Home Photo News அமெரிக்க அதிபர் தேர்தல் சுவாரசியங்கள் -2; தொலைக்காட்சி விவாதங்கள் ஓர் அங்கமாக மாறியது எப்படி?

அமெரிக்க அதிபர் தேர்தல் சுவாரசியங்கள் -2; தொலைக்காட்சி விவாதங்கள் ஓர் அங்கமாக மாறியது எப்படி?

235
0
SHARE
Ad
செப்டம்பர் 10-ஆம் தேதி தொலைக் காட்சி விவாதத்தில் மோதிக் கொண்ட டிரம்ப் – கமலா ஹாரிஸ்

(அமெரிக்க அதிபர் தேர்தலில் தவிர்க்க முடியாத ஓர் அங்கம் தொலைக்காட்சி விவாதங்கள். மற்ற நாடுகளில் அவ்வளவாகப் பின்பற்றப்படாத இந்த வழக்கம்
அமெரிக்காவில் எவ்வாறு தொடங்கியது – இன்றும் ஏன் தொடர்கிறது – என்ற சுவாரசியங்களை வரலாற்று பூர்வக் காரணங்களோடு விளக்குகிறார் இரா.முத்தரசன்)

  • நேரடி விவாதங்களைத் தொடக்கி வைத்த ஆபிரகாம் லிங்கன்!
  • வானொலி விவாதங்கள் முதலில் தொடங்கின!
  • அதிபர் வேட்பாளர்களின் நேரடி தொலைக்காட்சி விவாதங்கள் எப்போது தொடங்கின?
  • முதல் தொலைக்காட்சி நேரடி விவாதம் எப்போது, எந்த வேட்பாளர்களுக்கிடையில் நடத்தப்பட்டது?
  • தொலைக்காட்சி விவாத வரலாற்றில் 2 அதிபர் வேட்பாளர்களுடன் மோதிய டிரம்ப்!

அமெரிக்க அதிபர் தேர்தலின் இன்னொரு சுவாரசியம் வேட்பாளர்கள் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் நேருக்கு நேர் மோதிக் கொள்வது.

மற்ற நாடுகளிலோ, தேர்தலில் வேட்பாளர்களாகப் போட்டியிடும் தலைவர்கள் ஒருவருக்கொருவர் பல முனைகளில் சவால் விட்டுக் கொள்வார்கள். ஆனால், நேருக்கு நேர் தொலைக்காட்சி விவாதத்தில் இறுதிவரை கலந்து கொள்ள மாட்டார்கள். தவிர்த்து விடுவார்கள்.

அமெரிக்காவிலோ அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுபவர் குறைந்தது 2 முறை தொலைக்காட்சி விவாதத்தில் தனது போட்டியாளருடன் நேரடியாகப் பங்கு கொள்ள வேண்டும். அதே போல துணையதிபர் வேட்பாளர்களும் மோதிக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அமெரிக்கர்கள் அவர்களைக் குறைத்து மதிப்பிட்டு விடுவார்கள். மேடையில் பேசத் தெரியாதவர், நேருக்கு நேர் கேள்விகளை எதிர்கொள்ளத் தயங்குபவர்கள் என்ற முத்திரை அவர்கள் மீது பதிந்து விடும்.

ஆபிரகாம் லிங்கன் தொடங்கி வைத்த விவாத பாரம்பரியம்

அமெரிக்க அரசியலில் நேரடி விவாதங்களைத் தொடக்கி வைத்த ஆபிரகாம் லிங்கன்
#TamilSchoolmychoice

இந்த விவாதங்கள் எப்படி தொடங்கின-தொடர்ந்தன- என்பதும் அமெரிக்க அரசியலின் இன்னொரு சுவாரசியப் பக்கம்!

1858-ஆம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட்டர் பதவிக்கான தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் ஆபிரகாம் லிங்கனும், ஜனநாயகக் கட்சி சார்பில் செனட்டர் ஸ்டீபன் ஏ.டக்ளஸ் என்பவரும் போட்டியிட்டனர். அந்தத் தேர்தல் பிரச்சாரத்தின்போது இருவரும் 7 முறை நேரடியாக விவாதம் நடத்தினர். இங்கிருந்துதான் அமெரிக்க அரசியலில் நேருக்கு நேர் விவாதங்கள் நடத்தும் பாரம்பரியம் தொடங்கியது.

1860 அதிபர் தேர்தலில் லிங்கன் குடியரசுக் கட்சி சார்பிலும் டக்ளஸ் ஜனநாயகக் கட்சி சார்பிலும் போட்டியிட்டனர்.

ஆனால் அவர்களுக்கிடையில் நேரடி விவாதங்கள் ஏனோ நடத்தப்படவில்லை.

வானொலி வழி விவாதங்கள்

அதன் பின்னர் அமெரிக்க அரசியலிலும், அதிபர் தேர்தலிலும் நேரடி விவாதங்களுக்கு சவால்கள் விடுக்கப்பட்டாலும் வேட்பாளர்கள் தயங்கி ஒத்துழைக்கவில்லை.

1948-ஆம் ஆண்டில் குடியரசுக் கட்சியின் சார்பில் யார் அதிபர் வேட்பாளராகத் தேர்ந்தெடுப்பது என்பதற்கான பிரச்சாரங்கள் நடைபெற்ற வேளையில், குடியரசுக் கட்சி வேட்பாளர்களான தோமஸ் இ.டெவி மற்றும் ஹாரோல்ட் ஸ்டாஸ்ஸன் இருவருக்கும் இடையில் வானொலி வழி விவாதம் ஒன்று நடத்தப்பட்டது.

அதன்பின்னர், வேட்பாளர்களுக்கிடையில் சவால்கள் விடுக்கப்பட்டாலும் விவாதங்கள் எதுவும் நடத்தப்படவில்லை.

