Home Photo News அமெரிக்க அதிபர் தேர்தல் சுவாரசியங்கள் – 4 : அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்களிப்பு நடைமுறை...

அமெரிக்க அதிபர் தேர்தல் சுவாரசியங்கள் – 4 : அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்களிப்பு நடைமுறை எப்படி?

256
0
SHARE
Ad

(அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்த சுவாரசியங்கள் கட்டுரைத் தொடரில் அமெரிக்க அதிபர் தேர்ந்தெடுக்கப்படும் சிக்கலான வாக்களிப்பு நடைமுறை எப்படி என்பதை விவரிக்கிறார் இரா.முத்தரசன்)

  • அதிபர் தேர்தலில் வாக்களிப்பது கட்டாயமா?
  • அமெரிக்காவிலேயே அதிக தேர்தல் வாக்குகளைக் கொண்டது கலிபோர்னியா மாநிலம்!
  • மொத்தம் 538 தேர்தல் வாக்குகள்! வெற்றி பெற 270 பெற வேண்டும்.

மற்ற உலக நாடுகளில் பின்பற்றப்படாத புதுமையான – குழப்பமான – சிக்கலான – முறையில் அமெரிக்க அதிபர் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் பொதுமக்கள் நேரடியாக அதிபர் வேட்பாளருக்கு வாக்களித்தாலும், பெரும்பான்மை வாக்குகள் பெறுபவர் அதிபராவதில்லை. மாறாக, ஒரு சிக்கலான நடைமுறையின் கீழ் அமெரிக்க அதிபர் தேர்ந்தெடுக்கப்படுகின்றார். இந்தத் தேர்தல் நடைமுறைக்கு வரலாற்றுபூர்வமான, பாரம்பரியமான பல காரணங்கள் உள்ளன.

இப்போதைக்கு அமெரிக்க அதிபர் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பதை மட்டும் பார்ப்போம்!

மாநிலங்களுக்கான தேர்தல் வாக்குகள் ஒதுக்கீடு

#TamilSchoolmychoice

அமெரிக்காவிலுள்ள மொத்த மாநிலங்கள் 50. அந்த 50 மாநிலங்களுக்கும் அந்தந்த மாநிலங்களின் மக்கள் தொகையைப் பொறுத்து தேர்தல் வாக்குகள் ஒதுக்கப்படுகின்றன. எலெக்டோரல் காலேஜ் (Electoral College) என அழைக்கப்படும் இந்த வாக்குகளின் மொத்த எண்ணிக்கை 538 ஆகும். இதே எண்ணிக்கையில்தான் நாடாளுமன்ற, செனட் அவையின் உறுப்பினர்களும் இருப்பார்கள்.

இதன்படி அமெரிக்க காங்கிரஸ் அவையில்-அதாவது நாடாளுமன்றத்தில் – 435 பேர் இருப்பார்கள். அமெரிக்க நாடாளுமன்ற மேலவையில் செனட்டர்கள் 100 பேர் இருப்பார்கள். கொலம்பியா வட்டாரத்திற்கு மூன்று தேர்தல் வாக்குகள் ஒதுக்கப்படுகின்றன. ஆக மொத்த தேர்தல் வாக்குகளின் எண்ணிக்கை 538.

ஒவ்வொரு மாநிலமும் இரண்டு செனட்டர்களை தேர்ந்தெடுப்பார்கள். அதன்படி 50 மாநிலங்கள், தலா 2 செனட்டர் என மொத்தம் 100 செனட்டர்கள் செனட் அவையில் பதவி வகிப்பார்கள்.

உதாரணமாக கலிபோர்னியா மாநிலத்தை எடுத்துக் கொண்டால் அதன் மக்கள் தொகை அடிப்படையில் அம்மாநிலத்திற்கு 54 தேர்தல் வாக்குகள் உள்ளன. இதன்படி இரண்டு செனட்டர்கள், 52 காங்கிரஸ் அவை உறுப்பினர்கள் அம்மாநிலத்தைப் பிரதிநிதிப்பார்கள். செனட் என்று வரும்போது சிறிய மாநிலமாக இருந்தாலும் 2 செனட்டர் பதவிகள் ஒதுக்கப்படும். காங்கிரஸ் அவை உறுப்பினர்களின் எண்ணிக்கை மட்டுமே மக்கள் தொகையைக் கொண்டு நிர்ணயிக்கப்படும்.

நாம் ஏற்கனவே முந்தைய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டதுபோல் ஒரு வாக்காளர் அதிபருக்கு மட்டுமே வாக்களிக்கிறார். துணை அதிபர் வேட்பாளருக்கு வாக்களிப்பதில்லை. அதிபர் வேட்பாளர் வெற்றி பெற்றார், தன் துணையதிபராக, அவர் பெயர் குறிப்பிடும் துணையதிபர் வேட்பாளர், இயல்பாகவே அடுத்த துணையதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு விடுவார்.

