் தொலைக்காட்சி விவாதம் வெற்றி யாருக்கு?
  • தாயைப் பற்றி உருகும் கமலா, தந்தையாரைப் பற்றி அதிகம் பேசாதது ஏன்?
  • கமலா இல்லத்திலிருந்து 2 மைல் தூரத்தில் வசிக்கும் தந்தையார் ஹாரிஸ்.

துணையதிபர் வேட்பாளர்களின்
தொலைக்காட்சி விவாதம் எப்படி
?

ஜே.டி.வான்ஸ் (இடது) – டிம் வால்ஸ் (வலது)

கடந்த கட்டுரையில் அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரங்களில் தவிர்க்க முடியாத அங்கமாகியிருக்கும் தொலைக் காட்சி விவாதங்கள் குறித்துப் பார்த்தோம். அதிபர் வேட்பாளர்களுக்கிடையிலான விவாதம் போலவே துணையதிபர் வேட்பாளர்களுக்கிடையிலும் தொலைக்காட்சி விவாதம் ஒன்றும் கடந்த செவ்வாய்க்கிழமை அக்டோபர் 1-ஆம் தேதி நடைபெற்றது.

கமலா பெயர் குறிப்பிட்டிருக்கும் துணையதிபர் வேட்பாளர் மினசோட்டா மாநிலத்தின் ஆளுநர் (கவர்னர்) டிம் வால்ஸ். டிரம்ப் தனது துணையதிபராக அறிவித்திருக்கும் வேட்பாளர் ஓஹையோ மாநிலத்தின் செனட்டர் ஜே.டி.வான்ஸ்.

இரு துணையதிபர் வேட்பாளர்களுக்கிடையிலான இந்த விவாதத்தை யார் திறமையாகக் கையாண்டது? யாருக்கு வெற்றி? என்பதுதான் கடந்த ஒருவாரமாக நிகழ்ந்து கொண்டிருக்கும் ஊடக விவாதம்!

#TamilSchoolmychoice

இருவருமே சரி சமமாக விவாதித்தனர் – ஒருவரை இன்னொருவர் மிஞ்சும் அளவுக்கு இருவருமே பிரகாசிக்கவில்லை என்பதுதான் பொதுவான முடிவு.

டிரம்பின் பிரச்சனையான கடந்த காலத்தைத் தற்காப்பதும் – எதிர்காலத்தில் அவர் எப்படி செயல்படுவார் என்பதை உறுதியாக சொல்ல முடியாததும் – தொலைக்காட்சி விவாதத்தில் வான்ஸ் எதிர்நோக்கிய பின்னடைவுகள் – என்பது பார்த்தவர்களின் கருத்து!

டிரம்ப் துணையதிபர் வான்ஸ் மனைவி இந்தியர்!

டிரம்பின் துணையதிபர் வேட்பாளர் வான்ஸ் – மனைவி உஷாவுடன் – அன்றும் இன்றும்…

இந்த முறை அமெரிக்க அதிபர் தேர்தலில் மையம் கொண்டிருக்கும் வாதம் இந்திய வம்சாவளியினரின் வாக்குகள். கமலாவின் பின்புலம் தெரிந்ததுதான் என்றாலும், டிரம்ப்பின் துணையதிபர் வேட்பாளர் ஜே.டி.வான்சின் மனைவி ஓர் இந்தியர் என்பது இன்னொரு சுவாரசியம்.

உஷா பாலா சிலுக்குரி – இதுதான் வான்ஸ் மனைவியின் பெயர். இப்போது உஷா வான்ஸ் என பிரச்சாரங்களில் பெயர் குறிப்பிடப்படுகிறார். ஆந்திராவில் இருந்து அமெரிக்காவில் குடியேறிய தெலுங்கு பிராமண வம்சாவளி பெற்றோருக்குப் பிறந்தவர். யேல் பல்கலைக் கழகத்தில் சட்டம் படித்தவர். வான்சும் யேல் பல்கலைக் கழகத்தில் படித்தவர். அங்கு படிக்கும்போது காதல் – பின்னர் திருமணம். இப்போது 3 குழந்தைகள்.

தன் கணவர் அரசியலில் இந்தளவுக்கு உயரத்தைத் தொட உஷாவும் ஒரு காரணம் என்கிறார்கள். தொலைக்காட்சி விவாதத்திற்கு உஷாதான் வான்சுக்கு பயிற்சி கொடுத்தார் – அதனால்தான் வான்ஸ் திறமையாக வாதிட்டார் – என்ற செய்தியும் உலா வருகிறது.

கமலா ஹாரிசுக்கு விழப்போகும் இந்திய வாக்குகளை முறியடிக்கும் வியூகமாகத்தான் டிரம்ப், இந்திய மனைவியைக் கொண்ட செனட்டர் ஒருவரைத் தேடிப்பிடித்து  தனது துணையதிபர் வேட்பாளராகப் பெயர் குறிப்பிட்டிருக்கிறார் என்பதை விளக்கத் தேவையில்லை!

கமலா, தன் தந்தையாரைப் பற்றி அதிகம் பேசாதது ஏன்?

கமலாவின் தந்தையார் டொனால்ட் ஹாரிஸ்

கமலா ஹாரிஸ் தந்தையார் டொனால்ட் ஜே.ஹாரிஸ். கமலா துணையதிபராக தங்கியிருக்கும் வாஷிங்டனில் உள்ள அதிகாரத்துவ மாளிகையில் இருந்து சுமார் 2 மைல் தூரத்தில்தான் – தனது இரண்டாவது மனைவியுடன் – வசிக்கிறார் கமலாவின் தந்தை. எனினும் தந்தையும் மகளும் பேசிக் கொள்வதில்லை. தொடர்பில் இல்லை.