தொலைக்காட்சி வருகையால் மீண்டும் விவாதங்கள்…

1960-ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் முதன் முறையாக தொலைக்காட்சி விவாதம் நடத்திய நிக்சன் – கென்னடி

தொலைக்காட்சிகள் 1950-ஆம் ஆண்டுகளில்  அமெரிக்க இல்லங்களில் பயன்பாட்டுக்கு வந்தன.  நாளடைவில் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, நேரலை ஒளிபரப்பு நிகழ்ச்சிகளும் சாத்தியமாகத் தொடங்கின.

1960-ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜான் எஃப் கென்னடியும், குடியரசுக் கட்சியின் வேட்பாளர் ரிச்சர்ட் நிக்சனும் முதன் முறையாக நேரலையாக ஒளிபரப்பான தொலைக் காட்சி விவாதத்தில் ஈடுபட்டனர். 4 முறை அவர்கள் இருவரும் தொலைக்காட்சியில் தோன்றி விவாதங்களில் ஈடுபட்டனர். அந்த விவாதங்களில் கென்னடி காட்டிய துடிப்பு, அறிவாற்றல், தோற்றம், கேள்விகளை எதிர்கொண்டு பதிலளித்த விதம் ஆகியவை காரணமாகவே அவர் அதிபராக வெற்றி பெற்றார் என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.

அதற்குப் பின்னர் அடுத்து வந்த அதிபர் தேர்தல்களில் யாரும் தொலைக்காட்சி நேரடி விவாதங்களில் ஆர்வம் காட்டவில்லை. 1976 வரை நடைபெற்ற அதிபர் தேர்தல்களில் தொலைக்காட்சி விவாதங்கள் நடத்தப்படவில்லை என்பது இன்னொரு ஆச்சரியம்.

1976 அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜிம்மி கார்ட்டரும், குடியரசுக் கட்சியின் ஜெரால்ட் போர்ட்டும் மீண்டும் நேரடி தொலைக்காட்சி விவாதத்தில் ஈடுபட்டனர்.

அதன் பின்னர் தொலைக்காட்சி விவாதம் என்பது அதிபர் தேர்தலின் தவிர்க்க முடியாத ஓர் அங்கமாகிவிட்டது. ஒவ்வொரு அதிபர் தேர்தலிலும் பிரபல தொலைக்காட்சி நிறுவனங்கள் இந்த விவாதங்களை நடத்தின.

2024 தொலைக்காட்சி விவாதங்கள்

இந்த முறை, ஜனநாயகக் கட்சி சார்பில் இரண்டு அதிபர் வேட்பாளர்களுடன் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மோதும் அதிசயமும் நிகழ்ந்தது.

ஜூன் மாதத்தில் ஜனநாகக் கட்சியின் வேட்பாளராக இருந்த ஜோ பைடன் – டிரம்ப் இடையிலான தொலைக்காட்சி விவாதம் நடைபெற்றது. அதற்குப் பின்னர் பைடன் போட்டியிலிருந்து விலகிக் கொள்ள, அவருக்குப் பதிலாகப் போட்டியிட்ட கமலா ஹாரிஸ்- டிரம்ப் இடையிலான தொலைக்காட்சி விவாதம் செப்டம்பர் 10-ஆம் தேதி நடைபெற்றது.

அந்த விவாதத்தில் கமலா ஹாரிஸ் சிறப்பாக செயல்பட்டார், டிரம்பை விட விவாதங்களின் மூலம் அதிகம் மக்களை ஈர்த்தார் எனக் கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. டிரம்ப் ஏனோ முகத்தை ‘உம்’மென்று வைத்துக் கொண்டிருந்தார். கடுகடுப்பாக பல கேள்விகளுக்குப் பதிலளித்தார். கமலாவோ, புன்னகை, சிரிப்பு, ஆச்சரியம், நிதானம், உறுதியான நிலைப்பாடு, தெளிவான அரசியல் வாதங்கள், மிடுக்கான தோற்றம், உலக அரசியல் விவகாரங்களில் தெளிவான கண்ணோட்டம் – என பல்முனை அம்சங்களில் தொலைக்காட்சி ரசிகர்களைக் கவர்ந்தார். ஒரு பெண்மணி, அதிபர் தேர்தலில் போட்டியிடுவது இதுதான் முதன் முறை என்பதால், தொலைக்காட்சி விவாதத்தில் பங்கு பெறும் முதல் பெண் அதிபர் வேட்பாளர் என்ற பெருமையையும் கமலா ஹாரிஸ் பெறுகிறார்.

இனி இதுபோன்ற தொலைக்காட்சி விவாதங்களில் பங்குபெறப் போவதில்லை என டிரம்பும் அறிவித்து விட்டார். இரண்டு விவாதங்களில் பங்கு பெற்று விட்டேன் (பைடன், கமலா) – இது போன்ற விவாதங்களால் பயனில்லை – என்பது டிரம்பின் வாதம்.

ஆனால், டிரம்புடன் இன்னொரு தொலைக்காட்சி விவாதத்திற்கு நான் தயார் என அறிவித்திருக்கிறார் கமலா. நடக்குமா என்பதைப் பார்ப்போம்!

துணையதிபர் வேட்பாளர்களுக்கிடையிலான தொலைக்காட்சி விவாதமும் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறாக, அமெரிக்க அதிபர் தேர்தல் என்பதும் அதிபர், துணையதிபர்  வேட்பாளர்களுக்கிடையிலான தொலைக் காட்சி நேரலை விவாதங்களும், பிரிக்க முடியாத இரட்டை அம்சங்களாக இந்தத் தேர்தலிலும் தொடர்கின்றன.

-இரா.முத்தரசன்