வாக்களிப்பு முடிந்ததும் ஒரு மாநிலத்தில் எந்த வேட்பாளருக்கு அதிக வாக்குகள் கிடைக்கிறதோ  அந்த மாநிலத்தின் தேர்தல் வாக்குகள் பெரும்பான்மை பெற்ற வேட்பாளருக்கு சென்று விடும். இந்த நடைமுறையை 48 மாநிலங்கள் பின்பற்றுகின்றன.

ஆனால், மேய்ன், நெப்ராஸ்கா ஆகிய இரு மாநிலங்களில் அதிபர் வேட்பாளர்கள் பெறும் வாக்குகளின் விழுக்காடு அடிப்படையில் தேர்தல் வாக்குகள் ஒதுக்கப்படுகின்றன.

கலிபோர்னியா மாநிலம் ஓர் உதாரணத்திற்கு…

உதாரணத்திற்கு, நாம் மேலே குறிப்பிட்டபடி கலிபோர்னியா மாநிலத்திற்கு 54 தேர்தல் வாக்குகள் உள்ளன. அமெரிக்க மாநிலங்களிலேயே இந்த மாநிலத்திற்குத்தான் அதிகமான தேர்தல் வாக்குகள் – அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் என்பதால்!

கலிபோர்னியா மாநிலத்தில் டிரம்புக்கு 51 சதவீத வாக்குகள் கிடைத்து, 49 சதவீத வாக்குகள் கமலா ஹாரிசுக்குக் கிடைத்தால்,  அந்த மாநிலத்தின் 54 தேர்தல் வாக்குகளும் மொத்தமாக டிரம்புக்கு சென்று விடும். விகிதாச்சாரப்படி பிரிக்கப்படாது.

எனவே, ஒரு மாநிலத்தில் வெல்லும் ஒரு வேட்பாளர் மற்றொரு மாநிலத்தில் தோல்வியடையக் கூடும். இந்த அடிப்படையில் ஒரு வேட்பாளர் பத்து சிறிய மாநிலங்களில் வெற்றி பெற்றாலும் அவரை எதிர்த்து நிற்கும் வேட்பாளர் அதிக வாக்குகள் கொண்ட ஒரு மாநிலத்தைக் கைப்பற்றுவதன் மூலம் வெற்றி வாய்ப்பில் முந்திக் கொள்ள முடியும்.

அதனால்தான், பொதுவாக அதிபர் வேட்பாளர்கள் கலிபோர்னியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட – அதிக தேர்தல் வாக்குகள் கொண்ட – மாநிலத்தைக் குறிவைத்துப் பிரச்சாரங்கள் செய்வார்கள்.

இப்படியாக மாநில வாரியாக மொத்தம் 270-க்கும் கூடுதலான தேர்தல் வாக்குகள் பெறும் வேட்பாளரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். அதாவது மொத்தமுள்ள 538 தேர்தல் வாக்குகளில் பாதிக்கும் மேல் பெரும்பான்மை பெறுபவரே அதிபராக அங்கீகரிக்கப்படுவார்.

இத்தகைய வாக்கு எண்ணிக்கை நடைமுறைகளால் இறுதி முடிவு இழுபறியாவது பல தேர்தல்களில் நடந்துள்ளது. இறுதி முடிவு தெரிய வாக்களித்த நாளிலிருந்து சில நாட்களாகலாம்.

அமெரிக்க நாடாளுமன்ற அமைப்பு முறை

அமெரிக்க நாடாளுமன்றம்

அமெரிக்க நாடாளுமன்ற அமைப்பு முறையைப் பற்றி சற்று தெரிந்து கொள்வதும் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைமுறைகளைப் புரிந்து கொள்ள நமக்கு உதவும்.

ஒரு மாநிலத்தில் எத்தனை தேர்தல் வாக்குகள் இருக்கின்றனவோ, அதே எண்ணிக்கையில் அமெரிக்க மக்களவைக்கான இடங்களும் (காங்கிரஸ்) ஒதுக்கப்படுகின்றன. உதாரணமாக, கலிபோர்னியா மாநிலத்திற்கு 54 தேர்தல் வாக்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதால், அமெரிக்க நாடாளுமன்ற காங்கிரஸ் அவைக்கு கலிபோர்னியா மாநிலம் 52 காங்கிரஸ் பிரதிநிதிகளையும் செனட் சபைக்கு 2 செனட்டர்களையும் – மொத்தம் 54 பிரதிநிதிகளை – அனுப்பும்.

அமெரிக்காவின் நாடாளுமன்ற மேலவை, செனட் அவை என அழைக்கப்படுகின்றது. ஒவ்வொரு மாநிலமும் இரண்டு செனட்டர்களை தேர்வு செய்யும். அந்த வகையில் அமெரிக்க செனட் அவையில் 100 செனட்டர்கள் இருப்பார்கள். காங்கிரஸ் என அழைக்கப்படும் நாடாளுமன்றம் – மேலவையான செனட் அவை இரண்டின் உறுப்பினர்கள் கூட்டவோ குறைக்கப்படவோ மாட்டார்கள். ஒருமுறை மக்கள் தொகை நிர்ணயிக்கப்பட்டு, ஒரு மாநிலத்திற்கு இத்தனை தேர்தல் வாக்குகள் என எண்ணிக்கை முடிவு செய்யப்பட்டால் அந்த எண்ணிக்கை அடுத்தடுத்து 3 தேர்தல்களில் பின்பற்றப்படும்.