தனது தாயார் சியாமளா கோபாலன் குறித்தும் தனது இந்திய உறவினர்கள் குறித்தும் – குறிப்பாக தனது தாத்தா கோபாலன் பற்றியும் நிறைய சிலாகித்துப் பேசியிருக்கிறார் கமலா. ஆனால், அவரின் தந்தையாரைப் பற்றி அதிகம் அவர் பேசுவதில்லை.

கமலாவின் பெற்றோருக்கு இடையில் நிகழ்ந்த கசப்பான விவாகரத்து விவகாரங்கள் – அதைத் தொடர்ந்து இரண்டு பெண் பிள்ளைகளுகளுக்காக அவர்கள் நடத்திய போராட்டம் – இவைதான் தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான விரிசலுக்கான காரணங்கள்.

கமலா ஹாரிஸ் பெற்றோர் – இளம் வயதில்…

எனினும், கமலா 2016-இல் செனட்டரான போதும், பின்னர் துணையதிபர் வேட்பாளரானபோதும், வென்றபோதும், அவருக்கு வாழ்த்து தெரிவித்தார் ஹாரிஸ்.

கமலாவின் பெற்றோர்கள் சியாமளா – டொனால்ட் ஹாரிஸ் இடையிலான விவாகரத்து 1972-ஆம் ஆண்டில் நடைபெற்றபோது மூத்த மகளான கமலாவுக்கு எட்டே வயதுதான்! கமலாவுக்கு இளைய தங்கை மாயா!

இரண்டு மகள்களை யார் வசம் வைத்திருப்பது என்பது குறித்து எழுந்த சட்டப் போராட்டங்களினால், தனது மகள்களுடனான நெருக்கமான உறவு முறிந்தது என ஹாரிஸ் தெரிவித்திருக்கிறார்.

தற்போது 86-வது வயதில் ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தின் கௌரவ பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.

கமலா சிறுமியாக இருந்தபோது ஊக்கம் கொடுத்த தந்தை

டொனால்ட் ஹாரிஸ் ஜமைக்காவைச் சேர்ந்தவர். பொருளாதாரம் படிக்க அமெரிக்கா வந்தவர். கமலாவின் தாயார் சியாமளா தனது 19-வது வயதில் தமிழ் நாட்டிலிருந்து உயர் கல்வியைத் தொடர்வதற்காக அமெரிக்கா வந்தார். கலிபோர்னியா பெர்க்லி பல்கலைக் கழகத்தில் டொனால்ட் ஹாரிசைச் சந்தித்த கமலா அவர் மீது காதல் வயப்பட்டார்.

1960-ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவையே உலுக்கிக் கொண்டிருந்தன மனித உரிமைகளுக்கான போராட்டங்கள். அந்தப் போராட்டக் களத்தில் ஈடுபட்டபோதுதான் தனது பெற்றோர்கள் காதலால் இணைந்தனர் என்று கமலா ஹாரிஸ் கூறியிருக்கிறார்.

இளம் வயதிலேயே தனது தாயார் விவாகரத்து பெற்று, தன்னையும் தனது தங்கையையும் பல்வேறு பிரச்சனைகளுக்கிடையில் அவர் வளர்த்ததை நெகிழ்ச்சியுடன் பல தருணங்களில் நினைவுபடுத்தியிருக்கிறார் கமலா. 2009-இல் புற்று நோயால் மரணமடைந்தார் கமலாவின் தாயார் சியாமளா.

பிரிந்துவிட்டாலும் எனது மகள்கள் மீதான எனது அன்பை நான் இன்னும் விட்டுக் கொடுக்கவில்லை – தந்தை என்ற முறையிலான கடமைகளில் இருந்து தவறியதில்லை – என ஹாரிஸ் 2018-இல் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

தனது மகளுக்காகப் பெருமைப்படுவதாகவும் அதே வேளையில் விவாகரத்துப் பிரிவினையால் ஏற்பட்ட கசப்புகளைக் கொண்டிருப்பதாகவும் டொனால்ட் ஹாரிஸ் கூறியிருக்கிறார்.

தந்தையாரைப் பற்றி பொதுவெளியில் அதிகம் கருத்து கூறாவிட்டாலும், தனது சுயசரிதை நூலில் தந்தையாருடனான ஒரு சம்பவத்தை விவரித்திருக்கிறார் கமலா.

ஒருமுறை சிறுமியான கமலா விளையாட்டு மைதானத்தில் ஓட முற்பட்டபோது, தடுத்த மனைவி சியாமளாவைப் பார்த்து, “அவளை ஓடவிடு சியாமளா! அவள் இஷ்டம்போல் ஓடட்டும்” என்றாராம் தந்தை ஹாரிஸ்.

பின்னர் கமலாவைப் பார்த்து “ஓடு கமலா ஓடு! எவ்வளவு வேகமாக ஓட முடியுமோ ஓடு! அஞ்சாதே!” என்றாராம்.

தந்தையாருடன் பேச்சுவார்த்தையில்லை! தொடர்பில்லை! என்றாலும் சிறுமியாக இருந்தபோது, அந்த தந்தை தந்த ஊக்குவிப்புக்கு ஏற்ப அரசியலில் நீண்ட தூரம் ஓடி – இன்று அமெரிக்காவின் உச்சப் பதவியான அதிபர் பதவிக்கே குறி வைத்திருக்கிறார் கமலா!

தனது மகளின் அரசியல் ஓட்டம் வெற்றியடையுமா என்பதைக் காண ஆவலுடன் காத்திருக்கிறார் ஹாரிஸ்! ஆயிரம்தான் இருந்தாலும் தன் காதலுக்குப் பிறந்த அன்பு மகளல்லவா!

-இரா.முத்தரசன்