Home நாடு ‘இந்திய சமூகத்தின் பொருளாதாரத்தை அரசு புறக்கணிக்கிறதா?” மறுக்கிறார் ரமணன்!

‘இந்திய சமூகத்தின் பொருளாதாரத்தை அரசு புறக்கணிக்கிறதா?” மறுக்கிறார் ரமணன்!

243
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இந்திய சமூகத்தின் பொருளாதாரத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் மதானி அரசாங்கம் புறக்கணிப்பதாகக் குற்றம் சாட்டுபவர்களை “பைத்தியக்காரர்கள்” என்று விமர்சித்த தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத் துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் அந்தக்  கூற்றை வன்மையாக மறுத்துள்ளார்.

இந்திய சமூகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த அரசாங்கம் பல்வேறு வகையான உதவிகளை அறிமுகப்படுத்தியதாகவும், 10,000க்கும் மேற்பட்டோர் அவற்றைப் பெற்று பயனடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

அவ்வாறு வழங்கப்பட்ட முயற்சிகளில் ஸ்கிம் பெம்பியாயன் பெமெர்காசான் (ஸ்புமி) கோஸ் பிக், பிராஸ்பெரிட்டி எம்பவர்மென்ட் அண்ட் அ நியூ நார்மல் (பென்), பாங்க் ரக்யாத் இந்தியன் எண்டர்பிரினியர் ஃபைனான்சிங்-ஐ (பிரீஃப்-ஐ) மற்றும் பிசினஸ் அக்செலரேட்டர் ப்ரோகிராம் ஃபார் இந்தியன் ஸ்மால் பிசினஸ் (ஐ-பிஏபி) ஆகியவை அடங்கும்.

#TamilSchoolmychoice

“இந்திய சமூகத்திற்கு உதவும் பல்வேறு திட்டங்களுக்கு மிகவும் ஊக்கமளிக்கும் வரவேற்பு கிடைத்துள்ளது. இருப்பினும், அரசாங்கம் இந்திய சமூகத்திற்கு உதவி செய்யவில்லை என்று கூறும் தனிநபர்களும் குழுக்களும் இன்னும் உள்ளனர்; இந்திய சமூகத்திற்கான உதவி எங்கே என்று அவர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்புகின்றனர். நிறைய உதவிகள் வழங்கப்பட்டிருந்தாலும், பிரதமர் இந்திய சமூகத்தைப் பற்றி கவலைப்படவில்லை என்று கூறும் இரண்டு அல்லது மூன்று ‘பைத்தியக்காரர்கள்’ உள்ளனர்” என ரமணன் சாடினார்.

“நீங்கள் விமர்சிக்க விரும்பினால், பொய்யான குற்றச்சாட்டுகளை உருவாக்காமல், அறிவுபூர்வமாக அப்படிச் செய்யுங்கள்,” என்றும் அவர் அறிவுறுத்தினார்.

மைக்கி மலேசிய இந்திய வர்த்தக, தொழிலியல் சங்கங்களின் சம்மேளனத்தின் (MAICCI) 2024-ஆம் ஆண்டுக்கான, 73-வது வருடாந்திர பேராளர்கள் மாநாட்டை  கோலாலம்பூரில் கடந்த சனிக்கிழமை செப்டம்பர் 28-ஆம் தேதி திறந்து வைத்த பின்னர் ரமணன் பேசினார்.

இந்திய சமூகத்தின் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்த, இந்திய தொழில் முனைவோரை மேம்படுத்துதல் என்ற புதிய திட்டத்தை தனது அமைச்சகம் அறிமுகப்படுத்தும் என்றும் அவர் மேலும் கூறினார்.

இந்த முயற்சியை செயல்படுத்துவதில் மைக்கி அமைச்சகத்தின் வியூகத்துவ ஒத்துழைப்பு  அமைப்பாக செயல்படும் என்றும், இது வணிகம், தொழில்முனைவு மற்றும் ஏஐ என்னும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு ஆகிய துறைகளில் பங்கேற்பாளர்களுக்கு பயிற்சி அளிப்பதில் கவனம் செலுத்தும் என்றும் அவர் கூறினார்.