உதாரணத்திற்கு கடந்த 2020 அதிபர் தேர்தலிலும் அதற்கு முந்தைய 2 தேர்தல்களிலும் கலிபோர்னியா மாநிலம் 55 தேர்தல் வாக்குகளைக் கொண்டிருந்தது. ஆனால் இந்த முறை 54 வாக்குகளை மட்டுமே கொண்டிருக்கிறது.

மக்கள் தொகைக்கு ஏற்ப மாநிலங்களின் பிரதிநிதித்துவம் மாற்றம் காணும் என்பதற்கான உதாரணம் கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை குறைப்பு.

அதிபர் தேர்தலில் வாக்களிப்பது கட்டாயமா?

டிரம்புக்கு 70 மில்லியன் டாலர் நன்கொடை வழங்கிய எலோன் மஸ்க்

அதிபர் தேர்தலில் வாக்களிப்பது கட்டாயமில்லை. 18 வயதுக்கும் மேற்பட்டவர்கள் வாக்களிக்க தகுதி கொண்டவர்கள். ஆனால் வாக்காளர்களாக முறைப்படி பதிவு செய்ய வேண்டும்.

அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையான 345 மில்லியனில், 161.42 மில்லியன் வாக்காளர்கள் மட்டுமே தங்களை வாக்காளர்களாகப் பதிவு செய்துள்ளனர்.

வாக்களிக்கும் தேதி நவம்பர் 5 என்றாலும், அந்த தேதிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே வாக்காளர்கள் சென்று தங்களின் வசதிக்கேற்ப வாக்களிக்கலாம்.

தேர்தலை நடத்துவது அமெரிக்க தேர்தல் ஆணையம். இதுவரை அதிபர் தேர்தலில் தோற்ற எந்த அதிபரும், தேர்தல் ஆணையம் தேர்தலை முறையாக நடத்தவில்லை என புகார் கூறியதில்லை. அந்தளவுக்கு நேர்மை, நியாயம், பாரபட்சமற்ற அணுகுமுறை கடைப்பிடிக்கப்படுகின்றது. ஆனால் கடந்த முறை ஜோ பைடனுடனான போட்டியில் டொனால்ட் டிரம்ப் தேர்தல் முடிவுகளை டிரம்ப் ஏற்றுக் கொள்ளாமல் சர்ச்சை செய்தது இன்னும் விவாதப் பொருளாகத் தொடர்கிறது. நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்குகளும் நிலுவையில் இருக்கின்றன.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் – கமலா இருவர் மட்டும்தான் வேட்பாளர்கள் என பலர் நினைக்கக் கூடும். ஆனால், ஒவ்வொரு தேர்தலிலும் மற்ற கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் என பலர் போட்டியிடுவார்கள். ஆனால், அவர்களின் பெயர்கள் என்ன என்பது கூட பத்திரிக்கைகளில் வெளிவராது என்பதுதான் அமெரிக்க அரசியலின் சோகம். வாக்குச் சீட்டில் மட்டும்தான் மற்ற வேட்பாளர்களின் பெயர்கள் இருக்கும்.

அமெரிக்க  அதிபர் பதவிக்குப் போட்டியிடுபவர் அமெரிக்கக் குடியுரிமை  பெற்று குறைந்தது 35 வயது கொண்டவராக இருக்க வேண்டும். அமெரிக்காவில் குறைந்தது 14 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும்.

வேட்பாளராகப் போட்டியிடுபவர் 5 ஆயிரம் டாலருக்கு அதிகமாக செலவு செய்வதாக இருந்தால் மத்திய தேர்தல் ஆணையத்திடம் தனது பெயரைப் பதிந்து கொள்ளவேண்டும்.

வேட்பாளர்கள் பகிரங்கமாக பொதுமக்களிடம் இருந்தும் நிறுவனங்களிடம் இருந்தும் நன்கொடைகள் பெறலாம். ஆனால், முறையாகக் கணக்கு காட்ட வேண்டும்.

200 ஆண்டுகால ஜனநாயக வரலாற்றைக் கொண்ட அமெரிக்காவில் இரண்டு கட்சிகளைத் தாண்டி வேறு கட்சிகள் தலையெடுக்கவே இல்லை என்பது ஓர் அதிசயம்தான். காங்கிரஸ் – செனட் அவைகளிலும் கூட இந்த இரு கட்சிகளைத் தவிர வேறு கட்சியினர் வென்று இடம் பெற முடியவில்லை என்பதும் அமெரிக்க ஜனநாயகத்தின் இன்னொரு ஆச்சரியம்.

-இரா.முத்தரசன்